மின் வாரியத்தில் ரூ.9 கோடி 'லபக்'-பாஜக குற்றச்சாட்டு

தமிழக பாஜகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசுகையில்,
மேற்குவங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு அப்பழுக்கற்ற தூய்மையான அரசியல் வாழ்க்கை வாழ்ந்தவர். அவரது மறைவிற்கு தமிழ்நாடு பாஜக சார்பில் அஞ்சலி செலுத்துகிறேன்.
தமிழ்நாட்டில் ஊழல் சர்வாதிகாரம் நடக்கிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மீட்டர் வாங்கியதில் பெரும் ஊழல் நடந்துள்ளது. மொத்தம் 7 லட்சத்து 51 ஆயிரத்து 988 சிங்கிள் ஃபேஸ் மீட்டர்கள், ஒரு மீட்டருக்கு ரூ.558.63 என்ற விலையில் அரசு வாங்கியது.
அதே மீட்டர் வெளி மார்க்கெட்டில் ரூ.530க்கு கிடைக்கிறது. இதன் மூலம் 4 கோடியே 36 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் மற்றொரு ரக மீட்டர்கள், மொத்தம் 3 லட்சத்து 60 ஆயிரம் எண்ணிக்கையில் தலா ரூ.1319.28 என்ற விலையில் அரசு வாங்கியுள்ளது. அதே மீட்டர் வெளி மார்க்கெட்டில் 1,200 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதன் மூலம் அரசுக்கு ரூ.4 கோடியே 28 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆக மொத்தம் மீட்டர்கள் வாங்கியதில் ரூ.9 கோடி அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு உரிய விளக்கம் தர வேண்டும்.
இதுவரை எல்லா இடங்களிலும் சுரண்டிய அரசு இப்போது ஆலயங்களிலும் சுரண்ட ஆரம்பித்துள்ளது. கன்னியாகுமரியில் உள்ள கோயிலுக்கு வரும் வெளி மாநில பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் பாஜகவின் சக்தி அனைவருக்கும் தெரியும். தனித்து நின்று போட்டியிடவே விரும்புகிறோம்.
எங்கள் கொள்கைகளை மதித்து எங்களோடு கைகோர்க்க விரும்பினால் அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications