இந்திய தேர்தல்-விரைவில் என்ஆர்ஐ ஓட்டுபோடலாம்!
டெல்லி: வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க விரைவில் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
ஜனவரி 7 முதல் 9ம் தேதி வரை மத்திய அரசு வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக அனுசரித்து வருகிறது. இதையொட்டி டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் இன்று கலந்துகொண்டார்.
மன்மோகன் கூறுகையில், இந்திய தேர்தலில் பங்கேற்க வெளிநாடு வாழ் இந்தியர்கள் விரும்புவதை நான் அறிவேன்.
இதுகுறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. அடுத்த பொதுத் தேர்தலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஓட்டுபோட முடியும் என நம்புகிறேன்.
உண்மையில், இதைத்தாண்டி வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் நான் கேட்பது என்னவென்றால், ஏன் நீங்கள் இந்தியாவுக்கே திரும்பி வந்து அரசியலுலும், பொதுவாழ்விலும் ஈடுபடக் கூடாது என்பது தான்.
தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் வணிகம் என பல துறைகளிலும் அயல்நாடுகளில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தும் நீங்கள் இந்திய அரசியலில் ஈடுபட்டு திறமைகளை வெளிப்படுத்தலாம்.
இந்தியாவில் கொள்கைகள், திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படுவதில்லை, பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன என்பது போன்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் எனக்கு புரிகிறது.
ஆனால் இந்தியா முன்னேறும் போது அதன் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்துக்கொண்டு தான் முன்னேறியாக வேண்டும். அதற்கு நாடு செலுத்தியாக வேண்டிய விலை தான் இந்த இடைஞ்சல்கள்.
இந்தியா ஆடி அசைந்து நகரும் யானை என்பது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் நம்முடைய ஒவ்வொரு அடியும் உறுதியாகவும், முத்திரை பதிப்பதாகவும் அமையும் என்றார்.












Click it and Unblock the Notifications