குழந்தையை கொன்ற வழக்கு-கணவன், மனைவி தற்கொலை
மதுரை: மதுரைஅருகே குழந்தையை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் ஆயுள் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குழந்தையின் தந்தை தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை மாவட்டம், எழுமலை அருகே உள்ளது அணைக்கரைப்பட்டி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்(42). இவருக்கும் இவரது மனைவி தெய்வக்கனிக்கும், கடந்த 2001ம் ஆண்டு தகராறு ஏற்பட்டது. இதனால், தெய்வக்கனி கோபித்துக் கொண்டு, தனது தங்கை அன்னலட்சுமி வீட்டிற்கு சென்று வசித்து வந்தார்.
இந் நிலையில், தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு கோரி மனைவியை அழைக்க ஜெயபிரகாஷ், அன்னலட்சுமி வீட்டிற்கு சென்ற போது அங்கு அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்த ஜெயபிரகாஷ் நாட்டுத் துப்பாக்கியால் தெய்வக் கனியைச் சுட்டார். குறி தவறி துப்பாக்கி குண்டு அன்னலட்சுமியின் ஐந்து மாதக் குழந்தை கிரஹாம்பெல் மீது பாய்ந்ததில், குழந்தை இறந்தது.
இதனையடுத்து, ஜெயபிரகாஷ் மீது சாப்டூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த மதுரை செஷன்ஸ் கோர்ட், ஜெயபிரகாஷ்க்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது.
இதை எதிர்த்து ஜெயபிரகாஷ், மதுரை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். கடந்த நவம்பர் மாதம் கீழ்கோர்ட் விதித்த தண்டனையை ஐகோர்ட் உறுதி செய்தது.
இதனால் ஆயுள் தண்டணைக்கு பயந்த ஜெயப்பிரகாஷும், அவருடன் அவரது மனைவி தெய்வக்கனியும் ஊருக்கு வெளியில் உள்ள காட்டிற்கு சென்று, அங்கு, அரளிக் கொட்டையை அரைத்துச் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications