ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு பொது தலைநகராகுமா ஹைதராபாத்?

ஹைதராபாத்தைக் குறி வைத்துதான் இப்போது தெலுங்கானா போராட்டக்காரர்களும், ஆந்திராவின் இதரப் பகுதியினரும் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஹைதராபாத் எங்களுக்கு வேண்டும். அது இல்லாத தெலுங்கானாவை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்று தெலுங்கானா போராட்டக்காரர்கள் கூறி வருகின்றனர்.
ஐக்கிய ஆந்திராவை வலியுறுத்தி வரும் கடலோர பிராந்தியம் மற்றும் ராயலசீமா பகுதியினர் ஹைதராபாத் தெலுங்கானாவுக்கு மட்டும் சொந்தமல்ல, அங்கு ஆந்திராவின் அனைத்துப் பகுதியினரின் உழைப்பும் அடங்கியுள்ளது. எனவே ஹைதராபாத்தை விட்டுத் தர முடியாது என்று கூறி வருகின்றனர்.
இந்த சிக்கலைத் தீர்த்து விட்டால், தெலுங்கானா மாநிலத்தை உருவாக்குவதிலும் சிக்கல் தீரும் என மத்திய அரசு கருதுகிறது.
இதனால் ஹைதராபாத்தை இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக மாற்றுவது, இந்த சிறப்புச் சலுகையை 11 வருடங்கள் வரை நீடிப்பது. அதன் பின்னர் தெலுங்கானாவுக்கென தனி தலைநகரை உருவாக்குவது என்ற ரீதியில் மத்திய அரசு யோசித்துக் கொண்டிருக்கிறதாம்.
இதுகுறித்து ராயலசீமா பகுதியைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரான திவாகர் ரெட்டி கூறுகையில், ஹைதராபாத் ஒட்டுமொத்த ஆந்திராவுக்கும் சொந்தமானது என்றார்.
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவோ, ஹைதராபாத் குறித்து பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை. வரலாற்று ரீதியாக தெலுங்காவின் ஒரு அங்கம்தான் ஹைதராபாத். ஹைதராபாத் இல்லாத தெலுங்கானா என்பது, தலையில்லாத முண்டம் போல என்றார்.
இன்னொரு தெலுங்கானா எம்.பி. கூறுகையில், ஹைதராபாத்தில் உள்ள அடிப்படைக் கடடமைப்புகளை ஆந்திராக்காரர்கள் பயன்படுத்திக் கொண்டு போகட்டும். அதைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. ஆனால் அதை நீண்ட நாள் அனுமதிக்க முடியாது என்றார்.
தெலுங்கானா பகுதியின் வளத்தையும், நலனையும், சொத்துக்களையும் கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதியினர் நீண்ட காலமாக கொள்ளையடித்துக் கொண்டிருப்பதாக தெலுங்கானாவுக்கு ஆதரவான கல்வியாளர்களும், சிந்தனையாளர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து உஸ்மானியா பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் ஒருவர் கூறுகையில், தெலுங்கானாவைச் சேராத ஆந்திர மக்கள் நீண்ட காலமாக தங்களது வர்த்தக நலனுக்காக தெலுங்கானாவை சுரண்டி வருகின்றனர். தெலுங்கானாவின் வளர்ச்சிக்காக எதையுமே அவர்கள் செய்யவில்லை.
ஹைதராபாத்தில் உள்ள சில பாலங்கள் மட்டுமே சுதந்திரக்குப் பின்னர் உருவாக்கப்பட்டவை ஆகும். மற்றபடி சட்டசபைக் கட்டடம், உயர்நீதிமன்றக் கட்டடம், அரசு மருத்துவமனை, பல்கலைக்கழகங்கள் என அனைத்துமே நிஜாம் காலத்தில் கட்டப்பட்டவையே. அதைத்தான் இன்று வரை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்றார்.
ஹைதராபாத்தை விடுவதில்லை என்று இரு தரப்புமே பிடிவாதமாக இருப்பதால், மத்திய அரசு தனது புதிய சமரசத் திட்டத்தை எப்படி அமல்படுத்தப் போகிறது என்பது பெரும் சந்தேகத்திற்குரியதாக உள்ளது.












Click it and Unblock the Notifications