பொன்சேகாவை ஆதரிப்போம் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

Sambanthan and Fonseka
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் ஈழத் தமிழர்கள் மீது கொத்து குண்டுகள் உள்ளிட்டவற்றை வீசி கொடூரமாகக் கொன்றழித்த ராணுவத்தின் முன்னாள் தளபதியான சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

தனது முடிவை நேற்று இக்கூட்டமைப்பு அறிவித்தது. நாடாளுமன்றக் கட்டட வளாகத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பொன்சேகாவுக்கு ஆதரவு தருவதாக கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இந்த தீர்மானத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.

அதிபர் மஹிந்த ராஜபக்ச தமது நான்கு ஆண்டு ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் விஷயத்தில், உரிய முனைப்புகளை மேற்கொள்ளவில்லை என்ற அடிப்படையில் அவரை ஆதரிக்கவில்லை எனக் குறிப்பிட்ட சம்பந்தன், தேர்தலை பகிஷ்கரித்தால், அதன் மூலம் மீண்டும் ராஜபக்ச அதிபராக வருவதற்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டார்.

எனவே அவர் மீண்டும் பதவிக்கு வருவதை தடுக்க க்கூடியவர் சரத் பொன்சேகா என்ற அடிப்படையிலேயே அவருக்கு ஆதரவளிக்க முன்வந்ததாக சம்பந்தன் தெரிவித்தார்.

மேலும் ராஜபக்சவை விட பொன்சேகா தமிழர்களின் பிரச்சினையை நன்கு உணர்ந்திருப்பதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டார்.

பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கை...

அதிபர் தேர்தல் வேட்பாளர்களான ராஜபக்சே, பொன்சேகா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்தி, தமிழ் பேசும் மக்களின் உடனடித் தேவைகள் குறித்தும் தேசிய பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதும் நிலைத்து நிற்கக் கூடியதுமான அரசியல் தீர்வு ஒன்றைக் காணுவது குறித்தும் அவர்களின் கருத்துக்களைத் தெரிந்து கொண்டோம்.

ராஜபக்சே மீண்டும் ஒரு தடவை பதவி வகிப்பதற்கான ஆணையை இத்தேர்தல் மூலம் கோரி, நாட்டு மக்களிடம் விண்ணப்பித்திருப்பதற்கு ஆதரவளிக்க முடியாது. ஆதரவளிக்க கூடாது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த அபிப்பிராயமாகும்.

ராஜபக்சே மீண்டும் ஒரு தடவை பதவி வகிப்பது நாட்டு மக்களின் சிறந்த நலன்களை பேணுவதற்கும் குறிப்பாக வடக்கு கிழக்கில் உள்ள தமிழ்ப் பேசும் மக்களின் சிறந்த நலன்களைப் பாதுகாப்பதற்கும் உதவாது என்பதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாகும்.

தேசிய பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு ஒன்றைக் காண்பது குறித்து ஒரு முன்னேற்றமும் காணப்படாத அதே வேளை ராஜபக்சேவின் தீர்மானங்களும் செயற்பாடுகளும் பின்னோக்கியதாகவே காணப்படுகின்றன.

ராஜபக்சே அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகள் தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களில், அம்மக்களின் கலாசார மற்றும் மொழி அடையாளத்தைப் பாதுகாப்பதற்குத் தீங்கு விளைவிப்பதாகவே அமைகின்றன.

ரகசியமாகவும் வெளிப்படைத் தன்மையற்றவிதமாகவும் அமையும் இந்த நடவடிக்கைகள் தமிழ்ப் பேசும் மக்களுக்குச் சமத்துவத்தையும் நீதியையும் மறுக்கும் செயலாகவே உள்ளது. அத்துடன் தமிழ்ப் பேசும் மக்களின் இன, மத, விகிதாசார நலன்களைப் பாதிக்கும் வகையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும், தேசிய பிரச்சினைக்கு அமைதி தீர்வு காண்பதற்குக் குந்தகத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கின்றன.

ராஜபக்சே அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் நாட்டில் வாழ்கின்ற மக்களிடையே இன ஒற்றுமையைக் கட்டி எழுப்புவதற்கும் சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சிக்கு ஊக்கமளிப்பதாகவும் அமையாது.

கடந்த நான்கு ஆண்டுகளாக ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வு ஒன்றை தேசிய பிரச்சினைக்குக் காண்பதில் ஏற்படும் தாமதம், தமிழ்ப் பேசும் மக்களின் வரலாற்றுப் பாரம்பரிய வாழ்விடம் தொடர்பான ராஜபக்சே அரசாங்கத்தின் மறைமுக நிகழ்ச்சி நிரலை நடைமுறைபடுத்துவதாகும்.

தமது தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ் மக்களின் ஜனநாயகத் தீர்ப்பை முற்றாகப் புறக்கணித்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பை முற்றாக ஓரங்கட்டி, தன்னிடம் அடிபணிந்து போகத் தயாராக இருக்கும் நண்பர்களைத் தமிழ் மக்களின் தலைவர்களாக வெளிகாட்டும் நிகழ்ச்சி நிரலை ராஜபக்சே முன்னெடுத்து வருகின்றார்.

அவ்வாறான நபர்களுடன் மாத்திரமே வேலை செய்வதற்கு ராஜபக்சே தயாராக இருக்கின்றார். இதன் மூலம் தமிழ் மக்களால் ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகளை மாத்திரமல்ல, தமிழ் மக்களையும் அவர் புண்படுத்தியுள்ளார். இவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டால் ஏற்றுக்கொள்ள முடியாத இந்நிலவரம் தொடரவே உதவும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், என். ரவிராஜ், கே.சிவனேசன் ஆகியோர் ராஜபக்சேவின் ஆட்சிக்காலத்தில் அவரின் அரசாங்கத்துடன் இணைந்திருந்த சக்திகளால் படுகொலை செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாதபடி அரசாங்கத்தைப் பலப்படுத்துவதற்காக அரசாங்கத்துடன் இணைந்திருந்த சக்திகளால் இரு முறை தடுக்கப்பட்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயக மற்றும் செயற்திறனை உள்ளடக்கிய செயற்பாடுகள் மீதான பெரும் தாக்குதல்கள் குறித்து அரசாங்கத்தின் அணுகுமுறை உணர்ச்சியற்றதும் அக்கறையற்றதுமாக அமைந்திருந்தது.

மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விடயங்களில் ராஜபக்சேவின் செயற்பாடு கவலை தருவதாக உள்ளது. சட்டத்திற்கு அப்பாற்பட்ட கொலைகள் மற்றும் கட்டாயப்படுத்தி காணாமற் போகச் செய்தல் ஆகியன சர்வ சாதாரணமாக இடம் பெற்றிருக்கின்றன. இவற்றால் மோசமாகத் தமிழ் மக்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆட்சி அதிகார அமைப்புக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. சட்டம், ஒழுங்கு நடைமுறைப்படுத்தல் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளன. ஊழல் கட்டுக்கடங்காமல் போயுள்ளது. சட்டம் - ஒழுங்கு மற்றும் நல்லாட்சி ஆகியன கீழ் மட்டத்திற்குச் சென்று விட்டன.

நாட்டில் உள்ள அனைத்து மக்களும் இந்த துக்ககரமான நிலவரத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் பேசும் மக்கள் தான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காரணங்களுக்காகத் தான் மேலும் ஒரு தடவை பதவி வகிப்பதற்கான ஆணையைத் தருமாறு அதிபர் விடுத்துள்ள கோரிக்கையை மறுப்பது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏகோபித்த முடிவாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு அரசியல் அமைப்புக்களைக் கொண்ட ஓர் அணியாகும். தமிழ் பேசும் மக்களின் கூடிய நலன் கருதி செயற்படுவது அதிமுக்கியமானது எனக் கருதப்படுகிறது.

அதிபர் மேலும் ஒரு தடவை பதவியில் இருக்க அனுமதிப்பதைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏகோபித்து எதிர்ப்பதனால் பொது எதிர்க்கட்சி வேட்பாளர் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொள்கின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சம்பந்தனிடம் தான் கையெழுத்திட்டு ஒரு உத்தரவாதத்தை அளித்தார் பொன்சேகா.

அது..


1. சிவில் நிர்வாகத்தையும் இயல்பு நிலையையும் ஏற்படுத்துதல்:

- கிராமசேவையாளர் அலுவலகம் முதற்கொண்டு அனைத்து சிவில் நிர்வாகக் கட்டமைப்புகளையும் மீள ஏற்படுத்துதல் ராணுவ, போலீஸ் மற்றும் அரசியல் தலையீடுகளிலிருந்து விடுவித்தல்.

- ஒவ்வொரு பிரதேசத்திற்கும் அதன் பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவொன்று அமைக்கப்படும்.

- உடனடியாக ஜனாதிபதி செயலகக் குழு ஒன்றை அமைத்தல்.

- தேசியப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்ட பின்னர், பாதுகாப்புப் படையினரைக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் மாத்திரம் நிறுத்துதல். பாதுகாப்புப் படையினரை மீள நிறுத்தும் போது உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல்.

- பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீஸாரின் தலையீடு இன்றி அனைவரும் நடமாடுவதற்கான சுதந்திரத்தை உறுதி செய்தல்.

- தமிழ் பேசக்கூடிய போலீஸாரை சாத்தியமான அளவிற்குப் பணியில் ஈடுபடுத்தல்.

- துணை ராணுவக் குழுவினர் மற்றும் ஆயுதக் குழுக்களைத் தடைசெய்தல்.

- அனைத்துத் துணை ராணுவக் குழுவினரையும் ஆயுதமேந்திய குழுவினரையும் உடனடியாகக் கலைத்தல்.

- பொதுமக்கள் வாழும் பகுதிகளை ஆயுதங்கள் அற்ற பகுதிகளாக்குதல்.

- படையினர், போலீஸாரைத் தவிர அனுமதிப்பத்திரம் வைத்துள்ளவர்கள் மாத்திரம் துப்பாக்கிகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுவர்.

- இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல், புனர்வாழ்வளித்தல்.

- நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பிரிவினர் ஊடாக இந்த நடவடிக்கையைத் துரிதப்படுத்தல்.

- இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்படுவர். வீடுகள் அழிக்கப்பட்டவர்களுக்கு வேறு தங்குமிடங்கள் வழங்கப்படும். மேலும் தம்மை மீளக்கட்டியெழுப்பவும், வாழ்வாதாரத்தை மீண்டும் ஏற்படுத்தவும் நிதியுதவி வழங்கப்படும்.

- அத்தியாவசிய உணவு வழங்கப்படும். மருத்துவ நிலையங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் போன்ற சமூக உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

- தற்போது பாதுகாப்புப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனைத்துத் தனியார் நிலங்களும் உரியவர்களிடம் மீள ஒப்படைக்கப்படும். மேலே குறிப்பிடப்பட்ட குழுக்கள் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்.

- கட்டடங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான நஷ்டஈட்டை அரசு வழங்குவதற்கான திட்டமொன்றைக் குழு முன்வைக்கும்.

- மீன் பிடிப்பதற்கான முழுமையான உரிமை வழங்கப்படும்.

- பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக மீன்பிடித் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் கடற்படையைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்படும்.

- பயணிகள் செல்வதற்கும் பொருள்கள், விவசாயம், மீன்பிடித்துறைப் பொருட்கள் கொண்டுசெல்வதற்குமான சகல கட்டுப்பாடுகளும் நீக்கப்படும்.

- கப்பம் பெறுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

- ரயில் சேவை, யாழ். குடாநாட்டிற்குள் எவ்வித தாமதமுமின்றி மீண்டும் ஏற்படுத்தப்படும்.

- கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்திற்கான சகல தடைகளும் அகற்றப்படும். இவற்றிற்கான கட்டணங்களும் குறைக்கப்படும்.

- பருத்தித்துறையிலிருந்து திருகோணமலை வரை தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் புதிய ரயில் பாதை அமைக்கப்படும்.

- யுத்தம் காரணமாக அங்கவீனர்களானவர்களுக்கு விசேட நிவாரணத்திட்டம் முன்னெடுக்கப்படும்.

- குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரமில்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ஒருமாதத்திற்குள் விடுவிக்கப்படுவர்.

- யுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்குப் பொதுமன்னிப்பு அடிப்படையில் புனர்வாழ்வளித்தல்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+