நான் கண்ணீர் சிந்த உரிமையில்லையா? கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: ஈழ விடுதலைப்போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள் நீரைப் பொழிகின்றன- அதே நேரத்தில் ராஜீவ்காந்தி, அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், முகுந்தன், சிறீ சபாரத்தினம், பத்மநாபா கொல்லப்பட்ட போது, அவர்களை இழந்த மனைவி மக்களும், உற்றார் உறவினர்களும், நண்பர்களும் கண்ணீர் பெருக்கிய போது - அவர்களோடு சேர்ந்து கண்ணீர் சிந்துவதற்கு எனக்கு உரிமை இல்லையா? என்று கேட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள கேளஅவி - பதில் பாணி அறிக்கை:

கேள்வி: நீங்கள் 18-11-2009 அன்று "நம் மவுன வலி; யாருக்கு தெரியப் போகிறது?'' என்ற தலைப்பில் எழுதிய கடிதம் பற்றி பலபேர் ஒன்றுபட்ட கருத்துக்களை தெரிவித்த போதிலும், ஒருசிலர் அதை ஏற்காமல் விமர்சனம் செய்கிறார்களே?

பதில்: ஈழ விடுதலைப்போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள் நீரைப் பொழிகின்றன- அதே நேரத்தில் இளந்தலைவர் ராஜீவ்காந்தியும், நாவலர் அமிர்தலிங்கமும், யோகேஸ்வரனும், முகுந்தனும், சிறீ சபாரத்தினமும், பத்மநாபாவும், யோதீஸ்வரனும் கொல்லப்பட்ட போது, அவர்களை இழந்த மனைவி மக்களும், உற்றார் உறவினர்களும், நண்பர்களும் கண்ணீர் பெருக்கிய போது - அவர்களோடு சேர்ந்து கண்ணீர் சிந்துவதற்கு எனக்கு உரிமை இல்லையா?

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக இருந்த தமிழ்ச் செல்வன் மறைந்தபோது 4-11-2007 தேதிய பத்திரிகைகளில் நான் ஒரு இரங்கல் கவிதை எழுதினேன். அது,

எப்போதும் சிரித்திடும் முகம் எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்! இளமை, இளமை, இதயமோ; இமயத்தின் வலிமை, வலிமை! கிழச் சிங்கம் பால சிங்கம் வழியில் பழமாய்ப் பக்குவம் பெற்ற படைத் தளபதி! உரமாய்த் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய உத்தம வாலிபன் - உயிரனையான் - உடன்பிறப்பனையான்; தமிழர் வாழும் நிலமெலாம் அவர்தம் உளமெலாம் தன்புகழ் செதுக்கிய செல்வா; எங்கு சென்றாய்?''

மடிந்த ஒருவருக்கு அனுதாபம் தெரிவித்ததைக் கூட, ஜெயலலிதாவினால் பொறுத்துக்கொள்ள முடியாமல், அவர் வெளியிட்ட அறிக்கையில் புலிகளுடன் கருணாநிதிக்கு ரகசியத் தொடர்பு இருக்கின்றது என்றும், அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தவர்தான் அவர்.

அப்படியெல்லாம் அறிக்கை விட்டவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமல், சொல்ல மனம் இல்லாமல் அல்லது துணிவு இல்லாமல் என்மீது பாய்கிறார்களே; தமிழ் இனம் தாழ்வதற்கும், வீழ்வதற்கும் இதைவிடக் காரணங்கள் இருக்க முடியுமா என்று எண்ணிப் பாருங்கள்!

கேள்வி: விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பற்றி நேரடியாக எந்த விதமான தனிப்பட்ட குற்றச்சாட்டினையும் கூறாமல், அந்த இயக்கத்தின் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களையெல்லாம் சுட்டிக்காட்டி, தெளிவில்லாமல் அவசரப்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் அல்லவா இத்தனை பாதிப்புகள் என்று வேதனையோடு எழுதியிருந்தீர்கள். அந்த கடிதத்தை அனைவரும் பாராட்டி எழுதியிருந்தார்கள். ஆனால் விரல் விட்டு எண்ணத்தக்க ஒரு சிலர் மட்டும், குறிப்பாக எதிர்க்கட்சி தலைவி ஜெயலலிதா உள்பட தாங்கள் பிரபாகரனை கடுமையாகத் தாக்கி எழுதி விட்டதைப்போல அறிக்கை விடுத்துள்ளனரே?

பதில்: பிரபாகரனைப் பற்றி அறிக்கை அல்ல, கடிதம் அல்ல, அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 16-4-2002 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் ஜெயலலிதா முன்மொழிந்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் வருமாறு:

- இலங்கை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப்பேரவை வற்புறுத்துகிறது.

- விடுதலைப்புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது.

- ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டது பற்றிய வழக்கை விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நீதிமன்றம், ராஜீவ்காந்தி கொலையில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கமும், அதன் தலைவர் பிரபாகரனும் சம்பந்தப்பட்டிருப்பதை எடுத்துரைத்து இருப்பதோடு, பிரபாகரனை அந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளி என்ற அறிவிப்பை செய்துள்ளதால் இலங்கை அரசின் அனுமதியைப் பெற்று நமது இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி பிரபாகரனை சிறை பிடித்துக்கொண்டு வரவேண்டும்.

இப்படியொரு தீர்மானத்தை பேரவையில் முன்மொழிந்து நிறைவேற்றியவர்தான் தற்போது நான் நல்லதையெண்ணி நடுநிலையுடன் எழுதியதற்கு நம் மீது பாய்கிறார். பிரபாகரனை; என்றைக்கும் ஆதரிப்பேன் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களும், அம்மையாருக்கு துணை போய் நம்மைத் தாக்கி அறிக்கை விடுகிறார்கள்.

கேள்வி: துரோகிகளுக்குப் பாராட்டுப் பத்திரம் நீங்கள் வழங்குவதாக ஒருவர் அறிக்கை விட்டிருக்கிறாரே?

பதில்: உண்மைதான் -துரோகிகள் யார் என்று தெரியாமல் அவர்களுக்கு சில காலம் பாராட்டுப் பத்திரம் வழங்கிக் கொண்டிருந்து விட்டேன்!

கேள்வி: தமிழ்நாட்டிலுள்ள இலங்கை தமிழர்கள் தங்கியுள்ள முகாம்களில் அடிப்படைத் தேவைகளை மேம்படுத்துவதற்காக அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எடுத்த முடிவிற்கிணங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு விட்டதா?

பதில்: இத்திங்கள் 2-ந் தேதியன்று தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களின் முகாம்களை மேம்படுத்துவது குறித்து ஒரு ஆய்வு கூட்டம் என்னுடைய தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும், மற்ற அமைச்சர் களையும் தமிழகத்திலே உள்ள 115 முகாம்களையும் ஆய்வு செய்து 10-11-2009-ந் தேதிக்குள் எனக்கு அறிக்கை தரவேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். அவ்வாறே அமைச்சர்கள் அனைவரும் அந்த முகாம்களைப் பார்வையிட்டு எனக்கு அறிக்கையினை அளித்தார்கள்.

அந்த அறிக்கைகள் அமைச்சரவையிலே 12-11-2009 அன்று விவாதிக்கப்பட்டு -இறுதியாக ரூ.100 கோடி அதற்காக நிதி ஒதுக்கீடு அரசின் சார்பிலே செய்யப்பட்டது. அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்டதில் இலங்கை தமிழர்கள் தங்கியுள்ள முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும் மற்றும் முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்களை உடனடியாக செயல்படுத்துவதற்கும் முதற்கட்டமாக ரூ.45 கோடி ஒப்பளிப்பு அளிக்கப்பட்டு 20-11-2009 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுவிட்டது.

இந்த நிதியிலிருந்து என்னென்ன பணிகளுக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் தெரிவிக்க விரும்புகிறேன். பழுது நீக்கம் செய்தல், புதுப்பிக்க வேண்டிய வீடுகளுக்காக ரூ.15 கோடியே 22 லட்சமும் - புதிய ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் கைப்பம்புகள் அமைத்தல், பழுது நீக்கம் செய்ய வேண்டிய ஆழ்குழாய் கிணறுகள், பழுது நீக்கம் செய்ய வேண்டிய கைப்பம்புகள், புதிய மேல்நிலைத் தொட்டிகள், பழுது நீக்கம் செய்ய வேண்டிய மேல்நிலைத் தொட்டிகள், புதிய குழாய்கள் பதித்தல் மற்றும் விரிவுபடுத்தல் ஆகியவற்றுக்காக ரூ.4 கோடியே 15 லட்சமும் -புதிய கழிவறைகள் கட்டுதல், பழுது நீக்கம் செய்ய வேண்டிய கழிவறைகள், புதிய கழிவு நீர் கால்வாய்கள் அமைத்தல், பழுது நீக்கம் செய்ய வேண்டிய கழிவு நீர் கால்வாய்கள் ஆகியவற்றுக்காக ரூ.7 கோடியே 67 லட்சமும்- முகாம்களில் உள்ள சாலைகளை பழுது நீக்கம் செய்ய ரூ.72 லட்சமும் - மின் கம்பங்கள் மற்றும் தெரு விளக்குகளுக்காக ரூ.2 கோடியே 82 லட்சமும் - வீடுகளில் உள்ள மின் கம்பிகள் பழுது நீக்கம் செய்தல் மற்றும் மின் உபகரணங்களை மாற்றுதல் ஆகியவற்றுக்காக ரூ.6 கோடியே 76 லட்சமும் என மொத்தம் ரூ.37 கோடியே 33 லட்சத்துக்கான நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது.

இதுதவிர நலத் திட்டங்களான - உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் சேர்த்தல், இலவச கலர் டி.வி.களை வழங்குதல், திருமண நிதி உதவி வழங்குதல், விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், ஊனமுற்றோர்க்கு உபகரணங்கள் வழங்குதல், ஈமக்கிரியைக்கான தொகையை உயர்த்துதல், மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்குதல் போன்றவைகளை சம்பந்தப்பட்ட துறைகள் பொறுப்பேற்று உடனடியாக நிறைவேற்றிடவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுவிட்டது.

அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மற்ற முடிவுகள் குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுவிட்டன.

ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.100 கோடியில், இதற்கான செலவுகள் போக எஞ்சியுள்ள தொகையில் தக்கதொரு கட்டிட வடிவமைப்பை ஏற்படுத்தி, தகுதியான நிலத்தைத் தேர்ந்தெடுத்த பின்னர் புதிய கான்கிரீட் வீடுகள் ஊரக வளர்ச்சித்துறை மூலம் கட்டுவதற்கு தனியாக நடவடிக்கை எடுக்கப்படவும் உள்ளது.

கேள்வி: தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் தொடர்ச்சியாக ஒரு கட்சியினர் ஏதாவது ஒரு சிறு காரணத்தைச் சொல்லியாவது - அங்கே சாலையில்லை, குடிநீர் இல்லை என்று கூறிக்கொண்டு அன்றாடம் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதைப் பற்றி?

பதில்: உண்மையிலேயே அத்தகைய குறைபாடுகள் எங்கிருந்தாலும் அதை எந்த ஒரு எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டினாலும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அதைச் சீர்படுத்துவது இந்த அரசின் கடமை. அந்த கடமையை தவறாமல் செய்து வருகிறோம் என்பதை எதிர்க்கட்சியினர் உள்பட அனைவரும் நன்கறிவார்கள்.

கேள்வி: அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வைத் தடுக்க தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து?

பதில்: விலைவாசி உயர்விலிருந்து ஏழை, எளிய நடுத்தர மக்களைக் காப்பாற்ற வேண்டுமென்ற நோக்கத்துடன், தமிழக அரசு 14-4-2007 முதல் சிறப்பு விநியோகத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தின் மூலமாக பொதுமக்களுக்கு சமையல் எண்ணை, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்ற பொருள்கள் சலுகை விலையில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பாமாயில் 6,021 கிலோ லிட்டரும், துவரம் பருப்பு 5,313 மெட்ரிக் டன்னும், உளுத்தம் பருப்பு 2,199 மெட்ரிக் டன்னும் விநியோகிக்கப்பட்டது. இந்தப் பொருள்களின் சந்தை விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளதைக் கண்டு; தமிழ்நாடு அரசு இந்த பொருள்களை அதிக அளவில் கொள்முதல் செய்து, பொது மக்களுக்கு சலுகை விலையில் வழங்கி வருகிறது.

அக்டோபர் மாதத்தில் பாமாயில் 12,362 கிலோ லிட்டரும், துவரம் பருப்பு 12,590 மெட்ரிக் டன்னும், உளுத்தம் பருப்பு 56,98 மெட்ரிக் டன்னும் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் இந்த பொருள்கள் வழங்கப்பட்டதை விட இரண்டு மடங்கு அளவிற்கு அக்டோபர் மாதத்தில் விநியோகிக்கப்பட்டுள்ள புள்ளி விவரத்தைக் காணும்போது இத்திட்டத்தினை பொதுமக்கள் எந்த அளவிற்கு பயன்படுத்திக்கொண்டு பயன்பெறுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

தற்போது சமையல் எண்ணையின் (கடலை எண்ணையின்) சராசரி சந்தை சில்லறை விலை - லிட்டர் ஒன்றுக்கு ரூ.70 என்றுள்ள நிலையில் - சிறப்பு பொது விநியோகத் திட்டத்தில் பாமாயில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.30-க்கு வழங்கப்படுகிறது.

அதேபோல, துவரம் பருப்பு சராசரி சந்தை சில்லறை விலை கிலோ ரூ.78 என்றுள்ள நிலையில், சிறப்பு பொது விநியோக திட்டத்தில்- இதே பொருள் கிலோ ஒன்று ரூ.40-க்கு வழங்கப்படுகிறது.

உளுத்தம் பருப்பின் விலை சந்தையில் கிலோ ஒன்றுக்கு ரூ.67 என்கிற நிலையில் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தில் கிலோ ஒன்று ரூ.40-க்கு வழங்கப்படுகிறது.

எனவே, ஜனவரி மாதத்துடன் அக்டோபர் மாதத்தை ஒப்பிட்டால் - பாமாயில் விநியோகம் 105 சதவிகிதமும்- துவரம் பருப்பு விநியோகம் 137 சதவிகிதமும் - உளுத்தம்பருப்பு விநியோகம் 159 சதவிகிதமும் தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சியினால் அதிக அளவிற்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதை அறியலாம். ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான விலை வாசியைக் குறைக்க தமிழக அரசு எடுத்த முக்கிய முயற்சிகளில் இதுவும் ஒன்று என்பதை இந்த விவரங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+