சங்கரராமன் வழக்கில் சாட்சிகள் பல்டி தொடர்கிறது - மேலும் 3 பேர் பிறழ் சாட்சி
புதுச்சேரி: சங்கரராமன் கொலை வழக்கில் சாட்சிகள் பல்டி அடிப்பது தொடர் கதையாகியுள்ளது. நேற்று மேலும் 3 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி புதுச்சேரி செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.
தற்போது சாட்சிகள் விசாரணை நடந்து வருகிறது. நீதிபதி கிருஷ்ணராஜா முன்பு நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்டோர் வரவில்லை. ரகு, சுந்தரேச அய்யர், அப்பு, கதிரவன் உள்பட 12 பேர் ஆஜர் ஆனார்கள்.
நேற்று தலைமை நீதிபதி முன்பு வக்கீல் குமாஸ்தா தணிகாசலம், இந்து அறநிலையத்துறையின் ஓய்வு பெற்ற துணை ஆணையர் வைத்தியநாதன், கோவில் வழிகாட்டி கோவிந்தன் ஆகியோர் சாட்சியம் அளித்தனர்.
அவர்கள் ஏற்கனவே தாங்கள் கொடுத்த சாட்சியத்தின்போது அளித்த வாக்குமூலத்தை மறுத்தனர். அவர்களிடம் சங்கராச்சாரியார்களின் வக்கீல் தினகரன் குறுக்கு விசாரணை செய்தார்.
கோவிந்தன் சாட்சியம் அளிக்கும்போது, கோவிலுக்கு நிறைய பேர் வருவார்கள் போவார்கள் என்றும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் யாரையும் தான் நேரில் பார்த்ததில்லை என்றும் தெரிவித்தார். மேலும், போலீசார் குற்றவாளிகளின் போட்டோவை காட்டி கையெழுத்து கேட்டதால் கையெழுத்து போட்டதாகவும் தெரிவித்தார்.
அப்போது வக்கீல் தினகரன், போலீசார் சொல்ல சொன்னதை சொன்னீர்களா? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த கோவிந்தன், ஆம் என்றார். அப்படி சொல்லாவிட்டால் விளைவு வேறாக இருக்கும் என்று போலீசார் பயமுறுத்தினார்களா? என்று கேட்டார். அதற்கு கோவிந்தன் போலீசார் பயமுறுத்தினார்கள் என்றார்.
இதேபோல் வக்கீல் குமாஸ்தா தணிகாசலம், வைத்தியநாதன் ஆகியோரும் முன்பு ஏற்கனவே கொடுத்த வாக்குமூலத்தை மறுத்தார்கள். போலீசார் சொல்லிக் கொடுத்ததை சொன்னதாக தெரிவித்தனர்.
ஏற்கனவே இந்த வழக்கில் சில சாட்சிகள் பல்டி அடித்துள்ளனர். இந்த நிலையில் மேலும் 3 பேர் பல்டி அடித்துள்ளனர்.
சாட்சிகள் விசாரணை இன்றும் தொடர்ந்து நடக்கிறது.












Click it and Unblock the Notifications