அதிபர் தேர்தல்-புறக்கணிக்கும் திரிகோணமலை தமிழர்கள்

பொன்சேகாவாக இருந்தாலும் சரி, ராஜபக்சேவாக இருந்தாலும் சரி, யாராலும் நமக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. பின்னர் எதற்காக வாக்களிக்க வேண்டும் என்று இவர்கள் குமுறுகிறார்கள்.
இதுகுறித்து திரிகோணமலையைச் சேர்ந்த ரமேஷ் என்ற தமிழர் கூறுகையில், எங்களது பிரச்சினைகளைத் தீர்க்கவும், அபிலாஷைகளை நிறைவேற்றவும் ராஜபக்சேவாலும் முடியாது, பொன்சேகாவாலும் முடியாது. அவர்கள் எதுவும் செய்யவும் மாட்டார்கள். தேர்தலுக்காக இப்போது எதை வேண்டுமானாலும் அவர்கள் பேசுவார்கள்.
எனவே இவர்களுக்கு வாக்களிப்பதால் எங்களுக்கு வசந்தம் வந்து விடாது. இவர்களுக்கு வாக்களிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. வாக்களிக்காமல் இருப்பதே சிறந்தது என்று நாங்கள் கருதுகிறோம் என்றார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. துரைரத்தின சிங்கம் கூறுகையில், கிழக்கில் சிங்களமயமாக்கம் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. போர் முடிந்த பின்னர் இது அதிகரித்து விட்டது.
பொருளாதார, சமூக ரீதியில் தமிழர்கள் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். போருக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட தொழிற்சாலைகளிலும் சரி, ஏற்கனவே இருந்த தொழிற்சாலைகளிலும் சரி தமிழ் தொழிலாளர்கள் எண்ணிக்கை அடியோடு குறைந்து போய் விட்டது. முற்றிலும் சிங்களத் தொழிலாளர்கள்தான் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், இவர்கள் யாருமே கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. அனைவருமே சிங்களப் பகுதிகளிலிருந்து இங்கு கொண்டு வந்து குடியமர்த்தப்பட்டு வருகின்றனர் என்றார்.
இருப்பினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுப்படி கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் அனைவரும் பொன்சேகாவுக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளனர். இவர்கள் அனைவருமே தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சிங்கம் கூறுகையில், ராஜபக்சேவைப் போல அல்லாமல், எங்களது குறைகளைக் கவனிப்பதாகவும், நிவர்த்தி செய்வதாகவும் பொன்சேகா உறுதியளித்துள்ளார். ராஜபக்சேவுடன் ஒப்பிடுகையில் பொன்சேகா பரவாயில்லை. எனவே அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்றார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்திருந்தாலும் தமிழ் மக்களிடையே இந்தத் தேர்தல் எந்தவித ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தவில்லை. மாறாக தேர்தலைப் புறக்கணிக்கும் மன நிலைதான் அதிகரித்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications