மக்களுக்காக கூட்டணி வைக்க விஜயகாந்த் தயாராம்!

இதன்மூலம், கூட்டணி வைத்தவர்களை எல்லாம் இதுவரை திட்டித் திட்டியே அரசியல் நடத்திக் கொண்டிருந்த விஜய்காந்த்தும் கூட்டணிக் குளத்தில் குதி்க்கவுள்ளார்.
வந்தவாசி இடைத் தேர்தல் தேமுதிக வேட்பாளர் ஜனார்த்தனனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த அவர் பேசுகையில்,
ஜெயலலிதா 2 முறையும், கருணாநிதி 5 முறையும் ஆட்சி செய்து தமிழக மக்களுக்கு என்ன செய்து விட்டார்கள்?. ஒன்றும் செய்யவில்லை.
நம்முடைய பணத்தில்தான் நமக்கு இலவச கலர் டிவி தருகிறார்கள். காஸ் அடுப்பு தருகிறார்கள். அவர்கள் வீட்டுப் பணத்தை தரவில்லை.
கிராமத்துச் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. 62 ஆண்டுகால ஆட்சியின் லட்சணம் இதுதான்.
ராவணனை காட்டிக் கொடுத்த விபீஷணன் போல தமிழர்களை டெல்லிக்குக் காட்டிக் கொடுத்தவர் கருணாநிதி.
திமுகவை திட்டினால் என் சொத்தை அழிப்பார்கள். என் சொத்துகள் அனைத்தையும் உங்களுக்காக இழக்கவும் நான் தயாராக உள்ளேன்.
முல்லைப் பெரியாறு பிரச்சனையில் கருணாநிதி மத்திய அமைச்சரைக் கண்டித்து பொதுக்கூட்டம் என்று அறிவித்தார். உடனே இளங்கோவன் ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராஜாவைக் கண்டித்து ஊர் ஊராக மேடை போட்டு பேசுவேன் என்று கூறியதும் கருணாநிதி கூட்டத்தை ரத்து செய்தார்.
இப்படிப்பட்டவரால் மக்களுக்கு என்ன செய்துவிட முடியும்?
எம்.ஜி.ஆர் 10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சி செய்து ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கினார். அதனால் அப்போது யாராலும் ஆட்சிக்கு வர முடியவில்லை.
காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டால் அவர்களிடம் நீங்கள் உங்கள் தொகுதிக்கு சுகாதாரம், சாலை வசதி, கல்வி, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வேண்டும் என கேட்க முடியாது.
படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம் என்றார்கள், வழங்கினார்களா இல்லையே. அதிமுகவும், திமுகவும் பல கட்சிகளுடன் கூட்டணி வைக்கின்றன. நான் மக்களுடன் தான் கூட்டணி வைத்துள்ளேன்.
தமிழக மக்களுக்காக நல்லது நடக்கவும், மக்களுக்காக போராடவும் நான் நிச்சயம் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைப்பேன். ஆனால், யாருடன் கூட்டணி என்பதை இப்போது சொல்ல மாட்டேன். அப்போது விஜயகாந்தின் திறமை என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதே நேரத்தில் பாமக போல மாறி, மாறி போகமாட்டேன்.
இந்த இடைத் தேர்தலில் தேமுதிகவுக்கு வாக்களித்தால்தான் ஆட்சி செய்பவர்களுக்கு பயம் வரும். திமுகவினர் ஓட்டுக்காக ஒவ்வொருவருக்கும் ரூ.500, 1000 கண்டிப்பாக கொடுத்திருப்பார்கள். ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் என்பார்கள். அதுபோல பணத்தை பெற்றுக் கொண்டு மாற்றி வாக்களியுங்கள் என்றார்.
பேசவிடாமல் தடுக்கிறார்கள்:
சிறும்பூண்டி என்ற இடத்தில், எதிரே துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தபடி வந்ததால் போலீஸார் விஜயகாந்தை தடுத்தனர். இதனால் சினிமா பாணியில் கண்கள் சிவக்க கோபப்பட்ட விஜயகாந்த், அவர் பிரச்சாரம் செய்வதற்கும் எனக்கும் சம்பநதமில்லை. எனக்கு நேரமாகிவிட்டது. இன்னும் நிறைய இடங்களூக்கு செல்ல வேண்டியிருக்கிறது. என்னை விடுங்கள் என்று விஜயகாந்த் கூறினார்.
ஆனால், அவர் பேசிக்கொண்டிருக்கும் போது நீங்கள் எப்படி அந்த வழியாக செல்வீர்கள். கொஞ்ச நேரம் பொறுத்திருங்கள் என்று போலீசார் கூறவே ஆத்திரமடைந்த விஜயகாந்த், பிரச்சார வேனை விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தா.
சுமார் அரை கிலோ மீட்டர் நடந்தே சென்றார் விஜயகாந்த். அதற்குள் ஸ்டாலின் பிரச்சாரத்தை முடித்து சென்றுவிட்டதால் போலீசார் விஜய்காந்தின் பிரச்சார வேனை அனுமதித்தனர். இதையடுத்து வேனில் ஏறி தனது பிரச்சாரத்தை ஆரம்பித்த விஜய்காந்த், என்னை பிரச்சாரம் செய்யவிடாமல் தடுக்கிறார்கள் என்று ஆவேசமாக கூச்சலிட்டார்.
ஸ்டாலினுக்கு எதிராக தேமுதிகவினர் கோஷம்:
இந் நிலையி்ல் விஜய்காந்த் தடு்க்கப்பட்டதால் ஆவேசமடைந்த தேமுதிக தொண்டர்கள், பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு கிளம்பிய ஸ்டாலினை நோக்கி, அவருக்கு எதிராக தேமுதிகவினர் கோசம் எழுப்பினர்.
அவர்களை நோக்கி திமுகவினர் பாய்ந்து வரவே திமுக-தேமுதிக தொண்டர்களிடையே மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டது.
போலீசார் இடையி்ல் புகுந்து இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications