சென்னை ஐடி நிறுவனங்களில் மின்வாரிய அதிகாரிகள் சோதனை
சென்னை: பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் மின்வாரிய அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர்.
பழைய மகாபலிபுரம் சாலையில் ஏகப்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. இன்போசிஸ், விப்ரோ, எச்சிஎல் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களும் உள்ளன.
இந்த நிறுவனங்களுக்கு மானிய விலையில் தமிழக மின்வாரியம் மின்சாரம் சப்ளை செய்து வருகிறது.
இந்த மின்சாரத்தை சில நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்துவதாக மின்வாரியத்திற்கு புகார்கள் குவிந்து வந்தன. இதையடுத்து அதிரடி சோதனைகளில் மின்வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இன்போசிஸ், காக்னிசன்ட், விப்ரோ, எச்சிஎல் ஆகிய நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கான்டீன் மற்றும் வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள ஏடிஎம் மையங்களுக்கும் மானிய விலை மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கு மின்வாரிய அதிகாரிகள் ஆட்சேபனை தெரிவித்தனராம்.
ஐடி நிறுவனங்ளுக்கு ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 3.50க்கு விற்கப்படுகிறது. வழக்கமான கமர்ஷியல் மின்சாரம் யூனிட் ஒன்றுக்கு ரூ. 5 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரெய்டுகளால் ஐடி நிறுவனங்கள் அதிருப்தி அடைந்துள்ளன.
இந்த ரெய்டுகள் குறித்து தமிழ்நாடு மின்வாரிய தலைவர் சி.பி.சிங் கூறுகையில், இது வழக்கமான சோதனைதான். மின்சாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்களா என்பதை அறியத்தான் இந்த சோதனை.
கான்டீன்களுக்கு மானிய விலை மின்சாரத்தை பயன்படுத்தலாமா என்பது குறித்து சட்ட ரீதியான ஆலோசனைகளை கோரியுள்ளோம். அவற்றுக்கு கமர்ஷியல் மின்சாரத்துக்கான கட்டணத்தை வசூலிப்பதா என்பது குறித்தும் யோசனை செய்து வருகிறோம். உரிய பரிசீலனைகளுக்குப் பின்னர் இவை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications