மேலும் ஒரு மோசடி நிறுவனம்: லட்சக்கணக்கில் சுருட்டிய போலீஸ் அதிகாரி மகள்!
சென்னை: சென்னையில் மோசடி நிறுவனம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சுருட்டியதாக போலீஸ் சப்- இன்ஸ்பெக்டரின் மகள் மீது புகார் தரப்பட்டுள்ளது.
சென்னை காரப்பாக்கத்தை சேர்ந்த ரவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில்,
சில மாதங்களுக்கு முன்பு எனது செல்போனுக்கு பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோட்டில் இயங்கி வரும் ஜென் குரூப் நிறுவனத்தில் இருந்து ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில், எங்கள் நிறுவனத்தில் இணைந்து வேலை செய்வதன் மூலம் மாதம் ரூ.3,000 முதல் ரூ.30,000 வரை மிகவும் சுலபமாக சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.
அதை நம்பி அந்த நிறுவனத்துக்கு நான் நேரில் சென்றேன். வேலைக்கு சேர வேண்டுமானால் முன் பணம் செலுத்த வேண்டும் என்றனர். எவ்வளவு பணம் கட்டுகிறீர்களோ அவ்வளவு பணத்தை மாத வருமானமாக தருவதாக கூறினர்.
இதை நம்பி ரூ.65,000 கட்டினேன். இதையடுத்து மாதாமாதம் ரூ.65,000 சம்பளம் தருவதாக உறுதியளித்தனர். ஆனால் கடந்த 3 மாதங்களாக சம்பளம் எதுவும் தரவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது உரிய பதில் கிடைக்கவில்லை.
இதையடுத்து நான் அந்த அலுவலகத்துக்கு நேரில் சென்றேன். ஆனால், அது மூடப்பட்டுள்ளது. ஆகவே, இதுகுறித்து நடவடிக்கை எடுத்து நான் கட்டிய பணத்தை வாங்கி தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டிருந்தது.
இவரைப் போலவே ஜென் குரூப் நிறுவனத்தில் பணம் கட்டிய மேலும் 100க்கும் மேற்பட்டவர்களும் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இவர்கள் ஏற்கனவே, ஜென் குரூப் நிறுவனம் மீது கடந்த 5ம் தேதியே செம்பியம் போலீஸ் நிலையத்தில் புகார் தந்துள்ளனர். ஆனால், போலீசார் அந்த நிறுவன உரிமையாளர் வசந்த பிரபாவிடம் விசாரணை நடத்தவில்லை என்று தெரிகிறது.
இவர் வட சென்னையில் பணிபுரியும் ஒரு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டரின் மகள் என்றும் அவர் மோசடி செய்த பணம் ரூ.50 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications