தெலுங்கானாவை உருவாக்க ஆந்திர எல்லைப்புற தமிழர்கள், கன்னடர்கள் எதிர்ப்பு

ஆந்திராவைப் பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க தெலுங்கானா தவிர்த்த ஆந்திராவின் பிற பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது.
தற்போது இந்தப் போராட்டத்தில் ஆந்திர மாநில எல்லையில், தமிழகம் மற்றும் கர்நாடகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வசித்து வரும் தமிழர்களும், கன்னடர்களும் இணைந்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தி்ல் இவர்களுக்கு நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை என்றபோதிலும், ஆந்திராவை அப்படியே விட வேண்டும். அதைப் பிரித்து ஒற்றுமையை குலைத்து விடக் கூடாது என்பதற்காக இந்தப் போராட்டங்களில் தங்களை அவர்களாகவே ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.
பேரணிகள், தர்ணாக்கள், சாலை மறியல்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐக்கிய ஆந்திராவே வேண்டும், தெலுங்கானா வேண்டாம் என்ற கோரி்க்கைகளை தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் போஸ்டர்கள் அடித்து இரு மாநிலங்களுக்கும் செல்லும் பேருந்துகளில் ஒட்டி வருகின்றனர். இதுதவிர சித்தூர் மாவட்டம் முழுவதும் இந்த போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.
தெலுங்கானா தனி மாநிலம் வேண்டாம்- ஆந்திர மாநில ஒற்றுமையை பிரிக்காதீங்க என்ற தமிழ் போஸ்டர்கள் அதிகளவில் காண முடிகிறது.
இந்த போஸ்டர்களை தமிழகத்தின் கன்னியாகுமரி, ராமேஸ்வரம் வரை செல்லும் பேருந்துகளிலும், ரயில்களிலும் குறிப்பாக ஒட்டி வருகின்றனர்.
இந்த நூதன போராட்டத்தில் ராவுரி ஈஸ்வர ராவ் இளைஞர் சேனை என்ற அமைப்பு இறங்கியுள்ளது.
இந்த அமைப்பைச் சேர்ந்த சதாசிவம் என்பவர் கூறுகையில், கிட்டத்தட்ட 20 ஆயிரம் போஸ்டர்களை அடித்துள்ளோம். ஆந்திரா மாநிலத்தின் ஒற்றுமையைப் பிரிக்கக் கூடாது என்பதே எங்களுடைய கோரிக்கை.
வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் இதை விநியோகித்து வருகிறோம் என்றார்.
இந்த அமைப்பின் கேசவ ராவ் கூறுகையில், எல்லோரும் ப.சிதம்பரத்தையும், வீரப்ப மொய்லியையும் குறை கூறுகிறார்கள். நமக்கு நாமே ஒற்றுமையுடன் இல்லாவிட்டால், அவர்களை குறை கூறி என்ன பயன்.
ஒற்றுமையின் தாத்பர்யத்தை நாங்கள் கோலார், பேதமங்கலம், குட்டஹள்ளி, காமசந்திரா ஆகிய கர்நாடகப் பகுதிகளுக்கும் நாங்கள் போஸ்டர்கள் மூலம் கொண்டு செல்கிறோம் என்றார்.
சேனையின் துணைத் தலைவரான ராவுரி ஈஸ்வர ராவ் கூறுகையில், மாநிலத்தைப் பிரிப்பது பிரச்சினைக்குத் தீர்வாகாது. இதுபோன்ற விஷயங்களில் ஆட்சியாளர்கள் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது.
சித்தூர் மாவட்டத்துக்கு பல்லாயிரக்கணக்கான தமிழர்களும், கன்னடர்களும் வருகிறார்கள். அவர்களை வராதே என்று தடுக்க முடியாது. விட்டுக் கொடுத்தல் மூலமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.
தெலுங்கானா அமைக்கப்ட்டால் அது ஆந்திராவை பேரிருளில் ஆழ்த்தி விடும் என்றார்.
இதற்கிடையே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆந்திர மாநில எல்லையையொட்டியுள்ள கிராமத்தினர் தங்களது பகுதிகளை ராயலசீமாவுடன் இணைத்து தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தமிழகத்தின் திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களை ராயலசீமாவுடன் இணைத்து அகண்ட ராயலசீமா மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications