மின்துறையை பிரித்தது ஏன்? - சட்டசபையில் மார்சிஸ்ட் கேள்வி
சென்னை: உலக வங்கி சொல்லித்தான் தமிழக மின்துறை பிரிக்கப்பட்டுள்ளது. இது உலகமயமாக்கலுக்கான முதல் கட்ட நடவடிக்கை என மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ பாலபாரதி சட்டசபையில் குற்றம் சாட்டினார்.
தமிழக சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதம் நேற்று நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ பாலபாரதி பேசுகையில்,
'ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தி, இதுவரை இல்லாத மரபை கடைபிடிக்க வேண்டாம். அந்த அரசாணையை திரும்பப் பெறவேண்டும். இளைஞர்களுக்கு வேலை உத்தரவாதத்தை அளிக்க வேண்டும்.
சென்னையைத் தவிர மற்ற இடங்களில் தினசரி 2 மணி முதல் 4 மணி நேரம் மின்வெட்டு உள்ளது. மின்வாரியத்தை 3 ஆக பிரித்தது ஏன்? அதன் விளைவு என்ன?
உலக வங்கி சொல்லித்தான் இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது. இது தனியார்மயமாக்கலுக்கு ஒரு முதல் கட்ட நடவடிக்கை போல் உள்ளது. டெல்லி இதற்கு ஒரு உதாரணம்' என்றார்.
இதற்கு பதில் அளித்த மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, 'மேற்கு வங்காளத்திலும் மின்துறை பிரிக்கப்பட்டுள்ளது. அங்குதான் முதன் முதலில் பிரிக்கப்பட்டது. நாம்தான் கடைசியாக பிரித்துள்ளோம்.
தமிழக மின்வாரியம், இந்திய மின்சட்டம் (2003) அடிப்படையில்தான் பிரிக்கப்பட்டது. உலக வங்கி சொல்லி அல்ல. மேற்கு வங்கத்தில் அரசுக்கு சேரவேண்டிய பணத்தை தனியார் தராமல் ஏமாற்றி விட்டார்கள். அதை வசூலிக்க அந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது' என்றார்.
அமைச்சரின் பதிலை மறுத்த உறுப்பினர் பாலபாரதி, 'உங்களுக்கு யாரோ தவறான தகவல் கொடுத்துள்ளார்கள். மீண்டும் விசாரித்து பாருங்கள்' என்று கூறி அமர்ந்தார்.












Click it and Unblock the Notifications