For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இடைத்தேர்தல்: நாளை வாக்குப்பதிவு

By Staff
Google Oneindia Tamil News

Electronic Voting Machine
திருச்செந்தூர் & வந்தவாசி: திருச்செந்தூர், வந்தவாசி சட்டமன்றத் தொகுதிகளில் நாளை இடைத் தேர்தல் நடக்கிறது.

காலை 8 மணிக்குத் தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடையும்.

திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், அதிமுக சார்பில் அம்மன் நாராயணன், தேமுதிக சார்பில் கோமதி கணேசன் உள்பட 25 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

வந்தவாசியில் திமுக சார்பில் கமலகண்ணன், அதிமுக சார்பி்ல் முனுசாமி, தேமுதிக சார்பில் ஜனார்த்தனம் உள்பட 14 பேர் போட்டியிடுகின்றனர்.

திருச்செந்தூர் தொகுதியில் 196 வாக்குச் சாவடிகளும், வந்தவாசி தொகுதியில் 217 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

ஓட்டு போடுவோர் புகைப்படம் எடுக்கப்படும்..

இந்த வாக்குச் சாவடிகளில் வெப் காமிராக்கள் பொருத்தும் பணிகள் இன்று மாலைக்குள் முடிவடையும். வாக்கு சாவடிகளின் நடவடிக்கைகளை வெப் காமிரா மூலம் படம் பிடிக்கப்படுகிறது. முதல் முறையாக வாக்காளர்களின் புகைப்படமும் எடுக்கப்படவுள்ளது.

வாக்குப்பதிவு அலுவலர்கள், தலைமை அலுவலர்கள், நுண் பார்வையாளர்கள், வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் என இரு தொகுதிகளிலும் 2,000க்கும் மேற்பட்டோர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மதுக்கடைகள் மூடல்:

நேற்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தாலும் வீடுவீடாக வாக்கு சேகரிக்கும் பணிகளில் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

இந் நிலையில் திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளில் வெளியாட்கள் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கான போலீசாரும், துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

'ஓ' போடும் பாமக:

இந்தத் தேர்தலை பாமக புறக்கணித்துள்ளது. தனது கட்சியினர் யாருக்கும் வாக்களி்க்க விருப்பமில்லை என்பதைத் தெரிவிக்கும் வகையில் 49 ஓ படிவத்தைப் பயன்படுத்துவர் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

திமுக-மக்கள் தேசம் கட்சியினர் மோதல்

இந் நிலையில் திருச்செந்தூர் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட காயல்பட்டணத்தில் திமுகமற்றும் மக்கள் தேசம் கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்செந்தூர் தொகுதிக்கு உட்பட்ட காயல்பட்டணம் பகுதியில் நேற்று மாலை திமுகவினர் இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியே சாத்தை பாக்கியராஜ் தலைமையில் செயல்படும் மக்கள் தேசம் கட்சியினர் வாகனங்களில் சென்றனர்.

இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதும் நிலை ஏற்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, மக்கள் தேசம் கட்சியின் வேட்பாளர் ஆசைத்தம்பியின் புகாரின் பேரில் திமுகவினர் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதே போன்று திமுகவினரின் புகாரின் பேரில் ஆசைதம்பி உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X