ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தி கொலை-உடல் எரிப்பு: மாஜி அமைச்சர் மகனிடம் விசாரணை
சென்னை: பணப் பிரச்சனையில் சென்னையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தி, கொலை செய்யப்பட்டு அவரது உடல் ஆந்திர வனப் பகுதியில் எரிக்கப்பட்டுள்ளது.
இந்த படுகொலை தொடர்பாக முன்னாள் அதிமுக அமைச்சர் நடேசன் பால்ராஜின் மகன் உள்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை தியாகராய நகர் தெற்கு போக் ரோடைச் சேர்ந்த மணியன் (65) ராயப்பேட்டையில் வின் பில்டர்ஸ் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தார்.
மேலும் வெளிநாடுகளைச் சேர்ந்த சில பண முதலைகளிடம் பணம் பெற்று தமிழகம், ஆந்திராவில் பெரும் அளவில் வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலையும் செய்து வந்தார். கடன் வாங்கிக் கொடுக்க இவர் 10 சதவீதம் கமிஷன் வாங்கி வந்தார்.
கடந்த 7ம் தேதி இரவு தனது நிறுவனத்தில் இருந்து கிளம்பினார். ஆனால், வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மனைவி பார்வதி மறுநாள் மைலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
பார்வதியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அதிமுக முன்னாள் அமைச்சர் நடேசன் பால்ராஜின் மகன் குமரகுரு, ஒரு பெண் மற்றும் 2 பேர் சில நாட்களுக்கு முன் வீட்டிற்கு வந்து தனது கணவருடன் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்ததாத் தெரிவித்தார்.
இது குறித்து போலீசார் விசாரித்தபோது மணியனுக்கும் இந்த 4 பேருக்கும் இடையே வெளிநாட்டில் இருந்து பணம் பெறுவதில் தகராறு ஏற்பட்டது தெரிய வந்தது. சில மாதங்களுக்கு முன்பு அந்த 4 பேரும் புதிதாக தொழில் தொடங்க ரூ. 1 கோடி பணம் வாங்கி தருமாறும் மணியனிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு சம்மதித்த மணியன், சில லட்சங்களை கமிஷனாக முன் பணம் வாங்கினார். ஆனால் சொன்னபடி மணியனால் வெளிநாட்டில் இருந்து பணம் பெற்றுக் கொடுக்க இயலவில்லை.
இதையடுத்து 4 பேரும் பணத்தைத் திருப்பிக் கேட்க, மணியன் தர மறுக்க தகராறு ஏற்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து இந்த 4 பேரில் பூபதி மற்றும் லீமாரோஸ் ஆகிய இருவரை போலீசார் முதலில் நேரில் அழைத்து விசாரித்தனர்.
அப்போது கடந்த 7ம் தேதி இரவு மணியனை கடத்திச் சென்று, கொலை செய்து விட்டதாகத் தெரிவித்தனர்.
மணியனை கடத்திக் கொண்டு 4 பேரும் காரில் சென்றபோது, இரவு முழுக்க அவரிடம் பணம் கேட்டு அடித்துள்ளனர். திருவள்ளூர் அருகே கார் சென்று கொண்டிருக்கும் போது 4 பேரும் சேர்ந்து மணியனின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.
8ம் தேதி அதிகாலையில் உடலை தமிழகம்-ஆந்திர எல்லையில் உள்ள சத்தியவேடு பகுதிக்கு கொண்டு சென்று உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு சென்னை திரும்பி விட்டனர்.
முக்கால் பகுதி எரிந்த நிலையில் கிடந்த மணியன் பிணத்தை கைப்பற்றிய ஆந்திர போலீசார் அது யார் என்று விசாரித்தும் ஏதும் தெரியாததால் உடலை புதைத்து விட்டனர்.
இந் நிலையில் பூபதியும், லீமாரோசும் கொடுத்த தகவல்களின் பேரில் மைலாப்பூர் போலீசார் சத்தியவேடு சென்று ஆந்திர போலீசார் உதவியுடன் மணியன் உடலை தோண்டி எடுத்து தடயங்களை சேகரித்தனர். அப்போது அது மணியன் உடல் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.
மணியனைக் கடத்தி்க் கொன்றதில் பூபதி மற்றும் லீமாரோஸ் தவிர மற்ற இருவரில் ஒருவர் முன்னாள் அதிமுக அமைச்சர் நடேசன் பால்ராஜின் மகன் குமரகுரு என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது இன்னொரு கூட்டாளியையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications