ரூ. 7.5 கோடி பண மோசடி- பிரபல ஜேபிஜே நிறுவன உரிமையாளர் கைது

தமிழகத்தைச் சேர்ந்தவர் ஜஸ்டின் தேவதாஸ் என்கிற டேவிட். ஜேபிஜே டெவலப்பர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். தமிழகத்தில் இவர் மிகவும் கவர்ச்சிகரமா விலையில் நிலம் தருவதாக கூறி பெருமளவில் விளம்பரம் செய்து வந்தார்.
மிகக் குறுகிய காலத்தில் ஜேபிஜே நிறுவனத்தின் பெயரை பிரபலமாக்கினார் டேவிட்- வெறும் விளம்பரங்களின் மூலம். டிவியைத் திறந்தால் இந்த நிறுவனத்தின் விளம்பரங்கள் கொடி கட்டிப் பறந்தன.
ஆனால் இவர் மிகப் பெரிய மோசடிப் பேர்வழி என்று சமீப காலமாக புகார்கள் வரத் தொடங்கின. இதை உறுதி செய்யும் விதமாக ஜேபிஜே குழுமத்தின் விளம்பரங்கள் டிவியில் காணப்படவில்லை. நாளிதழ்களிலும் விளம்பரங்களைக் காணவில்லை.
இந் நிலையில் பெங்களூரில் ரூ. 7.5 கோடி பணத்தை மோசடி செய்ததாக பெங்களூர் இந்திரா நகர் போலீஸார் டேவிட்டைக் கைது செய்துள்ளனர்.
கடந்த 2007ம் ஆண்டு இவர் பெங்களூர் நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்தார். கவர்ச்சிகரமான விலைக்கு நிலம் விற்பதாக கூறியிருந்தார்.
இதை நம்பி கிட்டத்தட்ட 600 பேர் அவரிடம் பெருமளவில் பணத்தைக் கொடுத்தனர். ஆனால் யாருக்கும் அவர் நிலம் தரவில்லை. மாறாக 'அல்வா' கொடுத்து விட்டு ரூ. 7.5 கோடியுடன் தமிழகத்திற்குத் தப்பியோடிவிட்டார்.
கர்நாடக மாநிலம் ஷிமோகாவிலும் இவர் மோசடி செய்திருப்பதாக போலீஸார் கருதுகின்றனர். இந்த நிலையில்தான் டேவிட் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார்.
பெங்களூர் இந்திரா நகர் சிஎம்எச் சாலையில் ஜேபிஜே டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் கிளையைத் திறந்து பணத்தை சுருட்டி வந்துள்ளார் டேவிட்.
இவரிடம் ஏமாந்த 600 பேரும் தலா ரூ. 3.5 லட்சம் முதல் 4 லட்சம் ரூபாய் வரை பணத்தைக் கொடுத்து ஏமாந்துள்ளனர்.
பெங்களூர் புறநகர்களில் மிகவும் குறைவான விலைக்கு நிலம் தருவதாக கூறி மோசடி செய்துள்ளார் டேவிட்.
மேலும், ரூ. 5000 முதலீடு செய்தால் அதை அடுத்த ஆண்டு ரூ. 10000 ஆக இரட்டிப்பாக்கித் தருவதாகவும் கூறி இன்னொரு மோசடியையும் செய்து பணத்தை வசூலித்துள்ளார் டேவிட்.
கடந்த செப்டம்பர் மாதம் தனது பெங்களூர் அலுவலகத்தை மூடி விட்டு தமிழகத்திற்கு ஓடி விட்டார் டேவிட்.
இதையடுத்து அவரிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்த இந்திரா நகர், அல்சூர், விமான நிலையச் சாலை பையப்பனஹள்ளி, ஜே.பி. நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்திரா நகர் போலீஸில் புகார் கொடுத்தனர். இதையடுத்து டேவிட்டை போலீஸார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இவரை சென்னையில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் மிகப் பெரிய ஆடம்பர வீட்டில் படு சொகுசான வாழ்க்கை வாழ்ந்துள்ளார் டேவிட். அத்தனையும் மோசடிப் பணத்தில் கிடைத்தவை என்று போலீஸார் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் நெல்லை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் டேவிட் மோசடி செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட டேவிட்டிடமிருந்து 2 கார்கள், பல்வேறு ஆவணங்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்திலும் கர்நாடகத்திலும் டேவிட் கும்பல் அடித்துள்ள மிகப் பெரிய கொள்ளைகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications