யானை சுட்டுக் கொல்லப்பட்டதால் விநாயகருக்கு கர்ப்பிணிகள் சிறப்புப் பூஜை செய்து வழிபாடு
ராயக்கோட்டை: கிருஷ்ணகிரி அருகே கர்ப்பிணி யானை சுட்டுக் கொல்லப்பட்டதால் கர்ப்பிணிகளுக்கு ஆபத்து என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து கர்ப்பிணிகள் விநாயகருக்கு சிறப்புப் பூஜைகள் செய்து வருகின்றனராம்.
இதனால் கிருஷ்ணகிரி, மற்றும் ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, ஓசூர் பகுதிகளில் உள்ள கர்ப்பிணி பெண்கள் விநாயகருக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை வனசரகத்துக்கு உட்பட்ட ஊடேதுர்கம் காப்புகாடு ரத்தினகிரி பகுதியில் கடந்த 7ம் தேதி பெண் யானை துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுப்பற்றி அந்த பகுதியில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். யானை இறந்து சுமார் ஒரு வாரத்துக்கும் மேல் இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
சமீபகாலமாக அந்த பகுதி விளைநிலங்களை யானைகள் நாசப்படுத்தி வருவதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் யாரேனும் ஒருவர் யானையை கொன்றிருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. இதில் விவசாயிகள் 2 பேர் தாங்கள் தான் யானையை கொன்றோம் என ஒப்பு கொண்டனர்.
யானையின் உடல் தேன்கனிக்கோட்டை கால்நடை மருத்துவ அதிகாரியால் வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது இறந்த யானையின் வயிற்றில் குட்டியானை ஒன்று இருந்தது தெரியவந்தது. 20 மாத குட்டி யானையான அதுவும் இந்த துப்பாக்கி குண்டுக்கு பலியாகி இருப்பது தெரியவந்தது.
கர்ப்பமான நிலையில் யானை சுட்டு கொல்லப்பட்டது அப்பகுதிகளில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கர்ப்பிணி யானை இறந்துவிட்டதால் கர்ப்பிணி பெண்களுக்கு ஆபத்து என்ற தகவலும் வேகமாக பரவி வருகிறது.
இதனால்தான் கர்ப்பிணிப் பெண்கள் பரிகாரம் செய்வதற்காக விநாயகர் கோவில்களில் சிறப்புப் பூஜை செய்து வழிபட்டு வருகிறார்களாம்.












Click it and Unblock the Notifications