குவியும் கோரிக்கைகள் - மாநில மறு சீரமைப்பு ஆணையம் அமைக்க அரசு யோசனை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தனி மாநில கோரிக்கையால் கடந்த ஒருமாதமாக ஆந்திர மாநிலமே ஸ்தம்பித்துக் கிடக்கிற நிலையி்ல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 'மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணைய'த்தை இரண்டாவது முறையாக அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.

ஆனால், இம்முயற்சிக்கு தெலுங்கானா ஆதரவாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஆந்திராவில் தற்போதுள்ள சூழலில் எந்த ஒரு இறுதி முடிவையும் அறிவிக்க முடியாமல் மத்திய அரசு திணறுகிறது. தெலுங்கானாவுக்கு ஆதரவான அறிவிப்பால், ராயலசீமா உள்ளிட்ட பகுதிகளில் கலவரம் வெடிக்கிறது. தெலுங்கானாவுக்கு எதிரான நிலையெடுத்தால், அங்குள்ள 10 மாவட்டங்களும் ஸ்தம்பித்து போகின்றன.

இருதரப்பினரையும் பேச்சுவார்த்தை மூலம் சமரசப்படுத்துவதும் முடியவில்லை. துணை ராணுவப் படைகளின் மூலம் இரும்புக் கரம் கொண்டு அடக்குவது ஆபத்தான பரீட்சையாகவே அமையும்.

எனவே இப்பிரச்னையில் இருந்து மீள, 'மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணையம்' தான் ஒரே வழி என மத்திய அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தற்போதைய கலவர சூழலை கட்டுப்படுத்த முடியும் என நம்பப்படுகிறது.

'மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணையம்' என்பது வட்டார மொழி, இனம், கலாச்சாரம், பொருளாதார நிலை, முந்திய வரலாற்று நிகழ்வுகள், அரசியல் பின்புலம் மற்றும் மக்களின் உண்மையான மனநிலை ஆகியவற்றை நேரில் ஆராய்ந்து எந்தெந்த பகுதிகளை மாநிலங்களாக பிரிக்கலாம் என அரசுக்கு பரிந்துரைக்கும்.

இந்தியாவில் சுதந்திரத்திற்கு பின்னர் முதல் முறையாக இதுபோன்ற ஆணையம் கடந்த 1955ல் அமைக்கப்பட்டது. இதன் பரிந்துரையின் பேரிலேயே மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.

அதற்குப் பிறகு இதுவரை ஒரு டஜனுக்கும் மேற்பட்ட தனி மாநிலக் கோரிக்கைகள் உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளன.

இவற்றில் மிகப் பெரிய அளவில் வெடித்துள்ளது தெலுங்கானா விவகாரம். இதையடுத்து வெடிக்கக் காத்திருக்கிறது கூர்க்காலாந்து போராட்டம்.

இந்தப் பிரச்சினைகளைத் தவிர்க்க தெலுங்கானாவோடு சேர்த்து அத்தனை மனுக்களையும் சட்டப்படி பரிசீலித்து ஆராய்ந்து முடிவு எடுப்பது சிறந்த அணுகுமுறையாக இருக்கும் என மத்திய அரசு நம்புவதாக கூறப்படுகிறது.

'பஞ்சாபி மொழி பேசும் மாநிலங்கள் இரண்டு, தெலுங்கு பேசும் மாநிலங்கள் மூன்று, இந்தி பேசும் மாநிலங்கள் 20 என்ற வகையில் 58 மாநிலங்களாக இந்தியாவை பிரித்தால் பரவலான வளர்ச்சி ஏற்பட்டு ஒருங்கிணைந்த இந்தியா விரைவில் வல்லரசாக முடியும்' என்ற கருத்து பொதுவாக நிலவி வருகிறது.

ஆனால், 'தற்போது தனி மாநிலம் கோரும் அனைவருக்கும் தனித்தனி மாநிலங்கள் அமைக்க அனுமதி வழங்கப் பெற்றாலும் கூட, 35 மாநிலங்களுக்கு மேல் நம்மிடம் இருக்க முடியாது' என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

எப்படியாயினும் மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டால், இந்திய வரைபடத்தில் பல மாற்றங்கள் வர வாய்ப்புண்டு.

ஆனால், மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணைய அஸ்திரத்தை ஆந்திர கலவரத்தை மட்டுப்படுத்துவதற்காக மட்டுமே மத்திய அரசு பயன்படுத்தும் என தெலுங்கானா ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

இவர்களை மத்திய அரசு எவ்வாறு சமாளிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சரிபட்டு வராது: சந்திரசேகர ராவ்

'முதல் முறை மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணையம் பரிந்துரை செய்தபோதே தெலுங்கானாவை பிரிக்க வேண்டும் எனக் கூறியிருந்தது. அதை அரசு இன்னும் நிறைவேற்றவில்லை. அப்படி இருக்கும் போது இரண்டாவது ஆணையம் எதற்கு?' என்று டி.ஆர்.எஸ் தலைவர் சந்திரசேகர ராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹைதராபாத்தில் நேற்று இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்தபோது அவர் மேலும் கூறுகையில், 'அப்படியே அதுபோன்ற முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டாலும் அதனால் ஏற்படப்போகும் விபரீத வன்முறைகளுக்கு நான் பொறுப்பல்ல' என்றும் அவர் எச்சரித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+