அதிமுக ஓட்டு வங்கி சரியவில்லை-ராஜகண்ணப்பன்
மதுரை: இடைத் தேர்தல்களில் அதிமுக தோல்வியடைந்தாலும், கட்சியின் ஓட்டு வங்கி சரியவில்லை என்று அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்துவிட்டு கடந்த மக்களவைத் தேர்தலின்போது மீண்டும் அதிமுகவுக்குத் தாவிய முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 93வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
அதில் பேசிய ராஜ கண்ணப்பன்,
ஏழை- எளிய மக்கள், தொண்டர்கள் தேர்தலில் போட்டியிடும் நிலையை திமுகவை தொடங்கி பேரறிஞர் அறிஞர் அண்ணா உருவாக்கினார். ஆனால் இன்று பணம் படைத்தவர்கள் தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலை திமுகவில் உள்ளது.
மக்கள் இயக்கமான அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. இடைத்தேர்தலில் பண பலத்தாலும், ஆட்சி அதிகார பலத்தாலும் அதிமுக தோல்வியடைந்துள்ளது. ஆனால் கட்சியின் ஓட்டு வங்கி குறையவில்லை. தொடர்ந்து 37 சதவீதம் ஓட்டுகள் கிடைத்துள்ளன.
புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மின்வெட்டு இல்லை. ஆனால் தற்போது நிலவும் மின்வெட்டால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்கலாம். ஆனால் பணம் கொடுத்து ஓட்டு வாங்குகிறார்கள். இடைத்தேர்தலில் பணம் கொடுத்து, ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி வெற்றி பெறலாம். ஆனால் வரும் 2011ல் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் மக்கள் மன்றத்தில் பணம் எடுபடாது. அப்போது ஜெயலலிதா மீண்டும் முதல்வாராவார் என்றார்.












Click it and Unblock the Notifications