Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருணாநிதியின் 'மெளனத்தின் குதூகலம்'-வைகோ

Subscribe to Oneindia Tamil

Vaiko
சென்னை: மாத்தையாவின் துரோகத்தைவிட, கருணாவின் துரோகத்தைவிட, ராஜபக்சேயின் கொலை பாதகத்தைவிட, அவர்களுக்காக வக்காலத்து வாங்குகின்ற முதல்வர் கருணாநிதி செய்யும் துரோகம் மிகக் கொடுமையானது. இதனால் தமிழினம் அவரை ஒருபோதும் மன்னிக்காது என்று வைகோ கூறியுள்ளார்.

அரசியல் கண்ணோட்டம் இல்லாமல், அவசரப்பட்டு பிரபாகரன் எடுத்த முடிவுகளால் ஏற்பட்டுள்ளதே இலங்கையில் இன்றைய விளைவுகள் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை.

இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான்.

அந்த சிங்களவன் படைபலத்தைப் பெருக்க, ஆயுதங்கள், ரேடார்களைக் கொடுத்து, விமானங்களில் இருந்து குண்டுகளை வீசுவதற்காக பலாலி விமானதளத்தைப் புதுப்பித்துக் கொடுத்தது இந்திய அரசு. ராணுவத் திட்டங்களை வகுப்பதற்கு இந்தியத் தளபதிகளை அனுப்பி உதவியது இந்திய அரசு.

புலிகளின் 14 கப்பல்களை மூழ்கடித்தது இந்தியா:

இந்திய-இலங்கைக் கடற்படைத் தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்களைச் செய்து, துப்புக் கொடுத்து, விடுதலைப் புலிகளுக்காக வந்த 14 கப்பல்களைக் கடலில் மூழ்கடித்தது இந்தியா. உலகம் தடை செய்த ஆயுதங்களை சிங்களவனுக்கு வழங்கியதும் இந்திய அரசு.

சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல், ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளிடம் சிங்களவன் ஆயுதங்களை வாங்குவதற்கு, ஆயிரம் கோடி வட்டி இல்லாக் கடன் உதவி அளித்தனர். இவ்வளவும், 2004ம் ஆண்டுக்குப் பின்னர், கடந்த ஐந்து ஆண்டுகளாகவே நடைபெற்று வந்தது.

இத்தனை உதவிகளோடும், ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்தான் ராஜபக்சே. இன்றைக்கு மூன்று லட்சம் தமிழர்கள், முள்வேலி முகாம்களில் அடைபட்டதற்குக் காரணம் இந்திய அரசு.

ஐந்து ஆண்டுகளாக இந்த நடவடிக்கைகளுக்கெல்லாம் உடந்தையாக இருந்தவர் முதல்வர் கருணாநிதி. அவர், கோடானுகோடித் தமிழ் நெஞ்சங்கள் இதயத்தில் வைத்து வணங்குகின்ற, போற்றுகின்ற பிரபாகரனை கொச்சைப்படுத்தி, கொடும் பழி சுமத்தி, ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

துரோகிக்குப் பெயர்தான் மாவீரனா...?:

பிரபாகரன் செய்த தவறுகளால்தான் தமிழர்களுக்குத் துன்பம் நேர்ந்தது என்று எழுதுகிற கருணாநிதிக்கு, மனச்சாட்சியே கிடையாது. இவருடைய அகராதியில், துரோகிக்குப் பெயர்தான் மாவீரன். இனம், இனத்தோடுதான் சேரும். ஆம்; துரோகம் செய்த மாத்தையாதான், இவருக்கு மாவீரனாகக் காட்சி அளிக்கிறார்.

பிரபாகரனைக் கொல்ல வேண்டும் என்று இந்தியாவின் உளவு நிறுவனம், ரா (RAW) திட்டம் வகுத்துக் கொடுத்து, துரோகி கிருபனை, சிறையில் இருந்து நீதிமன்றத்துக்குப் போகின்ற வழியில் தப்பித்துச் செல்ல ஏற்பாடு செய்தது. அவன் தப்பித்தான் என்று ஒரு பொய்யான கதையை ஜோடித்துவிட்டு, பிரபாகரனைக் கொல்ல அனுப்பி வைத்தார்கள். இவர்கள் எப்படித் தப்பித்து வந்தார்கள் என்பதில் ஐயம் ஏற்பட்டதால், பொட்டு அம்மான் துருவித்துருவி விசாரித்ததால்தான், மாத்தையா, கிருபன் ஆகியோர் வகுத்த சதித் திட்டம் அம்பலமானது.

ஒன்று, அதிரடிப்படையின் ஆயுதங்களோடு தாக்கிக் கொல்வது முதல் திட்டம். அல்லது, அவர் படுத்து உறங்குகின்ற அறையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வைத்து, ரிமோட் மூலம் இயக்கிக் கொல்வது இரண்டாவது திட்டம். அல்லது, அவருக்கு அருகில் இருந்து பேசும்போது, துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுவது என மூன்று வழிகளில் திட்டம் வகுத்து இருந்தார்கள்.

பிரபாகரனை காத்த பொட்டு:

இதைக் கண்டுபிடித்த பொட்டு அம்மான் பிரபாகரனைப் பார்க்க ஓடினார். அப்போது அவர் அருகில் கிருபன் இருந்தான். அவனிடம் துப்பாக்கி இருந்தது. பாய்ந்து சென்ற பொட்டு அம்மான், கிருபனைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தார். சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. புலிப் படையினர் நடத்திய விசாரணையின்போது, பிரபாகரனைக் கொலை செய்ய சதித் திட்டம் வகுத்ததை மாத்தையா ஒப்புக்கொண்டார். மாத்தையா அளித்த ஒப்புதல் வாக்குமூலம், ஒளிப் படமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, உலகின் எந்தப் புரட்சி இயக்கங்களிலும் துரோகத்துக்கு வழங்கப்படுகின்ற தண்டனைதான் மாத்தையாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால், மாவீரன் மாத்தையாவுக்கு மரண தண்டனை கொடுத்து விட்டார்கள் என்று முதல்வர் கருணாநிதி வருந்துகிறார்.

கருணாவே நேசிக்கும் கருணாநிதி:

அது மட்டும் அல்ல, 'பிரபாகரன் படை அணிகளும், கருணாவின் படை அணிகளும் மோதின" என்று குறிப்பிட்டு உள்ளார். இதில் இருந்தே, துரோகி கருணாவை இவர் மனதுக்குள் எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பது வெளிப்பட்டு விட்டது.

மாத்தையா, கருணா போன்ற துரோகிகளுக்கெல்லாம் பாராட்டுப் பத்திரம் வாசித்து, 'பிரபாகரன் செய்த தவறுகளால்தான் தமிழர்களுக்குக் கேடு நேர்ந்தது" என்கிறார்.

இந்திய அரசு இத்தனைத் துரோகங்களைச் செய்ததே, எந்தவொரு கட்டத்திலாவது, இலங்கைக்கு ஆயுதம் கொடுக்காதீர்கள் என்று கருணாநிதி ஒப்புக்கு ஒரு கடிதம் எழுதியது உண்டா?. ரேடார் கொடுக்காதீர்கள் என்று கருணாநிதி எதிர்ப்பைப் பதிவு செய்ததாகக் காட்ட முடியுமா?. அப்படிக் காட்டினால், நான் கருணாநிதியைக் குற்றம் சாட்டுவதை விட்டுவிடுகிறேன்.

தமிழர்கள் உள்ளத்தில் எழுந்து உள்ள உணர்வுகளை நீர்த்துப் போகச் செய்வதற்காக, இன்று இவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். பிரச்சனையைத் திசைதிருப்புவதற்காக, திடீரென்று இலங்கை அகதிகள் மீது கரிசனம் காட்டுகிறார். பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்புகிறார்.

தமிழ் மண்ணில் முத்துக்குமார் எழுப்பிய உணர்ச்சியை அழிக்க வேண்டும் என்பதுதான் இவரது நோக்கம். 16 பேர் தீக்குளித்தார்களே, அவர்களுக்காக ஒரு வரி இரங்கல் எழுதியது உண்டா?. ஆனால், இன்றைக்கு ஒன்றரைப் பக்கத்துக்குக் குற்றச்சாட்டுகளை வாசிக்கிறார்.

முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தாரிடம்தான் தொலைக்காட்சிகள் இருக்கின்றன. செய்தித்தாள்கள் அவர் சொல்வதையெல்லாம் எட்டுக் காலம் போட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், தான் நினைத்ததையெல்லாம் எழுதி அறிக்கைகளாக வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+