பனி: டெல்லி-60 விமானங்களின் போக்குவரத்து பாதிப்பு
டெல்லி: டெல்லியில் கடும் பனி காரணமாக இன்று காலை சுமார் 60 விமானங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தி்ல் இன்று அதிகாலை கடும் பனிப்பொழிவு காரணமாக ஐந்து உள்நாட்டு விமானங்களும், எட்டு வெளிநாட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
40க்கும் மேற்பட்ட விமானங்கள் பல மணி நேரம் தாமதாகமாக இயக்கப்பட்டன. டெல்லி வரவேண்டிய மூன்று விமானங்கள் வேறு மார்க்கத்தில் திருப்பிவிடப்பட்டன.
விமான நிலைய பகுதியில் நேற்று இரவு 10.30 மணி முதல் பனிப்பொழிவு அதிகரித்துக்கொண்டே வந்தது. ஒருகட்டத்தில் எதிரில் உள்ள காட்சி முற்றிலும் தெரியாத அளவுக்கு பனி படர்ந்தது.
பின்னர் அதிகாலை நேரத்தில் ஓடுதளத்தில் காட்சித் தெளிவு 75 மீட்டருக்கும் குறைவாகவே இருந்தது. இதனால் விமானங்களின் சேவை வெகுவாக பாதிக்கப்பட்டது.
இன்று பிற்பகல் வரை இதே நிலை நீடிக்கக்கூடும் என விமானநிலைய வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் கூறினர்.
ரயில்களும் ரத்து:
வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவால் வடக்கு ரயில்வே இன்று நான்கு எக்ஸ்பிரஸ் ரயில்களை ரத்து செய்துள்ளது.
சுமார் 50க்கும் மேற்பட்ட ரயில்களின் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து இன்று காலை இயக்கப்பட இருந்த போபால் சதாப்தி, ஜலந்தர்-டெல்லி இன்டர்சிட்டி, டெல்லி-அமிர்தசரஸ் இன்டர்சிட்டி ஆகிய ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
லக்னோ சதாப்தி, பூரி எக்ஸ்பிரஸ் மற்றும் நார்த்ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகியவை புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. வடக்கே பனிப்பொழிவு தொடர்ந்தால் மேலும் ரயில்கள் ரத்து செய்யப்படக் கூடும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications