பனி: பி.டி.கத்தரி கருத்துகேட்பு கூட்டம் ஒத்திவைப்பு
டெல்லி: கடும் பனிப்பொழிவு காரணமாக பி.டி கத்தரிக்காய் தொடர்பான பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விதைகளை இந்திய விவசாயத் துறையில் அனுமதிப்பது குறித்து இருவேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன.
பி.டி கத்தரி எனப்படும் இந்த மரபணு மாற்ற கத்தரி வகைகள் உடல் நலத்துக்கும், மண் வளத்துக்கும் கேடு என்றும், இதை தயாரிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களின் மூலம் கிடைக்கும் ஆதாயத்துக்காக சிலர் இதில் ஆர்வம் காட்டி வருவதாகவும் ஒருதரப்பினர் கூறிவருகின்றனர்.
ஆனால், பி.டி கத்தரிக்காய் விளைவித்தால் அமோக விளைச்சல் கிடைக்கும் என்றும் நவீன விவசாய முறைகள் அறிமுகமாகி வருவாய் பெருகும் என்றும் மற்றொரு தரப்பினர் கூறிவருகின்றனர்.
இதுதொடர்பாக ஆராய மத்திய விவசாயத் துறை சார்பில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த பி.டி கத்தரி விதைகளுக்கு மத்திய அரசின் மரபணு பொறியியல் கமிட்டி கடந்த ஆண்டே ஒப்புதல் அளித்துவிட்டது.
இந்நிலையில் இவ்விஷயத்தில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்ட பின்பே இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும் என சுற்றுச்சூழல் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
இதன்படி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தலைமையில் தேசிய அளவில் பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
பெரும்பாலும் வட மாநிலங்களிலேயே இந்த கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று ஹைதராபாத் நகரில் கருத்து கேட்பு கூட்டம் நடப்பதாக இருந்தது.
வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து பாதித்து அமைச்சர் ஜெய்ராம் ஹைதராபாத்திற்கு பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் இக்கூட்டத்தை வரும் 31ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர். அதேபோல், வரும் 27ம் தேதி நாக்பூர் உட்பட மூன்று கூட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாத இறுதியில் பொதுமக்கள் கருத்துகேட்பு முடிவுகளை அமைச்சர் ஜெய்ராம் பிரதமரிடம் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பனியால் முடங்கிய வடமாநில போக்குவரத்து
இதற்கிடையே, கடும் பனிப்பொழிவால் வடமாநிலங்களில் விமானம் மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
டெல்லி விமான நிலையத்தில் நேற்று முதல் இன்று காலை வரை பனி காரணமாக சுமார் 31 உள்நாட்டு விமானங்கள் மற்றும் 24 பன்னாட்டு விமானங்களின் வருகை, புறப்பாடு எட்டு மணி நேரம் வரை தாமதமானது.
ஓடுதளத்தில் காட்சித் தெளிவு இன்று அதிகாலையில் 100 மீட்டருக்கும் குறைவாக மிக மோசமான நிலையில் இருந்ததால் ஒரு உள்நாட்டு விமானம் புறப்பட முடியாமல் ரத்து செய்யப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 120 ரயிகள் பனியால் தாமதமானதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வடக்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்,
'பனி மூட்டம் காரணமாக இன்று அதிகாலை வரை 43 ரயில்கள் திட்டமிட்டபடி இயங்கவில்லை. 120 ரயில்கள் மூன்று மணி நேரத்துக்கும் மேல் தாமதமானது. சில ரயில்கள் 24 மணி நேரம் கூட தாமதமாக வந்தன.
சுமார் 45 தடங்களில் ரயில்கள் இயக்க முடியாத அளவுக்கு பனி படர்ந்திருந்தது' என்றனர்.












Click it and Unblock the Notifications