For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரிசர்வ் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது 50 பெண் போலீஸார் செக்ஸ் புகார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்புப் போலீஸ் 5வது பட்டாலியனில் இன்ஸ்பெக்டராக உள்ள சுகுமார் என்பவர் மீது 50 பெண் போலீஸார் பாலியல் கொடுமைப் புகார் கொடுத்துள்ளதால் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெண் காவலர்களை ரகம் பிரித்து அவர்களை கேலி செய்வதும், கிண்டல் செய்வதும், மடியில் உட்கார வைத்து சில்மிஷம் செய்வதும், விடுப்பு கேட்டால் தனது இச்சைக்கு இணங்கும்படி கட்டாயப்படுத்துவதுமாக அவர் சேஷ்டைகள் செய்வதாக புகார் கூறியுள்ளனர் பாதிக்கப்பட்ட பெண் காவலர்கள்.

ஆவடி 5வது பட்டாலியனின் எப் பிரிவி்ல் பணியாற்றி வரும் ஒரு பெண் செக்யூரிட்டி கார்டு காவலர் இதுதொடர்பாக உதவி ஆணையர் மங்கையர்க்கரசியை சந்தித்து புகார் அளித்துள்ளார். அதில் பாதிக்கப்பட்ட 50 பெண் காவலர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

அந்தப் புகார் மனு விவரம்...

நான் கடந்த 2 வருடங்களாக 5-வது பட்டாலியனில் போலீசாக பணிபுரிந்து வருகிறேன். ஆவடி, அம்பத்தூர், திருமுல்லைவாயல் மற்றும் புறநகர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் செக்யூரிட்டி கார்டு பணிகளில் இடம் பெற்றுள்ளேன்.

3 மாதங்களுக்கு முன்பு 5-வது பட்டாலியனில் எப் பிரிவுக்கு ஆபீசர் கமாண்டராக (இன்ஸ்பெக்டர்) சுகுமார் (இவருக்கு வயது 57) என்பவர் பொறுப்பேற்றார்.

அழகுக்கேற்ப தரம் பிரித்து சேஷ்டை...

பொறுப்பேற்றது முதல் பெண் போலீசாரை தவறான கண்ணோட்டத்தில் நடத்தி வருகிறார். அவர்களது அழகுக்கு ஏற்ற வகையில் ஏ, பி, சி, என்று 3 பிரிவாக பிரித்து, அவரது நடவடிக்கைகளுக்கு ஒத்துபோக சொல்லி வற்புறுத்துகிறார்.

அழகான பெண் போலீசாரை அவர் படுத்தும்பாடு சொல்லி மாளாது. அவர்கள் விடுப்பு கேட்டு கடிதம் கொடுத்தால், நான் சொல்கிறபடி நடந்துகொள். எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் விடுப்பு தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறுகிறார். ஒரு சில பெண் போலீசாரை மிரட்டியும் பணிய வைக்கிறார். அவர்களை தனது மடியில் உட்கார வைத்து ஆபாச சில்மிஷங்களில் ஈடுபடுகிறார்.

காலை 11 மணி அளவிற்கெல்லாம் எப் பிரிவு அலுவலகத்தில் யாரும் இருப்பதில்லை. அந்த சமயத்தில் இவர் வலையில் சிக்கிய பெண் போலீசை, மிரட்டி ஆசையை நிறைவேற்றுகிறார். இவரது தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஊருக்கே பாதுகாப்பு அளிக்கும் எங்களது கற்புக்கு பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சுகுமாரின் நடவடிக்கைகளுக்கு ஒத்துப்போக சொல்லி சப்-இன்ஸ்பெக்டர்கள் சகாயம், துர்க்காதேவி ஆகியோரும் மிரட்டுகின்றனர். எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.

சமீபத்தில் தனது தாய் நோய் வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக கிடப்பதை அறிந்து விடுப்பு கேட்ட ஒரு பெண் போலீசுக்கு, சுகுமார் கொடுத்த தொல்லைகள் கொஞ்ச, நஞ்சமல்ல. தினமும் கண்ணீர் வடித்து வருகிறார் அந்த அப்பாவி பெண்.

அவரது தவறான செயல்களுக்கு ஒத்துப் போகும் ஒரு சில பெண் போலீஸாருக்கு நினைத்த நேரமெல்லாம் காரணம் கேட்காமலேயே விடுப்பு கொடுத்து அனுப்புகிறார்.

ஒரு சில பெண் போலீசிடம் ரூ.500 பணம் வாங்கிக்கொண்டு விடுப்பு தருகிறார். அவரது அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஒரு பெண் காவலர் தற்கொலை செய்து கொள்ள முயன்று கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்டார். அது பட்டாலியன் உயர் அதிகாரிகள் அனைவருக்கும் தெரியும்.

நானும் சுகுமரால் ஆபாச சில்மிஷத்திற்கு ஆளாக்கப்பட்ட காரணத்தால் 50 பெண் போலீசாரின் சார்பில் இந்த புகாரை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

புகாரைப் பெற்ற உதவி ஆணையர் இதுகுறித்து விசாரணை நடத்தி, சுகுமாரை எச்சரித்து மெமோ வழங்கி உள்ளார். அவர் மீது மேல் நடவடிக்கைகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாம்.

நான் ரொம்ப நல்லவன் - சுகுமார்

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சுகுமார் கூறுகையில், ஆவடி 5வது பட்டாலியனில் எப் பிரிவில் 124 பெண் போலீசார் உள்ளனர். இவர்களுக்கு விடுப்பு வழங்கும் அதிகாரம் என்னிடம் உள்ளது.

4 பெண் போலீசார் குழந்தை பேறு விடுப்பில் உள்ளனர். மொத்தம் 12 பேருக்கு மட்டுமே விடுப்பு வழங்க வேண்டும் என்ற விதி உள்ளது.

ஆனால் பொண்ணுங்க எல்லாம் சொல்லி வைத்த மாதிரி ஒரே நாளில் போட்டி போட்டு விடுப்பு கேட்கிறார்கள். அவர்களது காரணங்கள் என்ன? என்பதை ஆய்வு செய்து விடுப்பு வழங்கப்படுகிறது. இது சிலருக்கு பிடிக்கும். சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தும். விடுப்பு கிடைக்காத ஆத்திரத்தில் என் மீது பொய்யான புகார் கொடுத்துள்ளனர்.

எனக்கும் மனைவி குழந்தைகள் உள்ளனர். பெண்களை தெய்வமாக மதிப்பவன். நான் ரொம்ப நல்லவன். இதை நான் சொல்வதை விட விசாரித்தால் உண்மை தெரியும் என்று கூறினார்.

இன்ஸ்பெக்டர் மீது 50 பெண் போலீஸார் மொத்தமாக புகார் கொடுத்துள்ளதால் காவல்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X