சென்னை ஏரிகளில் குறையும் நீர் இருப்பு-குடிநீர் தட்டுப்பாடு வராது
சென்னை: சென்னை ஏரிகளில் தண்ணீர் இருப்பு, கடந்த ஆண்டை விட குறைவாக இருந்தாலும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பூண்டி ஏரியில் கடந்த ஆண்டு இதே நாளில் 2,963 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. தற்போது 1,955 மில்லியன் கனஅடி மட்டுமே உள்ளது.
புழல் ஏரியில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு 564 மில்லியன் கனஅடி தண்ணீர் குறைவாக உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த ஆண்டு இதே நாளில் நீர் இருப்பு 2,886 மில்லியன் கனஅடி. தற்போது 2,422 மில்லியன் கனஅடி உள்ளது.
சோழவரம் ஏரியிலும் நீர் இருப்பு சுமார் 200 மில்லியன் கனஅடி குறைவாக உள்ளது.
வீராணம் ஏரிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் விடப்படுகிறது. தற்போது ஏரிக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சில தினங்களில் வீராணம் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது குடிநீர் ஏரிகளில் இருக்கும் தண்ணீர் ஆகஸ்டு மாதம் வரை சென்னைக்கு குடிநீர் சப்ளை செய்ய போதுமானது. நகரில் தினமும் 650 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.
வீராணத்தில் இருந்து தினந்தோறும் 180 மில்லியன் லிட்டர் குடிநீர் வருகிறது. ஏரிகளில் இருக்கும் தண்ணீர் ஆகஸ்டு வரை சென்னை நகருக்கு வினியோகம் செய்ய போதுமானது.
கிருஷ்ணா தண்ணீரும் மீண்டும் வரும். எனவே சென்னையில் இந்த ஆண்டும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications