அரசு மருத்துவமனையில் 'டிவி' வெடித்து தீ விபத்து: நோயாளிகள் தப்பினர்
ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனையில் பயங்கர சத்தத்துடன் தொலைக்காட்சிப் பெட்டி வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது. நோயாளிகள் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் காசநோய் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு காச நோய் துணை இயக்குநர் அலுவலகம் மற்றும் காசநோய் உள் நோயாளிகள் வார்டும் உள்ளன.
அங்குள்ள வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பார்ப்பதற்காக வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி பெட்டி நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து அந்தப் பகுதியே தீப்பற்றி எரிய தொடங்கியது.
இதனால் வார்டு முழுவதும் பெரும் புகை மண்டலமாக மாறியது. ஈரோடு தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.
விபத்து நடந்த வார்டு பகுதியில் வேறு பொருட்கள் எதுவும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உள்நோயாளிகள் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டதால் விபத்தில் இருந்து தப்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications