மீண்டும் புலிகள் போர் தொடுப்பார்கள்- எனவேதான் இலங்கை படைகளை பெருக்கி வருகிறது: நெடுமாறன்
தஞ்சாவூர்: பிரபாக ரன் உயிரோடுதான் இருக்கிறார். மீண்டும் விடுதலைப் புலிகள் போர் தொடுப்பார்கள் என்று இலங்கை கருதுகிறது. அதுதான் உண்மையும்கூட. இதனால்தான் தனது ராணுவ பலத்தை பெருக்கி வருகிறது என்று கூறியுள்ளார் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன்.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகத் தமிழர் பேரமைப்பு 7-வது ஆண்டு நிறைவு விழா, ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் மாநாட்டின் நிறைவாக நெடுமாறன் பேசியதாவது:
இந்திரா- எம்.ஜி.ஆருக்குப் பின் மாறிய சூழல்
இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தியும், தமிழக முதல்வராக எம்.ஜி.ஆரும் இருந்த போது விடுதலைப் புலிகளுக்கு வேண்டுமளவுக்கு உதவிகள் செய்யப்பட்டன. ஈழத் தமிழர்கள் மீது அவர்கள் அக்கறை கொண்டிருந்தனர். ஈழப் போராட்டத்துக்கு எம்ஜிஆர் பேருதவி செய்தார். ஆனால், இவர்கள் மறைவுக்குப் பிறகு சூழல் மாறியது.
தமிழகத்தில் பிரபாகரனைக் கொல்ல "ரா' அமைப்பு சதித் திட்டம் தீட்டியது. இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு அமைந்தால், இந்தியாவில் பல்வேறு இனவாரியாக தேசியப் பிரிவுகள் ஏற்பட்டு விடும் என்று அஞ்சிதான், தனி ஈழத்துக்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்தது என்று கருதுகிறேன்.
ஈழப் போருக்காக சாதாரண ஈழத் தமிழன் செய்த தியாகங்களை பிரபாகரனின் குடும்பமும் செய்துள்ளது. அதனால்தான் பிரபாகரனை மாபெரும் தலைவராக அவர்கள் கருதுகின்றனர்.
1980-ல் இலங்கை ராணுவத்தில் 40,000 வீரர்கள்தான் இருந்தனர். ஈழப் போர் உச்சக்கட்டத்தை எட்டிய போது, 2 லட்சம் வீரர்கள் இலங்கை ராணுவத்தில் இருந்தனர். போர் முடிந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு லட்சம் வீரர்களை இலங்கை அரசு ராணுவத்தில் சேர்த்துள்ளது.
எதிரிகளைவிட கொடியவர்கள் துரோகிகள்தான். ஈழப் போரில் தமிழினத் துரோகம் செய்தவர்களை உலகத் தமிழர்கள் அனைவரும் அடையாளம் காண வேண்டும். அவர்களை மறந்துவிடக் கூடாது என்றார்.
விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் நல்லகண்ணுவுக்கு உலகப் பெருந்தமிழர் விருது அளிக்கப்பட்டது.
பின்னர் நல்லகண்ணு பேசுகையில், ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்த காரணத்துக்காக முசோலினியின் கைகளைப் பற்றிக் குலுக்குவதற்கு மறுத்தவர் நேரு. ஆனால், இன்றைக்கு இந்தியாவில் உள்ள காங்கிரஸ் தலைமை அதற்கு நேர் தலைகீழாக இருக்கிறது.
தமிழகத்தில் உள்ள தமிழர்கள் கோரிக்கை வைப்பதற்கு முன்னதாக, ஈழத்தைச் சேர்ந்த விபுலானந்த அடிகள், பாரதிக்கு விழா எடுக்கப் பரிந்துரைத்தார். தமிழினம் மீது தணியாத அக்கறை கொண்டிருந்த ஈழத் தமிழர்கள் இன்று இனப் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
ஈழ பிரச்னையிலும், கச்சத்தீவு பிரச்சனையிலும் இந்திய அரசின் அரசியல் அணுகுமுறைகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது.
இந்த அணுகுமுறைகள் தமிழக மக்களுக்கு விரோதமானது மட்டுமன்றி, இந்திய இறையாண்மைக்கும் எதிரானது. பிரச்னைக்கு தீர்வு காணத் தவறிய தமிழக அரசையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது.
ஈழப் போராட்டம் முடிந்துவிடவில்லை. ஈழ பிரச்னை தீர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இறுதிவரை துணை நிற்கும் என்றார் நல்லகண்ணு.












Click it and Unblock the Notifications