மலேசிய பிரதமர் ரஸ்ஸாக் சென்னை வருகிறார்

மலேசியப் பிரதமர் ஒருவர் சென்னைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன்பு மகாதிர் முகம்மது பிரதமராக இருந்தபோது 1983ம் ஆண்டு சென்னைக்கு வந்தார். அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரை சந்தி்த்துப் பேசினார். ஆனால் அது அதிகாரப்பூர்வமற்ற பயணமாகும். மகாதிர் முகம்மதுவின் தந்தை ஒரு மலையாளி, தாயார் மலாய் இனத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரஸ்ஸாக் சென்னைக்கு வருவதன் மூலம் புதிய வரலாறு படைக்கிறார்.
மலேசியாவின் ஆறாவது பிரதமராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக இந்தியாவுக்கு வரும் ரஸ்ஸாக், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த தனது பயணம் உதவும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ரஸ்ஸாகின் பயணத்தை மலேசியாவில் உள்ள இந்தியர்களும், தமிழகத்தில் உள்ளவர்களும் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். சமீப காலமாக மலேசியாவில் வசிக்கும் தமிழர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். தங்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரி பல்வேறு வகையான போராட்டங்களையும் அவர்கள் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தனது இந்திய பயணத் திட்டத்தில் சென்னையையும் ரஸ்ஸாக் சேர்த்திருப்பது மலேசியா வாழ் தமிழர்களை பெரும் உற்சாகத்தில் தள்ளியுள்ளது.
இதுகுறித்து கோலாலம்பூரில் ஜவுளி நிறுவனம் நடத்தி வரும் ஒரு தமிழர் கூறுகையில், அனைத்து சமூகத்தினருக்குமான பிரதமர் என்பதை ரஸ்ஸாக் நிரூபித்து வருகிறார். வழக்கமாக டெல்லி மட்டுமே பிரதமர்களின் பயண இடமாக இருக்கும். ஆனால் இந்த முறை சென்னைக்கும் மலேசிய பிரதமர் ஒருவர் முதல் முறையாக செல்வது எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதன் மூலம் மலேசியாவுக்கும், தமிழகத்திற்குமான உறவு மேலும் வலுப்பெரும் என நம்புகிறோம் என்றார்.
தனது சென்னை பயணத்தின்போது, முதல்வர் கருணாநிதியை ரஸ்ஸாக் சந்திக்கவுள்ளார். அப்போது சென்னை, கோலாலம்பூரில் இரு நாட்டவருக்கான தொழில் வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், தமிழர்களின் பிரச்சினைகள் குறித்தும் முதல்வர் கருணாநிதி, ரஸ்ஸாகிடம் பேசக் கூடும்.
மேலும், சென்னையில் தங்கியுள்ள மலேசியத் தொழிலதிபர்கள், மாணவர்களையும் ரஸ்ஸாக் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
இதுதவிர 16வது சிஐஐ குளோபல் பார்ட்னர்ஷிப் மாநாட்டிலும் ரஸ்ஸாக் கலந்து கொண்டு பேசுகிறார்.












Click it and Unblock the Notifications