தற்கொலைக்கு முயன்று முடியாததால் கடத்தப்பட்டதாக நாடகமாடிய சென்னை பெண்
சென்னை: வீட்டு நிலைமையை எண்ணி வருத்தப்பட்ட சென்னை பெண் தற்கொலைக்காக ரயில் நிலையம் சென்று அங்கு மனம் மாறி, தான் கடத்தப்பட்டதாக நாடகமாடி மீ்ண்டுள்ளார்.
அவர் கூறிய சோகக் கதையைக் கேட்ட போலீஸார் மனம் இரங்கி, தங்களுக்கு ஏற்பட்ட பெரும் சிரமத்தையும் பொருட்படுத்தாமல் அந்தப் பெண்ணை மன்னித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை அங்கப்ப நாயக்கன் தெருவை சேர்ந்தவர் பவர்லால். இவரது மகள் சோனல். இவரைக் காணவில்லை என்று கூறி அவரது சகோதரர் போலீஸில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனின் உத்தரவுப்படி அப்பெண்ணை மீட்க அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
சோனிலின் செல்போனிலிருந்து வந்த தகவலின்படி, அவரை யாரோ ஒருவர் ரயிலில் கடத்திச் செல்வதாக தெரிய வந்தது. இதையடுத்து சென்டிரல் ரயில் நிலையத்தில் சோனல் கூறிய நேரத்தில் எந்த ரயில் கிளம்பியது என்பதை அறிந்த போலீஸார் அந்த ரயில் மதுரை செல்லும் சிறப்பு ரயில் என்பதை அறிந்தனர்.
இதையடுத்து அந்த ரயில் நின்று செல்லும் அனைத்து ரயில் நிலையங்களிலும் போலீஸார் குவிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட ரயிலை சோதனையிட உத்தரவுகள் பறந்தன.
அதன்பேரில் ஈரோடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் போலீஸார், சம்பந்தப்பட்ட ரயிலில் சோதனை நடத்தினர். ஆனால் எந்தப் பெண்ணும் கடத்தப்படுவதாக தெரியவில்லை என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் போலீஸார் தீவிர சோதனை நடத்தியபோது, சிக்கினார் சோனல்.
ஆனால் அவராகவே போலீஸாரிடம் வந்து நான்தான் சோனல் என்று கூறியதால் போலீஸாருக்கு அவர் மீது சந்தேகம் வந்தது. இருப்பினும் அவரை சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னைக்கு வந்த சேர்ந்த சோனலிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
அதில், சோனல் கடத்தப்படவில்லை. மாறாக அவர் கடத்தப்பட்டதாக போலீஸாருக்குத் தவறான தகவலைக் கூறியது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குத் தொடர போலீஸார் திட்டமிட்டனர். ஆனால், சோனல் பின்னர் சொன்ன சோகக் கதையைக் கேட்ட போலீஸார் வழக்குப் போடாமல் விட்டு விட்டனர்.
சோனல் சொன்ன சோகக் கதை இதுதான்..
எனது தந்தை பவர்லால், ஒரு காலத்தில் நகைக்கடை நடத்தி சென்னையில் பெரிய லட்சாதிபதியாக இருந்தார். ஆனால், தொழிலில் பலத்த நஷ்டம் ஏற்பட்டு, தற்போது நகைக்கடையை மூடிவிட்டு மணல் வியாபாரம் செய்கிறார். அதிலும் போதிய வருமானம் இல்லை. பட்டப்படிப்பு படித்து வந்த எனது அண்ணன் சுஜாஜ் தொடர்ந்து படிக்க முடியாமல் எஸ்.டி.டி. பூத்தில் வேலை செய்கிறார்.
குடும்பத்தில் வறுமை தாண்டவம் ஆடியது. நாங்கள் வசதியாக வாழ்ந்து கெட்ட குடும்பம் என்பதால் எங்களால் கஷ்டத்தை தாங்க முடியவில்லை. ஆனால் தொடர்ந்து சோதனைமேல் சோதனையாக வந்தது. எனது தாயார் பூனம்தேவிக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இந்த நிலையில், வலிப்பு நோய் என்னை தாக்கியது. இதனால் என்னை யாரும் திருமணம் செய்ய முன்வரவில்லை. ஒருபக்கம் வருமானம் இல்லாமல் கஷ்டம், இன்னொரு பக்கம் வலிப்பு நோயால் எனக்கு திருமண நடக்காத நிலைமை, தாயாரும் உடல்நலக்குறைவால் பாதிப்பு. இப்படி பலமுனை தாக்குதலால் நான் மனம் உடைந்தேன்.
இதனால் ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முடிவு செய்தேன். இதற்காக சென்டிரல் ரயில் நிலையத்துக்கு சென்றேன். அப்போது அங்கு தயாராக நின்ற ரயிலில் ஏறினேன்.
ஆனால் ரயிலில் ஏறிய பின்னர் எனக்கு மனமாற்றம் ஏற்பட்டது. தற்கொலை செய்ய மனம் வரவில்லை. நான் ரயிலில் செல்ல டிக்கெட்டும் எடுக்கவில்லை. டிக்கெட் பரிசோதகர் என்னை பிடித்துவிடுவாரோ என்று பயந்து பாத்ரூமுக்குள் போய் கதவை பூட்டிக்கொண்டு உட்கார்ந்து கொண்டேன்.
அப்போது எனது அண்ணனிடமிருந்து செல்போனில் எஸ்.எம்.எஸ். தகவல் வந்தது. என்னை தேடுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அவர் செல்போனில் என்னோடு பேச முயற்சித்தார். நான் பேசவில்லை. இதனால் நிலைமையை சமாளிக்க மயக்க மருந்து கொடுத்து கடத்தி விட்டதாக நான் தவறான தகவலை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பினேன்.
இதற்கிடையில் வழி நெடுக போலீசார் ரயில் பெட்டியில் என்னை தேடுவதை தெரிந்துகொண்டேன். அதன்பிறகு வேறு வழியில்லாமல் போலீசாரிடம் நானாகவே சென்று திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சரண் அடைந்துவிட்டேன்.
வேறு வழியில்லாமல் நான் இந்த கடத்தல் நாடகத்தை நடத்திவிட்டேன். இதனால் போலீசாருக்கு பெரும் தொல்லை கொடுத்துவிட்டேன். இனிமேல் நான் தற்கொலை செய்யும் முடிவுக்கு போகமாட்டேன். வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவேன் என்றார் சோனல்.












Click it and Unblock the Notifications