For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வட மொழிகளை விட தமிழில்தான் கலைநயம் அதிகம்-வியந்த அமெரிக்க பேராசிரியர்: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: வட மொழிகளில் இல்லாத கலைநயம் தமிழ் இலக்கியங்களில்தான் அதிகம் இருப்பதாக அமெரிக்க பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் சுட்டிக் காட்டியுள்ளார் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமென்ற வேண்டுகோளோடு, கழக அரசால் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கை; மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது. அந்த அமைப்பு, கழக அரசின் அறிக்கையினை அனைத்துக் கோணங்களிலும் அணுகி, ஆராய்ந்து; இறுதியில், செம்மொழிக்குரிய அனைத்துத் தகுதிப்பாடுகளும் தமிழுக்கு இருப்பதால், நடுவண் அரசு தமிழைச் செம்மொழியாக அறிவிக்கலாம் என மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது.

இதற்கிடையே, தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று கோரி தமிழகத்திலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களாலும் தீர்மானம் நிறைவேற்றி, அனுப்பி வைக்கப்பட்டன.

23.8.1996 அன்று தமிழகச் சட்டப்பேரவையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் டாக்டர் இ.எஸ்.எஸ்.ராமன் கேட்ட கேள்விக்கு, "இந்தியா முழுவதும் எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் சமஸ் கிருதம், அரேபிய மொழி வரிசையில், தமிழ் மொழிக்கும் அந்தஸ்து வழங்க வேண்டுமென்று வற்புறுத்திப் பிரதமருக்கு முதலமைச்சர் கலைஞர் கடிதம் எழுதியுள்ளார்'' என்று அமைச்சர் தமிழ்க்குடிமகன் பதில் அளித்தார்.

"அரிய இயல்புகள் அனைத்தையும் கொண்டிருந்தாலும், தமிழ் இன்னமும் இந்தியத் திருநாட்டின் செம்மொழியென அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், சமஸ்கிருதம், பாரசீகம், அரேபியம் ஆகிய மொழிகளுக்கு அந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. எனவே தமிழை, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையும், பல்கலைக்கழக மானியக்குழுவும் செம்மொழியென அங்கீகாரம் செய்வதோடு, மேலும் தாமதமின்றி உரிய நிதியுதவியும் அளித்திட வேண்டும்'' என்று 21.8.1996 அன்று; முதலமைச்சர் என்ற முறையில் நான், பிரதமர் தேவ கவுடாவுக்கு கடிதம் அனுப்பினேன்.

முந்தைய பிரதமர்கள் தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்களுக்கு ஏற்கனவே நான் அனுப்பியிருந்த கடிதங்களைச் சுட்டிக்காட்டி; 24.10.1998 அன்று பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு, "சமஸ்கிருதம், பாரசீகம், அரேபியம் போன்று தமிழைச் செம்மொழியென அறிவித்திட வேண்டுமென்ற, உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் நீண்ட காலக் கோரிக்கையினை தங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். நியாயமான அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்'' என்று நீண்ட கடிதம் எழுதினேன்.

கடிதத்துடன் "உயர்தனிச் செம்மொழியாக ஒளிரும் தமிழ்'' எனும் தலைப்பிடப்பட்ட வல்லுநர்குழு அறிக்கையின் நகலையும், தமிழகப் பல்கலைக்கழகங்களில் நிறைவேற்றிய தீர்மானங்களின் நகல்களையும் மீண்டும் அனுப்பி வைத்தேன். தொடர்ந்து பிரதமருக்கும், மத்திய அரசுக்கும், நினைவூட்டுகளும் அனுப்பி வைக்கப்பட்டன.

தலைநகர்த் தமிழ்ச் சங்கம், டெல்லி தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ் அமைப்புகள் சார்பில், தமிழை மத்திய ஆட்சி மொழியாகவும், செவ்வியல் மொழியாகவும் ஏற்றிடக் கோரி; டெல்லியில் 2000, ஏப்ரல் திங்கள் 29, 30 ஆகிய நாட்களில் மாநாடு ஒன்று நடைபெற்றது.

அம்மாநாட்டை, செவ்வியல் மொழிச் செயலாக்கக் குழுத் தலைவர் சாலினி இளந்திரையன் முன்னின்று நடத்தினார். கல்வியாளர்களும், அரசியல் தலைவர்களும், தமிழறிஞர்களும் அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். தமிழக அரசின் சார்பில், அந்த மாநாட்டில் கலந்து கொள்ள தமிழ்வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் அனுப்பி வைக்கப்பட்டார்.

மாநாட்டுக்கு நான் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், "இம்மாநாடு நடத்துவதறிந்து மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். தமிழ் மொழியை மத்தியில் ஆட்சிமொழியாக்கிட வேண்டுமென, அண்ணா காலத்திலிருந்து மைய அரசை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தமிழக அரசின் சார்பில், மைய அரசுக்குக் கோரிக்கைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், புதுடெல்லியில் மாநாடு நடத்தி, அதன் மூலம் இக்கோரிக்கைகளை வலியுறுத்திடும் முயற்சி பெரிதும் பாராட்டத்தக்கதாகும். இம்மாநாடு மைய அரசின் எண்ணங்களை, அறவழியில் ஈர்த்திடும் வண்ணம் எழுச்சியுடன் நிகழ்ந்திட உளமார வாழ்த்துகிறேன்'' என்று குறிப்பிட்டிருந்தேன்.

2000ம் ஆண்டு ஏப்ரலில், டெல்லியில் நடைபெற்ற அந்த மாநாடு தொடர்பான சோக நிகழ்வு ஒன்று இன்னமும் என் இதயத்தில் உறைந்து போய் இருக்கிறது. அந்த மாநாட்டின் வெற்றிக்காக, இரவுபகல் பாராது உழைத்த சாலினி இளந்திரையன், டெல்லிக்கு வந்த தமிழ்ச் சார்பாளர்களை வரவேற்கச் சென்றபோது, சாலை விபத்து ஒன்றில் கார் மோதி, உயிர் துறந்தார்.

கட்சி வேறுபாடின்றி அனைவரையும் அழைத்து, அந்த மாநாட்டினை நடத்த முன்னின்று உழைத்த சாலினி இளந்திரையன் மரணம் அடைந்தது மாபெரும் சோகமாகும். சாலினி இளந்திரையன் உடல், டெல்லி இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டு முடிந்த பின்னர்; அந்த மாநாடு அவரது நினைவாகவே நடத்தப்பட்டது!

பேராசிரியர் இ.மறைமலை கேட்டுக் கொண்டதற்கிணங்க, 2000, ஏப்ரலில் அமெரிக்கத் தமிழறிஞர் பேராசிரியர் ஜார்ஜ் எல்.ஹார்ட், தமிழ்மொழியைச் செம்மொழியெனக் கூறும் நிலைப்பாடு பற்றி வழங்கிய அறிக்கை, உலகெங்கிலும் உள்ள கல்வியாளர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது. ஆங்கிலத்தில் வரையப்பட்ட கருத்தாழம்மிக்க அந்த அறிக்கை தமிழ்ச் செம்மொழி வரலாற்றில், ஆணிமுத்தை ஒத்த அத்தியாயமாகும்.

அமெரிக்காவிலுள்ள பர்க்லி நகரில் அமைந்துள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், 1975-ம் ஆண்டு முதல் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருபவர் ஜார்ஜ் எல்.ஹார்ட். அவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வடமொழி இலக்கியம் பயின்று பட்டம் பெற்றவர். மாடிசன் நகரில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் வடமொழிப் பேராசிரியராகவே பணியாற்றியவர்.

தமிழ் மற்றும் வடமொழி ஆகிய இருமொழி இலக்கியங்களை முறையாகக் கற்றுத் தேர்ந்தவர். அவற்றுடன், ஐரோப்பியச் செம்மொழிகளான லத்தீனம், கிரேக்கம் ஆகிய இருமொழி இலக்கியங்களையும் விரிவாகக் கற்றுத் தேர்ந்தவர். இம்மொழிகள் அனைத்திலும் உள்ள நூல்களை மூலமொழியிலேயே கற்றுணர்ந்தவர்.

தற்கால ஐரோப்பிய மொழிகளின் இலக்கியங்களையும், மொழி ஒப்பியலையும் நன்கு கற்றுத்தேர்ந்தவர். ரஷ்யன், ஜெர்மன், பிரெஞ்சு ஆகிய மொழிகளின் இலக்கியங்களை விரிவாகக் கற்றவர். அவற்றைப் போலவே, தற்கால இந்திய மொழிகளில் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளின் இலக்கியங்களை மூலமொழியிலும், மற்ற எல்லா மொழிகளிலும் உள்ள இலக்கியங்களை மொழியாக்கம் வாயிலாகவும் விரிவாகக் கற்றவர். இந்தி மொழியில் மகாதேவி வர்மா, துளசி, கபீர் ஆகிய பெருமக்களின் இலக்கியப் படைப்புகளையும் விரிவாகப் படித்தறிந்தவர்.

இத்தனை சான்றாண்மையினையும், மொழிப் புலமையினையும், இலக்கியத் திறனறிவினையும் ஒருங்கே பெற்ற பேராசிரியர் ஜார்ஜ் எல்.ஹார்ட், தமிழ் மொழியைச் செம்மொழி எனக்கூறும் நிலைப்பாடு பற்றியும், அதன் தகுதிநிலை பற்றியும் வழங்கிய அறிக்கையில் பொறிக்கப்பட்டுள்ள பொன்னான கருத்துரைகளைக் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்பதற்காக; தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட அந்த அறிக்கையின் முக்கியமான பகுதிகளைப் பின்வருமாறு தருகிறேன்.

இந்தப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் நமது கோவை மாநாட்டுக்கும் வருகை தர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதோ - அவரது அந்த அறிக்கை:-

"தமிழ்மொழி உலகின் மிகவுயர்ந்த செவ்வியல் இலக்கியங்களையும், மரபுச் செல்வங்களையும் பெற்றுத் திகழும் உயர்தனிச் செம்மொழிகளுள் ஒன்று என்பதனை நான் எவ்விதத் தயக்கமும் இன்றித் தெளிவாக அறுதியிட்டுக் கூறுவேன். இவ்வாறு நான் கூற முனைவதற்குக் காரணங்கள் பலவுள்ளன. அவற்றை இனி ஒவ்வொன்றாக எடுத்து விளக்க முற்படுகின்றேன்.

முதலாவதாக, தமிழ்மொழி மிகுந்த பழைமைச் சிறப்பு வாய்ந்த மொழி. ஏனைய தற்கால இந்திய மொழிகளின் இலக்கியங்களுக்கெல்லாம் காலத்தால் மிகவும் முற்பட்ட, ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கும், அதற்கு மேலும் முற்பட்ட பேரிலக்கியங்களைக் கொண்டது தமிழ்மொழி.

தமிழில் மிகப்பழம் பெரும்நூல் தொல்காப்பியம். தொன்மைக்காலக் கல்வெட்டுகளிலிருந்து, இந்நூலின் பகுதிகள் காலத்தால் மிகமுற்பட்டவை எனவும், ஏறத்தாழ கி.மு.200க்கு முன்பே இந்நூல் எழுந்துள்ளது எனவும் தெரிகின்றது. பழந்தமிழரின் பேரிலக்கியங்கள் சங்க இலக்கியங்களாகும்; அவை பத்துப்பாட்டும், எட்டுத் தொகை நூல்களும் பிறவும் ஆகும். அவை, ஏறத்தாழ கி.பி. முதல் இரு நூற்றாண்டுகளில் எழுந்தவை எனக் கொள்ளலாம்.

அவை, வடமொழியில் காளிதாசரின் பேரிலக்கியங்கள் தோன்றுவதற்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றி விட்டன. மதச்சார்பற்ற இந்தியாவில், முதன் முதலில் எழுந்த மதச் சார்பற்ற பெருங்கவிதை இலக்கியத் தொகுப்பு, சங்க இலக்கியங்கள் என்றால் அது மிகையாகாது.

இரண்டாவதாக, இந்தியாவில் தோன்றிய, இந்திய மண்ணிற்கு மட்டுமே தனிச்சிறப்பான இலக்கிய மரபினைக் கொண்டது தமிழ்; இந்த இலக்கிய மரபு வடமொழியிலிருந்து பெறப்பட்டது அன்று என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையைச் சொல்வதானால், தென்னாட்டில் சமற்கிருத மொழியின் செல்வாக்கு வலிமை பெறுவதற்கு முன்னரே, தமிழ் இலக்கியங்கள் தோன்றி விட்டன. அதனால்தான், தமிழ் இலக்கியங்கள் யாவும், வடமொழியில் அல்லது வேறு இந்திய மொழிகளில் உள்ள எந்த இலக்கியத்தையும் போல இல்லாமல், தன்மையால், இயல்பாய் முற்றிலும் மாறுபட்டுத் தனிச்சிறப்புடன் விளங்குகின்றன.

சிறந்த இலக்கியக் கொள்கை, விழுமிய இலக்கண மரபுகள், உயர்ந்த முருகியற் செழுமை, இவை அனைத்திற்கும் மேலாக, தனித்து விளங்கும் தனக்கேயுரிய மிகப்பெரிய இலக்கியச் செல்வம் ஆகியவற்றைக் கொண்டிலங்குவது தமிழ் மொழியாகும்.

வடமொழியிலோ, வேறு எந்த இந்திய மொழியிலோ காணப்படாத, அவற்றிலிருந்து முற்றிலுமாக வேறுபட்டு விளங்குகின்ற, இந்தியப் பெருநாட்டினுக்கு உரித்தான (இந்திய மக்களிடம் காணப்படுகின்ற) கலைநயம் தோய்ந்த ஒருவகை நுட்ப உணர்வைத் தமிழ் இலக்கியங்கள் தம்மகத்தே கொண்டுள்ளன. வளம்மிக்க விரிந்து பரந்த அறிவின் மாட்சியும், மரபும் அவற்றின்கண் பெரிதும் இடம்பெற்றிருக்கின்றன.

மூன்றாவதாக, தமிழ் மொழியின் செவ்வியல் இலக்கியங்களின் தன்மை, அவற்றைச் சமற்கிருதம், கிரேக்கம், லத்தீனம், சீனம், பாரசீகம், அரபு ஆகிய மொழிகளில் எழுந்து விளங்கும் பேரிலக்கியங்களுக்கு நிகராக (அவற்றுடன் ஓரணியில் வைத்து) எண்ணத்தக்க நிலையை, தகுதியை அவற்றுக்கு வழங்குகிறது.

தமிழ் இலக்கியங்களின் சொற்செறிவும், பொருளாழமும், அவற்றின் நுட்பமும் திண்மையும் அகலமும் விரிவும் அவை நுவலும் பல்வேறு பாடுபொருள்களும், களமும் நவீன காலத்திற்கு முந்தைய (இந்திய இலக்கியங்களில், கால அளவில் முற்பட்ட பழந்தமிழ் இலக்கியங்கள் மட்டுமே, சமூகத்தில், தாழ்வுற்ற, பிற்பட்ட, கடைப்பட்ட மக்களையும் கருப்பொருளாகக் கொண்டுள்ளன).

அவற்றின், மனித குலம் அனைத்தையும் வயப்படுத்தும் உலகளாவிய கோட்பாடும், தமிழ் மொழியை உலகம் தழுவிய மிகப்பெரிய செவ்வியல் மொழி, மரபுகள், இலக்கியங்களுடன் ஒருங்கே வைத்து, அவற்றுள் ஒன்று எனப்போற்றும் தகுதி நிலையை அளிக்கின்றன. வான்புகழ் வள்ளுவர் வழங்கிய திருக்குறள், ஒழுக்கநெறிகளைக் கற்பிக்கும் உலகின் தலைசிறந்த அறநூல் என்பதனை அனைவரும் அறிவோம்.

எனினும், இந்த நூல், தமிழில் செவ்வியல் மொழி, இலக்கிய மரபுகளைத் தம்முள் கொண்டு விளங்குகிற, ஒன்றிலிருந்து ஒன்று பெரிதும் வேறுபட்ட பாடுபொருள்களை உடைய, பல்வேறு பெருநூல்களின் தொகுப்பில் (பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள்) ஒன்றாகும். இந்தப் பேரிலக்கியத் தொகை நூல்களின் வாயிலாக, மனிதகுல வாழ்வியலின் ஒவ்வொரு பரிமாணமும், ஒவ்வொரு தோற்றமும் மிக நுட்பமாகவும், விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன; இந்த இலக்கியப் படைப்புகளின் ஆய்வுக்குட்படாத, இவற்றின் ஒளிபடாத வாழ்வியல் துறைகளே இல்லை எனலாம்.

இறுதியாக, தமிழ்மொழி நவீனகால இந்தியப் பண்பாடு, மரபுகளின் முதன்மையான, தனித்துவம் உடைய வாயில்களில் ஒன்றாக விளங்குகிறது. சமற்கிருதக் கவிதை மரபின் மீது தென்னக மரபுகளின் செல்வாக்கைப் பற்றி நான் மிக விரிவாக எழுதியுள்ளேன். இதற்கு நிகராக இன்னொரு முக்கியச் செய்தியுமுண்டு; தமிழில் சங்கத் தொகை நூல்களின் காலத்தில் தோன்றிப் பரவத் தொடங்கிய இந்து சமயச் சார்புடைய, புனிதமான (வழிபாட்டுப்) பேரிலக்கியங்கள் நவீனகால (இந்திய) இந்து சமய வளர்ச்சிக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்துள்ளன.

அந்தப் பக்தி இலக்கியச் சிந்தனைகளும், கருத்துகளும் (தெலுங்கு, கன்னடம், சமற்கிருதம் ஆகிய மொழிகளில் எழுந்த) பாகவத புராணத்திலும், ஏனைய நூல்களிலும் எடுத்தாளப்பெற்று, அவற்றின் வழியாக, இந்தியத் திருநாடு முழுவதும் பரவின. வேதங்களுக்கு ஒப்பானவை' என்று போற்றப்படும் புனிதமான சமய (பக்தி) இலக்கியங்கள் தமிழிலுள்ளன; இவை தமிழுக்கே உரியன. இவை தென்னிந்திய வைணவத் திருக்கோவில்களில் (திருப்பதி முதலானவை) வேத மந்திரங்களுடன் சேர்த்து ஓதப் பெறுகின்றன.

தற்கால இந்தோ-ஆரிய மொழிகளுக்கு எவ்வாறு வடமொழி (சமற்கிருதம்) மூலமொழியாக விளங்குகிறதோ, அதேபோன்று தற்காலத் தமிழ், மலையாள மொழி இலக்கியங்களுக்கு, செவ்வியல் மொழியாகத் திகழ்ந்த தொன்மைத் தமிழே மூலமொழியாக விளங்குகிறது. இந்தோ-ஐரோப்பிய மொழிகளில், சமற்கிருதம் மிகமிகப் பழையது; தொன்மையானது; கால வகையில் சிறிதளவும் மாறாது, மாற்றத்திற்கு இடங்கொடாது, இன்றளவும் பழைமைக்குப் பழைமையாக இருந்து வருகிறது.

அதேபோன்று, திராவிட மொழிகளில் தமிழ் முன்னைப் பழைமைக்கும் பழைமையாகவும் மிகவும் தொன்மையானதாகவும் இருந்து வருகிறது. எனினும், திராவிட மொழிகளின் இயல்பையும், வளர்ச்சியையும் புரிந்துகொள்ள மொழியியலாளர்கள் நாடவேண்டியதும், அவர்களுடைய ஆய்வுகளுக்கு உதவும் உரைகல்லாகத் திகழ்ந்து வருவதும் தமிழேயாகும்.

ஒரு மொழி செவ்வியல் மரபு உடையது என்று அழைக்கப்படுவதற்குத் தகுதிபெற வேண்டுமெனில், அது பல்வேறு அடிப்படை விதிமுறைகளுக்குப் பொருந்துவதாக இருத்தல் வேண்டும்; அவையாவன: அது தொன்மை மிக்கதாக, பழைமைச் சிறப்பு வாய்ந்ததாக இருத்தல் வேண்டும்; அது இன்னொரு மொழி மரபில் கிளைத்து வளர்ந்ததாக இல்லாமல், தனக்கேயுரிய தனித்துவ முடைய மொழி மரபினைப் பெற்றதாகவும், அம்மொழி மரபு பெரிதும் தானே படைத்த இலக்கியச் செழுமையில் வளர்ந்ததாகவும் இருத்தல் வேண்டும்; இதற்கெல்லாம் மேலாக அம்மொழி விரிந்து, பரந்து வளம்செறிந்த தொன்மை வாய்ந்த பேரிலக்கியச் செல்வத்தைக் கொண்டதாகவும் இருத்தல் வேண்டும். இந்தியாவின் ஏனைய தற்கால மொழிகளைப் போலல்லாமல், தமிழ் இம்மூன்று அடிப்படைத் தேவைகளையும் ஒருங்கே நிறைவு செய்கின்றது.

தமிழ் ஒரு செவ்வியல் மொழி' என்ற கருத்தை நிலைநாட்டுவதற்காக நான் இதைப்போன்று ஒரு கட்டுரை எழுதவேண்டியுள்ளது என்ற எண்ணமே எனக்கு இயல்புக்கு மாறானதாகத் தோன்றுகிறது. இச்செயல் எப்படியிருக்கிறது என்றால், இந்தியா ஒரு மிகப்பெரிய நாடு, இந்துசமயம் உலகின் மிகப்பெரிய சமயங்களில் ஒன்று' என்னும் கூற்றை நிலைநாட்ட முற்படுவது போன்றுள்ளது. தமிழ் செவ்வியல் மொழி' என்னும் தகுதி நிலையை மறுக்க முனைவது, இந்தியப் பண்பாட்டின் பெருமைக்கும், வளமைக்கும் இன்றியமையாத மையக்கூறாக விளங்கும் - உயிராதாரமாக விளங்கும் - உறுப்பு ஒன்று அதற்கு இருக்கக்கூடாது' என்று மறுக்க முனைவதற்கு ஒப்பானதாகும்.''

பேராசிரியர் ஜார்ஜ் எல்.ஹார்ட்டின் இந்த அறிக்கையில் உள்ள கருத்துக்கள் இந்திய கல்வியாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு; தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எழுச்சியையும் ஏற்படுத்தியது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X