136 அடியை எட்டியது - வீணாக கடலுக்குப் போகும் பெரியாறு அணை நீர்
கூடலூர்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டி விட்டது. இதையடுத்து அணைக்கு வரும் நீர் அப்படியே வீணாக கடலுக்குப் போய்க் கொண்டிருக்கிறது.
ஐந்து தென் மாவட்டங்களின் உயிர் நாடியான முல்லைப் பெரியாறு அணை இடுக்கி மாவட்டத்தில் உள்ளது. ஆனால் அணை தமிழக அரசுக்குச் சொந்தமானது, தமிழக அரசின் பராமரிப்பில் உள்ளது.
இந்த அணையின் மொத்த கொள்ளளவு 152 அடியாகும். ஆனால் கேரள அரசு முதலில் 142 அடி வரை மட்டுமே நீர் தேக்கி வைக்க அனுமதித்தது. பின்னர் இதை 136 அடியாக குறைத்து விட்டது.
142 வரை நீர் தேக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை கண்டுகொள்ளவில்லை கேரள அரசு.
இந்த நிலையில், தற்போது அணையின் நீர்மட்டம் 136 அடியைத் தொட்டு விட்டது. இதையடுத்து அணைக்கு வரும் நீர் கேரளப் பகுதிக்குச் சென்று அங்கிருந்து கடலுக்குப் போய் வீணாகிக் கொண்டிருக்கிறது.
கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்தது. நீர் மட்டம் 134 அடியை தாண்டியதை தொடர்ந்து முதல் வெள்ள அபாய எச்சரிக்கையும், 135 அடியை தொட்டதை தொடர்ந்து 2-வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் 136 அடியைத் தாண்டினால் அணையில் இருந்து தண்ணீர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் வல்லக்கடவு, வண்டிப்பெரியார் பகுதி ஆற்றில் சென்று அரபி கடலில் கலந்து விடும்.
கேரள மாநிலத்தில் இடுக்கி அணையில் தண்ணீர் தேக்கப்பட்டு மின்சார உற்பத்திக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது. விவசாயத்துக்கு தண்ணீர் பயன்படுத்தப்படுவதில்லை. அது வீணாக கடலுக்குத்தான் போய் வருகிறது.
பெரியாறு அணை நீர் மட்டம் நேற்று காலையில் 135.80 அடியாக காணப்பட்டது. நீர்வரத்து நேற்று 2 ஆயிரத்து 685 கன அடியாக காணப்பட்டது. அணையில் இருந்து வினாடிக்கு 1,200 கன அடி வீதம் மின் உற்பத்தி நிலையத்துக்கும் 642 கனஅடி தண்ணீர் இரைச்சல் பாலம் வழியாகவும் திறந்து விடப்படுகிறது.
மாலை 4 மணியளவில் 135.90 அடியாக இருந்த நீர்மட்டம் இரவில் 136 அடியை தாண்டியது.
கேரளத்தின் தேவையி்ல்லாத பிடிவாதம், பீதியால், இயற்கையின் கொடையான மழை நீர், வீணா கடலுக்குப் போய்க் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications