தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது... ஆனால்!

தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 3 லட்சத்து 22 ஆயிரத்து 65 மின் இணைப்புகள் உள்ளன. வீடு, விவசாயம், வணிகம், தொழிற்சாலை உள்ளிட்ட 13 இனங்களாக பிரிக்கப்பட்டு மின் வினியோகம் நடந்து வருகிறது.
விவசாயம் மற்றும் குடிசைகள் உள்ளிட்ட சில பிரிவினருக்கு இலவச மின்சாரமும், கைத்தறிகளுக்கு இரு மாதங்களுக்கு 100 யூனிட் வரையும், விசைத்தறிக்கு 500 யூனிட்டுகள் வரையும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
வீட்டு இணைப்பு வைத்துள்ளவர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு, ரூ. 4.75, தொழிற்சாலைகளுக்கு ரூ. 4.70, வணிக இணைப்புகளுக்கு, ரூ. 5.80 அதிகபட்ச கட்டணங்களாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே குறைவான மின் கட்டணம் என்பதை தக்க வைத்துக் கொள்ளவும், ஓட்டு பயத்தாலும், கடந்த 7 ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் கட்டணத்தை உயர்த்தவில்லை.
உற்பத்தி நிலையிலும் புது முயற்சிகள் இல்லாத நிலையில், நாளுக்கு நாள் நுகர்வு தேவையும் அதிகரித்து வந்ததன் விளைவாக தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ. 5,000 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அதோடு மின் பற்றாக்குறை பிரச்சனையிலும் சிக்கியுள்ளது.
அதிகாரப்பூர்வமாக மின் கட்டணத்தை உயர்த்த மிகவும் தயக்கம் காட்டும் அரசு, மறைமுகமாக சில வழிமுறைகளை முன்னோட்டம் விட்டுப்பார்த்தது.
உயர்அழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு, 'பீக் அவர்' நேரத்தில் கூடுதல் கட்டணத்தில் மின்சாரம் வழங்கும் திட்டம் நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தங்களுக்கு 'பீக் அவர்' நேரத்தில் மின்சாரம் கூடுதலாக தேவை என்பதால் ஏராளமானோர் இதற்கு ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதனால் குறிப்பிட்ட இனங்களின் கீழ் வரும் வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் ஒரு பொருட்டல்ல என்பதை அரசு புரிந்துகொண்டது.
இதையடுத்து, வீடு, தொழிற்சாலை மற்றும் வணிக இணைப்புகளுக்கும் மின் கட்டணத்தை உயர்த்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான அனுமதி கோரி மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடமும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், 'அனைத்துத் தரப்பினருக்கும் மின் கட்டணம் உயர்த்தப்படாது. மாதத்திற்கு 200 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் வீடுகள், 1,500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் தொழிற்சாலைகள், கல்லூரி, தியேட்டர் போன்றவற்றுக்கு கட்டணம் உயரும்' என மின் வாரியம் விளக்கம் அறித்துள்ளது.
கட்டண உயர்வு குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் சூசகமாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 'குடிசைகளிலே இருப்பவர்களுக்கும், தெரு விளக்குகளுக்கும், வழிபாட்டு இடங்களான கோவில், மசூதி, தேவாலயம் போன்றவைகளுக்கும் விசைத்தறி, கைத்தறி நெசவாளர்களுக்கும் எந்தவிதமான மாற்றமும் மின் கட்டணத்திலே செய்யப் போவதில்லை.
1,500 யூனிட்டுகளுக்குக் குறைவாகப் பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கும் மின் கட்டணத்திலே எந்தவிதமான உயர்வும் செய்யப் போவதில்லை.
வணிக நிறுவனங்களைப் பொறுத்த வரையில் 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு எந்தவிதமான மின் கட்டண உயர்வும் செய்யக் கோரப்படவில்லை.
மாதம் 200 யூனிட்டுகள் வரை அதாவது இரண்டு மாதங்களுக்கு 400 யூனிட் வரை வீடுகளிலே மின்சாரத்தைப் பயன்படுத்துவோருக்கு தற்போதுள்ள மின் கட்டணத்தில் எந்தவிதமான உயர்வும் செய்யப் போவதில்லை.
தமிழகத்தில் தற்போது 2 கோடியே 5 லட்சத்து 16 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன. அவற்றில் வீடுகளுக்கு மின் இணைப்பு பெற்றவர்கள் மட்டும் 1 கோடியே 38 லட்சம் பேர்களாகும்.
இவர்களில் மாதம் 200 யூனிட்டுகளுக்குக் குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் 1 கோடியே 20 லட்சம் பேர்களாகும். எனவே இந்த 1 கோடியே 20 லட்சம் பேர்களுக்கு அதாவது வீடுகளுக்கு மின்சாரம் பயன்படுத்துவோரில் 90 சதவீதம் பேர்களுக்கு எந்தவிதமான கட்டண உயர்வும் இருக்காது.
திரைப்பட அரங்குகள், திரைப்பட ஸ்டுடியோக்கள், தனியார் கல்லூரிகள் போன்றவைகளுக்கு ஓரளவு மின் கட்டணத்தை உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்குத் தரப்படும் இலவச மின்சாரத்திலே எந்தவிதமான மாறுதலும் கிடையாது' என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications