லிபரான் அறிக்கை விவாதம்: லோக்சபாவில் காங்-பாஜக மோதல்

பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் பாஜக தலைவர்கள் அத்வானி, வாஜ்பாய் உள்ளிட்டவர்களை தொடர்புபடுத்தியுள்ள லிபரான் கமிஷன் அறிக்கை மீதான விவாதம் டிசம்பர் 1ம் தேதியே நடக்க இருந்தது.
ஆனால், அறிக்கையின் நகல்கள் இந்தியிலும் கிடைக்கச் செய்ய வேண்டும் என சமாஜ்வாதி கட்சியினர் கேட்டதால் விவாதம் ஒத்திவைக்கப்பட்டது.
இன்றைய நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளில் புயல் கிளப்பும் என எதிர்பார்க்கப்பட்ட லிபரான் கமிஷன் அறிக்கை மீதான விவாதம் பிற்பகலில் தான் துவங்கியது. லோக்சபாவில் விவாதத்தை இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா துவக்கி வைத்தார்.
பாஜக மிக துல்லியமாகவும், தீவிரமாகவும் திட்டமிட்டு பாபர் மசூதியை இடித்த குற்றத்தை செய்துள்ளது என்றும் ஒரு வரலாற்றுச் சின்னத்தை பாதுகாக்க வேண்டிய கடமையில் இருந்து அப்போதைய காங்கிரஸ் அரசு தவறிவிட்டது என்றும் இரு கட்சிகளையும் விமர்சித்து தாஸ்குப்தா விவாதத்தை துவக்கினார்.
தாஸ்குப்தாவின் பேச்சுக்கு விளக்கம் அளித்த உள்துறை அமைச்சர் சிதம்பரம், பாபர் மசூதியைக் காப்போம் என்று அப்போதைய பாஜக முதல்வர் கல்யான் சிங்கின் அரசு மத்திய அரசுக்கும், நீதிமன்றத்துக்கும் தவறான தகவல் அளித்தது என்றும், பாபர் மசூதி இடிப்புக்கு கர சேவகர்களும், வாஜ்பாயும், அத்வானியும் தான் முழு காரணம் என்று கூறினார்.
இதனால், பாஜக உறுப்பினர்கள் காங்கிரசுக்கு எதிராக ஆக்ரோஷமாக குரல் எழுப்பினர். பதிலுக்கு காங்கிரஸ் உறுப்பினர்களும் கோஷமிட்டனர். இதனால் சிறிது நேரம் அமையில் கூச்சலும் குழப்பமுமாக காணப்பட்டது.
பின்னர் பாஜக சார்பில் அதன் தலைவர் ராஜ்நாத் சிங் பேசுகையில், சர்ச்சைக்குரிய ஒரு இடத்தை பாபர் மசூதி என்று அழைப்பதே தவறு. அந்த இடத்தை பாபர் மசூதி-ராம ஜென்ம பூமி என்று தான் குறிப்பிட வேண்டும்.
எனவே, அடிப்படை உண்மைகளையே லிபரான் கமிஷன் மறைத்தும், திரித்தும் விட்டது. ஒரு குறிப்பிட்ட அரசியல் காரணத்துக்காக தயார் செய்யப்பட்டது போல லிபரான் அறிக்கை உள்ளது என்றார்.
ராஜ்நாத் சிங்கின் கருத்துக்கு அவையில் இருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications