'2010ன் தூய விடியலில் புதுமை காண்போம்!'
சென்னை: 2010 ஆங்கில புத்தாண்டு பிறப்பதையொட்டி நாட்டு மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள செய்தியில், '2009ல் நடைபெற்ற எல்லா தேர்தல்களிலும் நமது கூட்டணிக்கு தமிழக மக்கள் பெருவாரியாக வாக்களித்து வெற்றியைத் தந்திருக்கிறார்கள்.
2010ம் ஆண்டில்தான் தமிழக சட்டப் பேரவைக்கான புதிய கட்டிடம் திறக்கப்படவுள்ளது. பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் மிகப்பெரிய அளவிலே கட்டப்பட்டு, அதுவும் திறக்கப்பட உள்ளது.
தமிழ்மொழியின் பெருமையை, தமிழ்ப் பண்பாட்டின் மேன்மையை மேதினியில் மீண்டும் நிலைநாட்டிடும் திருப்பணியாக கோவை மாநகரில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்திட அரசு ஆயத்தமாகி வருகிறது.
இந்த அரசு 2006க்குப்பின் புதிய வரி விதிப்பு, எதுவும் இல்லாமலேயே, வரிச்சலுகைகள் பல வழங்கி, ஏராளமான நலத்திட்டங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், அரசாணைகள் வாயிலாக 35 புதிய தொழிற்சாலைகள் உட்பட பல்வேறு கட்டமைப்பு வசதிகளை செய்துள்ளது.
புத்தாண்டு பிறக்கும் இந்நாளில் 'புதுமை காண்போம், புதியன படைப்போம், புதிய வரலாற்றை உருவாக்குவோம்' என அன்பிற்கினிய தமிழக மக்களை அழைத்து, அனைவருக்கும் எனது உளமார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன் என்று கூறி உள்ளார்.
தூய விடியல் வரட்டும்-ஜெயலலிதா:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், புத்தாண்டு திருநாளில் உலக மக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மக்கள் கொடுமையான துன்பங்களிலிருந்து விடுதலை பெற்று, தூய விடியலையும், மகிழ்வான வாழ் நிலையையும், இனிமையான நலன்களையும் பெறக்கூடிய ஆண்டாக, அன்பு, கனிவு, மனித நேயம், மத நல்லிணக்கம் ஆகியவை தழைத்தோங்கக் கூடிய ஆண்டாக 2010ம் ஆண்டு விளங்கட்டும்.
1.1.2010 அன்று புத்தாண்டை கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்வதில் உவகை அடைகிறேன் என்று கூறியுள்ளார்.
இரவுக்குப்பின் விடியல்-வைகோ:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது வாழ்த்துச் செய்தியில், இருளுக்குப்பின் வெளிச்சம்; இரவுக்குப்பின் விடியல், வாட்டும் பனிக்குப்பின் வளம் தரும் வசந்தம் எனும் நியதியில் நம்பிக்கை கொள்வோம்.
சிலுவையில் அறையப்பட்டு ரத்தம் சிந்திய ஏசுநாதர் கொடூரமான ரணங்களை சிலுவைப்பாடாக சுமந்த போதிலும் அவர் பிறந்த நாளில் இருந்து 8வது நாளையே கால ஓட்டத்தை தீர்மானிக்கும் வருடத்தின் முதல் நாளாக உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் ஜனநாயகம் காக்கவும், அனைத்து தரப்பு மக்களின் வாழ்வில் வளம் காணவும், உரிய சூழ்நிலை மலர 2010 பாதை அமைக்கட்டும் என்று கூறியுள்ளார்.
துதிபாடல் நோக்கமாக இருக்கக் கூடாது-விஜயகாந்த்:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், உலகத்தில் உள்ள மொத்த ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் உள்ளனர். மலை வளம் முதல் கடல் வளம் வரை அனைத்து வளங்களும் உள்ள இந்தியா, ஏழைகளின் தொகையில் முதலிடம் வகிக்கிறது.
எந்த வளமும் இல்லாத சிங்கப்பூர் ஆசியாவிலேயே பணக்கார நாடாக உள்ளது. எல்லா வளங்கள் இருந்தாலும் நல்லாட்சி இல்லையென்றால் பயனில்லை என்று வள்ளுவர் அன்றே கூறியுள்ளார்.
1993 முதல் 2004ம் ஆண்டு வரை உணவு பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68 சதவீதத்திலிருந்து 76 சதவீகிதமாக உயர்ந்துள்ளது. கடினமாக உழைத்திடும் உத்தமன் வாழ முடியாமல் தவிக்கிறான்.
தன்னை உருக்குலைக்கும் உழைப்பு தனக்கு வாழ்வளிக்கவில்லை என்றாலும் உழைக்காமலே ஊரை அடித்து உலையில் போடுபவன் பளபளப்பாக வாழ பயன்படுகிறது.
புத்தாண்டு விழாவை ஐந்து நட்சத்திர ஓட்டலில் ஒருநாள் கொண்டாட பணக்காரர்கள் செலவழிக்கும் பணம், ஆண்டு முழுவதும் பாடுபட்டாலும் ஏழைக்குக் கிடைப்பதில்லை.
விழா என்றால் பணக்காரர்களுக்கு மகிழ்ச்சி. ஆனால் ஏழைகளுக்கோ அதை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்கிற அதிர்ச்சி.
இத்தகைய ஏற்றத்தாழ்வு அகற்றப்பட்டு, எல்லோரும் மனமகிழ்ச்சியோடு விழா கொண்டாடும் வாய்ப்பை சமுதாயத்தில் உருவாக்குவதே நம்முன் உள்ள பணியாகும்.
எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் வேலை, எல்லோருக்கும் நல்வாழ்வு, எல்லோருக்கும் சமஉரிமை கிடைக்க இந்த புத்தாண்டு நாள் அடிக்கல்லாக அமையட்டும்.
ஆளவந்தார்களின் துதிபாடுவது ஒரு ஆட்சியின் நோக்கமாக இருக்கக் கூடாது. பாமர மக்களின் முகத்தில் புன்னகை தவழச் செய்வதே ஒரு ஆட்சியின் இலக்கணமாகும்.
அத்தகைய மக்களாட்சி அமைய சூளுரை மேற்கொள்ளுவோம், இந்த புத்தாண்டிலாவது, பொழுது புலரட்டும் புதுவாழ்வு மலரட்டும் என்று தமிழ்நாடு மக்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
உலக வெப்பமயமாதலுக்கு தீ்ர்வு-சரத்குமார்:
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது வாழ்த்து செய்தியில், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் ஆண்டாக 2010 திகழ வேண்டும்.
உலக வெப்பமயமாதல் என்னும் அச்சுறுத்தலுக்கு தீர்வு காணப்பட வேண்டும். மத நல்லிணக்கம், சகோதரத்துவம் மேலோங்கி அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் நமது ஆற்றல் அனைத்தையும் வெளிப்படுத்தி தேசத்தின் வளர்ச்சிக்கு ஒன்றுபட்டு உழைக்க சூளுரை ஏற்போம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications