புதிய அணை- மேலும் 3 இடங்களில் கேரளா ஆய்வு

முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக ரூ. 400 கோடி மதிப்பில் புதிய அணையைக் கட்டுவதற்காக, பல கட்டமாக சர்வே பணியினை நடத்தி வருகிறது. பெரியாறு அணைப் பகுதியின் அருகில் 300 மீட்டர் தூரத்தில் 2.5 ஹெக்டேர் வனப்பகுதியை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில், இப்பகுதியில் கடந்த சில மாதமாக கேரள அரசு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வந்தது. அணை கட்ட திட்டமிட்டிருந்த இடத்தில் சிறிய நீர் அருவிகள் வருவதால், இப்பகுதியில் புதிய அணை கட்டுவது சாத்தியமில்லை என்று நிபுணர்கள் குழு கருத்து தெரிவித்தது.
எனவே, கேரள நீர்ப்பாசனத் துறை செயற்பொறியாளர் ஜார்ஜ் டேனியல், உதவிச் செயற்பொறியாளர் நிர்மல்குமார் ஆகியோர் தலைமையில், 15-க்கும் மேற்பட்டக் குழுவினர், ஏற்கனவே சர்வே செய்த இடத்திலிருந்து 400 மீட்டர், 624 மீட்டர் மற்றும் 750 மீட்டர் தூரம் என 3 இடங்களில் சர்வே செய்யும் பணியை புதன்கிழமை துவக்கியுள்ளனர்.
இது குறித்து, ஜார்ஜ் டேனியல் கூறுகையில், தற்போது ஆய்வு செய்யப்படும் 3 இடங்களில் ஏதாவது ஒன்றில் புதிய அணையைக் கட்ட அரசு முடிவு செய்யும் என்றார்.
இது தொடர்பாக, 5 மாவட்ட விவசாய சங்கத் தலைவர் கே.எம். அப்பாஸ் கூறுகையில்,
பெரியாறு அணைக்குப் பதிலாக புதியதொரு அணை கட்டுவது சாத்தியமில்லை என்று மத்திய அரசு 1979-ல் நிராகரித்தது. எனவேதான், பெரியாறு அணையை பலப்படுத்தும் பணிக்கு கேரள அரசு சம்மதித்தது.
தற்போது வனப் பகுதியில் 2.5 ஹெக்டேர் நிலத்தில், புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணி மட்டும் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், தற்போது ஆய்வு செய்யும் பகுதியானது, மத்திய அரசு வழங்கியுள்ள இடங்களில் இல்லை என்பதைக் காட்டுகிறது. ஏற்கெனவே, இதற்காக அனுமதி இல்லாமல் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.
புதிய அணை என்பது தேவையில்லாத ஒன்று. இருப்பினும், பெரியாறு அணையிலிருந்து 7 கிலோ மீட்டருக்கு அப்பால் எத்தனை அணை கட்டினாலும் பிரச்னை இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications