விடிய விடிய கன மழை-நிரம்பும் வைகை அணை
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணைப் பகுதியில் விடிய விடிய கன மழை பெய்ததால் அணை ஒரே நாளில் 6 அடி நீர் அதிகரித்தது.
வைகை அணை மூலம், தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஒரு வாரமாக வைகை அணை பகுதியில் கனமழை நீடித்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று விடிய, விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் கொட்டக்குடி ஆறு மூலம் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த தண்ணீர் முழுவதும் வைகை அணைக்கு வந்து சேர்ந்தது.
இதனால் வைகை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்தது. அணையின் கொள்ளளவு 71 அடி ஆகும். இன்று காலை 6 மணி நிலவரப்படி 65.25 அடியை தொட்டு உள்ளது.
அணையில் 66 அடியை தண்ணீர் தொட்டதும் முதல் வெள்ள அபாய எச்சரிக்கையும், 68.5 அடி ஆனதும் 2-வது வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடி வந்தால் 3-வது வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்படும்.
அணைக்கு 16 ஆயிரத்து 95 கன அடி நீர் வருகிறது. 1845 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இன்று மதியத்துக்குள் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே வைகை கரை ஓர மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பெரியாறு...
பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.90 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 11 ஆயிரத்து 788 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1088 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு தண்ணீர்வரத்து அதிகம் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications