ஊட்டியில் கன மழை-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உள்பட 13 பேர் பலி

குமரிப் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தற்போது அரபிக் கடலுக்குப் போய் விட்டது.
இருப்பினும் அதன் தாக்கம் தமிழகத்தின் மீது பரவியுள்ளதால், தமிழகம் மற்றும் புதுவையில் இன்றும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், தேனி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
ஊட்டியில் 13 பேர் பலி..
ஊட்டியில் வீடு இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியானார்கள். மந்தடா பகுதியில் அந்த வீடு உள்ளது. கன மழையில் வீடு இடிந்ததில் அதில் இருந்த ஐவர் உயிரிழந்தனர்.
குன்னூர், மண்டு, ரோஸ் மவுன்ட், தலையாட்டி ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.
கோத்தகிரியில் கடும் குளிரைத் தாங்க முடியாமல் இருவரும், குன்னூரில் ஒருவரும் உயிரிழந்தனர்.
ஊட்டியில் பேய் மழை பெய்து வருகிறது. நேற்று மட்டும் அங்கு 1556 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் அங்கு 3416 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
கன மழையும், கடும் குளிரும் நிலவுவதால் ஊட்டி மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
39க்கும் மேற்பட்டோர் பலி...
மழைக்கு இதுவரை 39க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊட்டி பலி தவிர, திருநெல்வேலி , விழுப்புரத்தில் தலா ஆறு பேரும், கோவை, தூத்துக்குடி , ராமநாதபுரத்தில் தலா இருவரும், மதுரை, திருச்சி, பெரம்பலூர், விருதுநகரில் தலா ஒருவரும் பலியாகியுள்ளனர்.
சென்னை பள்ளிக்கரணை அடுத்த நன்மங்கலத்தில் இஸ்திரி போடும் தொழிலாளி கண்ணன் மழைக்கு குடை பிடித்து சென்றார். அப்போது மின்சார கம்பியில் குடைகம்பி உரசியதால் மின்சாரம் தாக்கி பலியானார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் கிருஷ்ணாபுரம் பகுதியில், ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளி ஷாலி முகமது (50) பரிதாபமாக இறந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை கிராமத்தை சேர்ந்த ஆஞ்சன்மேரி (45) என்ற பெண்ணும், ஒட்டன் சத்திரம் பகுதியில் விக்கனம்மாள் (65) என்ற பெண்ணும் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்த தால் நசுங்கி பலியானார்கள்.
திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (58), கோவிந்தசாமி (50) ஆகிய 2 பேரும் சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பியை எடுத்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது மின்சாரம் தாக்கி பலியானார்கள்.
உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்:
இந் நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications