மும்பை தாக்குதல்-சிக்கலில் முன்னாள் போலீஸ் கமிஷனர்
மும்பை: கடந்தாண்டு நவம்பரில் மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, வேண்டுமென்றே கடமையை செய்யாமல் இருந்ததாக 4 மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகளை விமர்சித்த முன்னாள் போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க மகாராஷ்டிர அரசு தயாராகி வருகிறது.
மும்பையில் கடந்த நவம்பர் 26ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து முன்னாள் போலீஸ் கமிஷனரான ஹசன் கஃபூர் பேட்டி ஒன்றி்ல் கூறும்போது, மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகளான கே.எல்.பிரசாத், பரம்பிர் சிங், தேவன் பாரதி, கே.வெங்கடேஷம் ஆகியோரைக் குறிப்பிட்டு விமர்சனம் செய்தார்.
'தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தும் உச்சக்கட்ட பரபரப்பான சூழலின் போது, சம்பந்தப்பட்ட இடத்திற்கு செல்வதற்கு இவர்களெல்லாம் தாமதப்படுத்தினார்களா அல்லது ஒதுங்கியிருப்போம் என முடிவு செய்தார்களா' என்று பேட்டி ஒன்றில் கஃபூர் காரசாரமாக பேசினார்.
இவர் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகார்கள் அனுமதி கோரினால், உடனடியாக ஒப்புதல் தரப்படும் என்று உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
மேலும், அகில இந்திய பணிகள் நடத்தை விதிமுறைகள் சட்டத்தின் கீழும் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. 'கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திரா ஐயங்கார் கஃபூர் விவகாரம் குறித்து விசாரணை நடத்துவார். உள்துறை அமைச்சகம் சார்பாகவும் இதுபற்றி கஃபூரிடம் விளக்கம் கேட்கப்படும்' என்று பாட்டீல் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications