விடுதியில் பாம்பு கடித்து நர்சிங் மாணவி பலி
செங்கல்பட்டு: கல்லூரி விடுதியில் குளிக்கும் போது பாம்பு கடித்ததால், மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை, கீழ்வளவு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரகலா (19). செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரியில் செவிலியர் படிப்பு படித்து வந்தார்.
கடந்த சனிக்கிழமை குளியலறைக்கு சென்ற சந்திரகலாவை, ஜன்னல் அருகே பதுங்கி இருந்த பாம்பு கடித்துவிட்டது. சந்திரகலாவின் காதருகே பாம்பு கடித்தது.
ஆபத்தான நிலையில் அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
மருத்துவமனை விடுதியை சுற்றி பராமரிப்பு இல்லாமல் புதர் நிறைந்து இருந்ததே சந்திரகலாவின் சாவுக்கு காரணம் என்று பொதுமக்களும், மாணவர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.
மாணவிகள் இதுகுறித்து கூறுகையில், 'எங்கள் விடுதியில் வார்டன் கிடையாது, காவலாளியும் கிடையாது. எங்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. கிராம மக்கள் சில நேரம் விடுதி மதில் சுவர் ஏறிகுதித்து உள்ளே வந்து விடுவார்கள். பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. ஏற்கனவே 10 தடவைக்கு மேல் இங்கு பாம்புகளை பிடித்து சென்றார்கள்' என்றனர்.
அரசு ரூ. 1 லட்சம் நஷ்டஈடு:
இந் நிலையில் இறந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications