சி.வி.சண்முகம் எங்கே? வேலுமணி பிரஸ்மீட்டில் கூட ஆளை காணோமே! தனிமரமாக்கப்பட்டாரா?
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.வி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்த போது அதில் சி.வி.சண்முகம் இல்லாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக அதிமுகவில் மீண்டும் ஒரு முறை பிளவு ஏற்பட்டுள்ளது. கட்சியின் மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையில் ஒரு தனிப் பிரிவு உருவாகி, தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான 'தமிழக வெற்றி கழகம்' (தவெக) அரசுக்குத் தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

மொத்தமுள்ள 47 அதிமுக எம்.எல்.ஏ-க்களில் சுமார் 24 பேர் இந்த அதிருப்தி அணியில் இருப்பதாகக் கூறப்படுவது எடப்பாடி பழனிசாமி (EPS) தரப்பிற்குப் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து அதிருப்தி எம்எல்ஏக்களில் மாவட்டச் செயலாளர் பதவியில் இருப்போரை எடப்பாடி பழனிசாமி நீக்கிவிட்டு அவர்களுக்கு பதில் புதிய நிர்வாகிகளை நியமித்தார். அவர்களுடன் எடப்பாடி பழனிசாமி அண்மையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் பல கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
திமுகவுடன் ரகசியக் கூட்டணி முயற்சி: தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுகவின் பாரம்பரிய எதிரியான திமுகவின் ஆதரவோடு எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் அமர முயற்சி செய்ததாகச் சண்முகம் குற்றம் சாட்டினார். இது தங்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கட்சியின் அடையாளம் அழியும் அபாயம்: "அதிமுக தொடங்கப்பட்டதே திமுகவை எதிர்ப்பதற்காகத்தான். அப்படி இருக்கும்போது, சுயநலத்திற்காக திமுகவுடன் கைகோர்க்க முயல்வது கட்சியின் கொள்கைக்கே எதிரானது. இதனால் அதிமுக முற்றிலும் அழிந்துவிடும்" என்று அவர் எச்சரித்தார்.
தொடர் தோல்விகளுக்குப் பொறுப்பேற்க மறுப்பு: 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டசபைத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தற்போதைய தேர்தல் எனத் தொடர்ந்து அதிமுக சந்தித்து வரும் தோல்விகளுக்கு இபிஎஸ் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க மறுக்கிறார் எனச் சாடினார்.

சட்டசபைக் கட்சித் தலைவராக எஸ்.பி. வேலுமணி தேர்வு!
தனி அணியாகத் தங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்ட இந்த அதிருப்தி குழுவினர், சட்டமன்றத்தில் தங்களின் புதிய பொறுப்பாளர்களையும் அறிவித்துள்ளனர்.
சட்டசபைக் கட்சித் துணைத் தலைவர் ஜி. ஹரி, கட்சி கொறடா (Whip)டாக்டர் சி. விஜயபாஸ்கர், செயலாளர் காமராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தவெக அரசுக்கு ஆதரவு தருவது ஏன்? சி.வி. சண்முகம் விளக்கம்
"திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில்தான் தமிழக வெற்றி கழகமும் (TVK) களம் கண்டுள்ளது. அதிமுகவின் அடிப்படை கொள்கையும் திமுக எதிர்ப்புதான் என்பதால், தமிழக மக்களின் தீர்ப்பை மதித்து தவெக அரசுக்கு நாங்கள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகிறோம். இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை" என்று சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்றும், கட்சியின் தோல்விகள் குறித்து விவாதிக்க உடனடியாகப் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்றும் இபிஎஸ்-க்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த அதிருப்தி அணியின் அறிவிப்பைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் கொந்தளிப்பில் உள்ளது. கட்சிக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாகக் கூறி, எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் கட்சிப் பதவிகளைப் பறித்து தலைமை அலுவலகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் தவெக அரசுக்கு ஆதரவு அளித்ததாலும் ,சிவி. சண்முகம் வீட்டிற்கும் விஜய் வந்திருந்ததாலும் அமைச்சரவையில் அதிமுகவினர் சிலர் இணையக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
தவெக தங்கள் கட்சி எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி , வாரிய பதவிகளை தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில் தவெக கோரிய நம்பிக்கை தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது குற்றம்சாட்டியிருந்தார்.
ஆனால் நேற்று நடந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இரு இடங்களும், தவெகவுக்கு 21 இடங்களும் கொடுக்கப்பட்டன. அது போல் இன்றைய தினம் விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்களும் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இதனால் அமைச்சர் பதவி என்ற இலக்கை நோக்கி தனி அணியாக செயல்பட்டு வந்த சி.வி.சண்முகம் தரப்பை விஜய் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் இதை தெளிவுப்படுத்த எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது முற்றிலும் மாற்றமாகவே இருந்தது. அதாவது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே பேசியிருந்தார். அன்று எடப்பாடி பழனிசாமியை சி.வி.சண்முகம் கடுமையாக விமர்சித்த நிலையில் இன்றைய பிரஸ்மீட்டில் சி.வி.சண்முகம் இல்லாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு வேளை சி.வி.சண்முகத்திற்கு, வேலுமணி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பது பிடிக்கவில்லையா, இல்லை சி.வி.சண்முகம் அணியை விட்டு வேலுமணி உள்ளிட்டோர் வெளியேறிவிட்டனரா என தெரியவில்லை.
தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்கள் மனம் திருந்தி மீண்டும் வந்தால் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்த நிலையில் சண்முகத்தை விட்டுவிட்டு வேலுமணி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க செல்கிறார்களா என்பதும் தெரியவில்லை.
எல்லாவற்றுக்கு மேல், இன்று நடந்த பிரஸ்மீட்டில் வேலுமணி, "சிவி சண்முகத்தை அண்ணன் என்றும் அவர் ஏற்கனவே செய்த பிரஸ் மீட் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான்" என தெரிவித்திருந்தது சி.வி.சண்முகம் எங்கே என்ற கேள்வியை வலுவாக்குகிறது. மேலும் இந்த பேட்டி சி.வி.சண்முகம் குடியிருக்கும் எம்ஆர்சி நகரில்தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications