ஏமன் வடிவில் 'எமன்': பீதியில் யுஎஸ் கடற்படை!

Subscribe to Oneindia Tamil

Al Qaeda
நைரோபி: அமெரிக்க போர்க் கப்பல்கள் குறித்த தகவல்களை ஏமனிலிருந்து செயல்படும் அல் கொய்தா அமைப்பு திரட்டத் தொடங்கியிருப்பதால், ஏடன் வளைகுடா, அரபிக் கடல், பெர்சிய வளைகுடா ஆகிய பகுதிகளில் நிறுத்தி வைத்திருக்கும் தனது போர்க் கப்பல்களை உஷார்படுத்தி வைத்துள்ளது அமெரிக்கா.

ஏமன் நாட்டிலிருந்து செயல்பட்டு வரும் அல் கொய்தாவினர், தங்களது போர்க் கப்பல்களையும், வீரர்களையும் குறி வைத்துத் தாக்கக் கூடும் என அமெரிக்க கடற்படை அஞ்சுகிறது.

அல் கொய்தா ஆதரவு இணையதளம் ஒன்றில் அமெரிக்க போர்க் கப்பல்களை அல் கொய்தா குறி வைத்திருக்கும் தகவல் டிசம்பர் 31ம் தேதி வெளியானது. அதில், அமெரிக்க போர்க் கப்பல்கள், அதில் உள்ள வீரர்கள் குறித்த விவரங்களை அல்கொய்தா திரட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்தே தற்போது ஏமனுக்கு அருகில் உள்ள நிலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தனது கப்பல்களை உஷார்படுத்தி வைத்துள்ளது அமெரிக்கா.

மேலும், சோமாலியாவிலிருந்து பெர்சிய வளைகுடா வரை உள்ள கடல் பகுதி வழியாக இயக்கப்படும் அமெரிக்காவின் அனைத்து வர்த்தக கப்பல்கள், போர்க் கப்பல்களை உஷார் நிலையில் இருக்குமாறும் அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

அல் கொய்தா ஆதரவு இணையதளத்தில், அமெரிக்க போர்க் கப்பல்கள் குறித்த அனைத்து துல்லியமான தகவல்களையும் அல் கொய்தாவினர், ஆதரவாளர்கள் அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கையும் விடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கப்பல் குறித்த முழு விவரம், அதன் தாக்குதல் திறன், அதில் உள்ள வசதிகள், எத்தனை வீரர்கள் இருப்பார்கள் என்பது உள்ளிட்ட அனைத்து துல்லியமான தகவல்களையும் அனுப்பி வைக்குமாறு அதில் கோரப்பட்டுள்ளது.

இந்த விவரங்களை சேகரித்த பின்னர் தாக்குதல் குறித்த திட்டத்தை அல் கொய்தா தீட்டவுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து வகையான போர்க் கப்பல்கள், விமானம் தாங்கி கப்பல்கள், நீர்மூழ்கிகள் உள்பட ஏமன் பிராந்தியத்தில் உள்ள அனைத்து வகையான அமெரிக்க கடற்படை வசதிகளையும் தாக்கப் போவதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

உங்களுக்கு எந்த வகையான தகவல் கிடைத்தாலும் அதை உதாசீனப்படுத்தாமல் எங்களுக்கு அனுப்பி வையுங்கள் என்றும் அந்த செய்தியை வெளியிட்டுள்ள நபர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க கடற்படை செய்தித் தொடர்பாளர் நதன் கிறிஸ்டியான்சன் கூறுகையில், கடற்படை கப்பல்களில் உள்ள மாலுமிகள், வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் மிகவும் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கப்பல்கள் குறித்தோ, அதன் செயல்பாடுகள் குறித்தோ யாருடனும் எந்த வகையான தகவல்களையும் பரிமாறிக் கொள்ளக் கூடாது என்று கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடற்படையினரின் குடும்பத்தினர்தான் இந்த விஷயத்தில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். தங்களது வீட்டில் உள்ள வீரர், வீராங்கனைகள் குறித்தோ அல்லது அவர்கள் பணியில் உள்ள கப்பல்கள் குறித்தோ யாருடனும் எந்த தகவலையும் தெரிவித்து விடக் கூடாது.

தங்களது வீட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளிடமிருந்து வரும் கடிதங்கள், இமெயில்கள், தொலைபேசி உரையாடல்கள், பேஸ்க் புக் உள்ளிட்டவற்றின் மூலம் வரும் தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றார்.

இந்த உத்தரவு போக, ஏமன் பிராந்தியத்தில் உள்ள அனைத்து கப்பல்களிலும் கூடுதல் பாதுகாப்புக்கு அமெரிக்க கடற்படை ஏற்பாடு செய்துள்ளதாம்.

ஏமன் பிராந்தியத்தில் குறிப்பாக ஏடன் வளைகுடா பகுதியில் அமெரிக்க கடற்படையின் இருப்பு அதிகமாகவே உள்ளது. வடக்கு சோமாலியா கடற்பகுதி மிகவும் பிசியான வர்த்தக கடல் பாதையாக உள்ளதால், இப்பகுதியில் அதிக அளவில் கப்பல்கள் புழக்கம் உள்ளது. இந்தப் பகுதியில்தான் சோமலியா கடற் கொள்ளையர்களும் தங்களது ராஜாங்கத்தை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களை முழுமையாக ஒடுக்க இதுவரை எந்த நாட்டாலும் முடியவில்லை. எனவே இவர்களைப் பயன்படுத்தி அல் கொய்தாவினர் அமெரிக்க கப்பல்களைக் கடத்திச் செல்ல முயற்சிக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஏதாவது ஒரு கப்பலைக் கடத்திப் போய் அதில் உள்ளவர்களை கொன்றோ அல்லது கப்பலைத் தகர்த்து விட்டாலோ கூட அமெரிக்காவின் இமேஜ் பெருமளவில் தகர்ந்து போய் விடும் என்று அந்த நாடு அஞ்சுகிறது.

அதேபோல அரபிக் கடலில் இயக்கப்படும் அமெரிக்க சரக்குக் கப்பல்களுக்கும் அல் கொய்தாவினர் குறி வைத்துள்ளனர். குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு அமெரிக்கக் கப்பல்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன. வர்த்தகக் கப்பல்கள் தவிர பயணிகள் கப்பல்களும் இங்கு கணிசமான அளவு வந்து செல்கின்றன .

இதையடுத்து வளைகுடா நாடுகள் அனைத்துக்கும், தங்களது கப்பல்களுக்கும், குடிமக்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

சமீப காலமாக குவைத்தில் அல் கொய்தாவினர் திரண்டு வருவதாக சமீபத்தில்தான் குவைத் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது குறி்பிடத்தக்கது.

ஏற்கனவே ஏமன் மற்றும் சோமாலியாவில் அல் கொய்தாவினர் வலுப்பெற்று வரும் நிலையில் குவைத்திலும் அல் கொய்தாவினர் திரண்டு வருவது அமெரிக்காவை பெரும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.

ஏமனில் செயல்படும் அல் கொய்தா அமைப்புக்கும், சமீபத்தில் அமெரிக்க விமானத்தைத் தகர்க்க முயன்றதாக கைதான உமர் பரூக் அப்துல்முத்தல்லாப் என்ற நைஜீரியருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பது, அல் கொய்தாவினர் அமெரிக்காவை வேகமாக நெருக்கி வருவதை உறுதி செய்யும் வகையில் உள்ளது.

ஏமன் பகுதியில், அமெரிக்க கடற்படையை அல் கொய்தா குறி வைத்திருப்பது இது முதல் முறையல்ல. கடந்த 2000ம் ஆண்டு தெற்கு ஏமன் துறைமுகத்தில் எரிபொருள் நிரப்ப வந்த அமெரிக்க கடற்படையின் கோல் கப்பல் மீது குண்டு வீசித் தாக்கப்பட்டது. இதில், 17 வீரர்கள் பலியானார்கள். 39 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவுக்கு ஏமன் எச்சரிக்கை..

இதற்கிடையே, தேவையில்லாமல் பீதியைக் கிளப்பி பாதுகாப்பை அதிகரிக்கிறோம் என்ற போர்வையில் ஏமனில் தனது நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்ள அமெரிக்கா முயலக் கூடாது என்று ஏமன் நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஏமன் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ரஷாத் அல் அலிமி தலைநகர் சானாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், வெளிநாட்டுப் படையினர் நமது மண்ணில் நுழைய நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

அமெரிக்க கடற்படை தனது நிலைகளைப் பலப்படுத்திக் கொள்ளவும், பாதுகாப்பை பெருக்கிக் கொள்ளவும் முழு உரிமையுடன் உள்ளது. அதை நாங்கள் மறுக்கவில்லை. அதேசமயம், எங்களது மண்ணில் ஆக்கிரமிக்க நாங்கள் விட மாட்டோம் என்றார்.

இதேபோல வெளியுறவு அமைச்சர் அபுகர் அல் குர்பி கூறுகையில், தீவிரவாதிகளை எதிர்த்து அமெரிக்கா மட்டும் போராடவில்லை. நாங்களும்தான் போராடுகிறோம். அதேசமயம், எங்களது மண்ணை அமெரிக்கப் படையினர் ஆக்கிரமிப்பதை நாங்கள் விரும்ப மாட்டோம், வரவேற்கவும் மாட்டோம்.

அமெரிக்கா நேரடியாக எங்களது நாட்டுக்குள் புகுந்து தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளாது என்று நம்புகிறோம். அதை ஏற்கவும் முடியாது. ஆப்கானிஸ்தான், ஈராக்கில் சந்தித்த அனுபவத்தை அமெரிக்கா மறந்து விடக் கூடாது. நேரடியாக அடுத்த நாட்டுக்குப் போய் சண்டை போடுவது என்பதை அமெரிக்கா மறந்து விட வேண்டும். அது பலனைத் தராது என்று மறைமுகமாக அமெரிக்காவை எச்சரித்தார்.

இதற்கிடையே, நைஜீரிய இளைஞர் அப்துல்முத்தல்லாப், ஏமனில் படித்தபோது அவர், அமெரிக்காவைச் சேர்ந்த தீவிரவாதப் போக்குடைய முஸ்லீம் போதனையாளர் ஒருவரைச் சந்தித்ததாக ஏமன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அந்த நபரின் பெயர் அன்வர் அல் அவ்லாகி. இவருக்கும், கடந்த ஆண்டு டெக்சாஸ் மாநிலத்தில் போர்ட்ஹூட் என்ற அமெரிக்க ராணுவ தளத்திற்குள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு 13 பேரைக் கொன்ற ராணுவ டாக்டர் நிடால் மாலிக் ஹசனுக்கும் நேரடித் தொடர்பு உள்ளதாம்.

தற்போது அன்வர் அல் அவ்லாகி உயிருடன் இல்லை என்றும் ஏமன் அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் 27ம் தேதி ஏமன் படையினர் நடத்திய தாக்குதலில் அவ்லாகி கொல்லப்பட்டு விட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அவர் உயிருடன இருப்பதாக சில தகவல்கள் கூறுகின்றன.

அல் கொய்தாவை ஒடுக்க தாங்கள் உறுதியான நடவடிக்கை எடுத்து வருவதாக கூறும் ஏமன், அல் கொய்தாவை அழிக்கிறோம் என்ற போர்வையிலோ அல்லது தற்பாதுகாப்பு என்ற பெயரிலோ அமெரிக்கப் படையினர் ஏமன் மண்ணில் இருந்து செயல்பட அனுமதிக்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க போர்க் கப்பல்களுக்கும், பயணிகள், வர்த்தக கப்பல்களுக்கும் அல் கொய்தா குறி வைத்திருப்பது அமெரிக்காவை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+