கோவில் உண்டியல் திருட்டு-பீகார் வாலிபர் கைது
சென்னை: சென்னை சூளையில் உள்ள கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் உள்ளிட்டவற்றைத் திருடிய பீகாரைச் சேர்ந்த வாலிபரைப் போலீஸார் கைது செய்தனர்.
சூளையில் அங்காள பரமேஸ்வரி காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இப்பகுதியில் பிரபலமான கோவில் இது. இங்கு நேற்று கிருத்திகையையொட்டி ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சாமி கும்பிட்டனர்.
பின்னர் இரவில் கோவில் மூடப்பட்டது. இந்த நிலையில் அதிகாலை 3 மணியளவில் கோவிலுக்குள்ளிருந்த சத்தம் கேட்டது. அந்த சமயத்தில் அந்த வழியாக, வேப்பேரி காவல் நிலைய பெண் சப்- இன்ஸ்பெக்டர் ரோந்து வந்தார்.
சத்தம் கேட்டு சந்தேகமடைந்த அவர் கோவிலுக்கு வந்தார். கோவில் கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில் உள்ளேயிருந்து சத்தம் வந்ததால் திருடர்கள் உள்ளே இருக்கலாம் என அவர் சந்தேகமடைந்தார்.
இதையடுத்து சக போலீஸாருடன் அவர் வேறு வழியாக உள்ளே புகுந்தார். அப்போது சிலர் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை எடுத்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது.
திடீரென போலீஸாரைப் பார்த்ததும் அந்தக் கும்பல் அதிர்ச்சி அடைந்து தப்பி ஓட முயன்றது. ஆனால் போலீஸார் அவர்களை மடக்கினர்.
இருப்பினும் ஒரு நபர் மட்டும் சிக்கினார். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்ட நபரின் பெயர் லட்சுமண். பீகாரைச் சேர்ந்தவர். 19 வயதான இவர் மொசைக் வேலைக்காக தமிழகம் வந்துள்ளார். வேலை இல்லாமல் இருந்தாதல் சாப்பிடக் கூட வழியில்லாத நிலை. இதனால் கோவில் உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்டதாக போலீஸாரிடம் லட்சுமண் தெரிவித்தார்.
இருப்பினும் இவருக்கு வேறு திருட்டுக்களில் சம்பந்தம் உள்ளதா என்பதை அறிய அவரது கைரேகையை போலீஸார் எடுத்து சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
உண்டியலில் ரூ. 5000 அளவில்தான் பணம் இருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் உண்டியலில் குறைந்தது 1 லட்சம் ரூபாயாவது இருக்கும் என பக்தர்கள் கூறுகிறார்கள்.
இது இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவிலாகும். ஆனால் அறங்காவலர்களோ, கோவிலுக்கு வாட்ச்மேனோ கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications