Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெள்ளம்: மக்கள் நாதியற்று நிற்கிறார்கள்-ஜெ

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: மழை வெள்ளம் உள்ளி்ட்ட இயற்கை சீற்றத்தால் மக்கள் பாதிக்கப்படும் போது, உடனுக்குடன் மக்களின் துயர்களை களைவதில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கியது. ஆனால், இன்று தமிழக மக்கள் நாதியற்று நிற்கிறார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படுவதாக பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றனவே தவிர, போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளையும், மீட்புப் பணிகளையும் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை திமுக அரசு எடுப்பதாக தெரியவில்லை.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தேனி மாவட்டம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆண்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட முருக்கோடை, வருஷநாடு, மயிலாடும்பாறை போன்ற பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதோடு மட்டுமல்லாமல் வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது.

வண்டியூர், ராயர்கோட்டை, தண்டியகுளம் உட்பட பல கிராமங்கள் மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டு உள்ளன. வைகை ஆற்றை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்ததால் வாழை, தென்னை, எலுமிச்சை உள்ளிட்ட பல பயிர்கள் நாசமடைந்துள்ளன.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள் சரியாக தூர்வாரப்படாததன் காரணமாக, கிளை ஆறுகளான கூழையாறு, வளவனாறு போன்ற ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டு, 2.5 லட்சம் ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாகவும், திருத்துறைப்பூண்டி, நெடும்பள்ளம், தொண்டியக்காடு, கோட்டகம், கள்ளுக்குடி, உதய மார்த்தாண்டபுரம் உள்ளிட்ட பல கிராமங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதாகவும்,

இதே போன்று, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம் உட்பட பல மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதோடு மட்டுமல்லாமல், பயிர்கள் அழுகும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் உயிர்நாடியான காண்டூர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் திருமூர்த்தி அணைக்கு வரும் நீர்வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல முடியாமல் வருமானம் இன்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பல இடங்களில் சாலைகள் பழுதடைந்து போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம், காட்டு மன்னார்கோயில் தாலுக்காக்களை சேர்ந்த பல கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

பெருவெள்ளம் ஏற்படும் போது, பக்கிங்காம் கால்வாய் நிரம்பி வழிவதால், கொட்டிவாக்கம், நீலாங்கரை, பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம், சோளிங்கநல்லூர், காரப்பாக்கம் ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன.

இதே போன்று பள்ளிக்கரனை, வேளச் சேரி, மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், பெருங்குடி போன்ற பகுதிகளும் நீரில் மூழ்கிவிடுகின்றன.

இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், மழைக்காலங்களில் பக்கிங்காம் கால்வாயிலிருந்து வெளியேறும் நீர் மேற்படி பகுதிகளுக்குச் செல்லாமல், அதை ஒட்டியுள்ள ஒக்கியம் மடுவு வழியாக நேரடியாக கடலுக்கு எடுத்துச்செல்லும் வகையில் மூன்று கால்வாய்களை முறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்யுமாறு 2005ம் ஆண்டு இறுதியில் பொதுப் பணித்துறைக்கு நான் உத்தரவிட்டேன்.

பின்னர், உடனடியாக பொதுத் தேர்தல் வந்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அந்தப்பணிகள் முடிக்கப்படவில்லை. பின்னர் வந்த திமுக அரசு என்னுடைய உத்தரவை செயல்படுத்த நடவடிக்கை எடுத்திருக்குமேயானால், மேற்படி பகுதிகள் தற்போது நீரில் மூழ்கியிருக்காது.

2005ம் ஆண்டு பெருவெள்ளம் ஏற்பட்டபோது அனைத்து இடங்களுக்கும் நான் நேரில் சென்று பார்வையிட்டு, மக்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கி, மீட்புப் பணிகளையும் உடனுக்குடன் செய்ய உத்தரவிட்டேன். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் தங்கி நிவாரணப் பணிகளை கண்காணித்தனர்.

இயற்கை சீற்றத்தால் தமிழக மக்கள் பாதிக்கப்படும் போது, உடனுக்குடன் மக்களின் துயர்களை களைவதில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கியது. ஆனால், இன்று தமிழக மக்கள் நாதியற்று நிற்கிறார்கள்.

எனது ஆட்சிக் காலத்தில், 2005ம் ஆண்டு பெருவெள்ளம் ஏற்பட்ட போது, அனைவருக்கும் தலா ரூ. 2000 உட்பட வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது. அது மட்டுமல்லாமல், நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்களுக்கு இழப்பீடாக ஒரு ஏக்கருக்கு 3000 ரூபாயும், தென்னைக்கு ஏக்கர் ஒன்றுக்கு 4,800 ரூபாயும் வழங்கப்பட்டது.

தற்போது, விலைவாசி மூன்று மடங்கிற்கு மேல் உயர்ந்துள்ள சூழ்நிலையில், பயிருக்கான இழப்பீட்டுத்தொகையையும், வெள்ள நிவாரணத் தொகையையும் மூன்று மடங்கு உயர்த்தி வழங்கவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்கவும்,

துண்டிக்கப்பட்ட மற்றும் பழுதுபட்ட சாலைகளை செப்பனிடவும், தண்ணீர் வடிந்த பகுதிகளில் மின்சாரம் வழங்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதியை பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+