சென்னையில் 4 லட்சம் போலி ரேஷன் கார்டுகள்!
சென்னை: சென்னையில் நடந்த ஆய்வுப் பணியில் கிட்டத்தட்ட 4 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் 2 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றில் பெருமளவில் போலி கார்டுகள் இருப்பதைத் தொடர்ந்து அவற்றைக் கண்டுபிடிக்க தமிழகம் முழுவதும் ஆய்வு நடந்தது. அப்பணி முடிவடைந்துள்ளது.
சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் வீடு வீடாக சென்று ரேஷன் கார்டு பற்றி ஆய்வு குடும்ப தலைவர் பெயர், குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் விவரம், சமையல் இணைப்பு போன்ற விவரங்களை கேட்டறிந்து தணிக்கை செய்தனர். இந்த ஆய்வு கடந்த மாதம் 20-ந்தேதி முடிவடைந்தது.
ஆய்வில் பெறப்பட்ட தகவல்களை கொண்டு கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி நடந்து முடிந்தது. இதில் சென்னையில் உள்ள 20 லட்சம் ரேஷன் கார்டுகளில் 20 சதவீதம் குடும்ப அட்டைகள் போலியாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது சென்னை நகரில் மட்டும் சுமார் 4 லட்சம் ரேஷன் கார்டுகள் போலியாக பயன்படுத்தப்படுகிறது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் 13 சதவீதம் முதல் 15சதவீதம் வரை போலி ரேஷன் கார்டுகள் உள்ளன.
இறந்தவர்கள், ஊர் விட்டு ஊர்மாறி சென்றவர்களின் ரேஷன் கார்டுகளின் பெய ரில் போலிகார்டுகள் இன்னும் நடமாடுகின்றன. சமூக விரோதிகளுடன் சில ரேஷன் கடை ஊழியர்கள் ஆதாயம் பெறுவதற்காக இத்தகைய தவறுகளில் ஈடுபடுவதால் இதுபோன்ற போலிகார்டுகள் இன்னும் இருக்கின்றன. அவற்றை முழுமையாக ஒழித்து விடுவோம் என்று சிவில் சப்ளை அதிகாரிகள் ஒருவர் தெரிவித்தார்.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் சந்தேகப்படும்படியான ரேஷன் கார்டுகள் பட்டியல் தயாராகி வருகிறது. இந்த மாத இறுதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சந்தேகப்படும்படியாக உள்ள ரேஷன் கார்டுகள் பட்டியல், ரேஷன் கடைகளில் ஒட்டப்பட உள்ளது. அவற்றை பார்த்து பொதுமக்கள் தங்கள் கார்டுகளின் நிலையை அறிந்து கொள்ளலாம். இது தவிர ஆன்லைனிலும் இந்த பட்டியல் வெளியிடப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications