ஐபிஎல் போட்டி-ஆஸி. வீரர்களுக்கு சிவசேனா எச்சரிக்கை
மும்பை இந்தியர்கள் மீதான இனவெறித் தாக்குதல்கள் ஆஸ்திரேலியாவில் ஓய்ந்த பாடில்லை. எனவே இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் விளையாடுவது அனுமதிக்க மாட்டோம். தடுத்து நிறுத்துவோம் என சிவசேனா செயல் தலைவர் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார்.
ஐ.பி.எல். 3வது போட்டித் தொடர் மார்ச் 12ம் தேதி மும்பையில் தொடங்குகிறது. ஆனால் சிவசேனா ரூபத்தில் ஐபிஎல் போட்டிக்கு தலைவலி எழுந்துள்ளது.
இதுவரை மராத்தியர்கள் என்ற கொள்கையுடன் செயல்பட்டு வந்த சிவசேனா தற்போது இந்தியர்கள் என்ற உணர்வைப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து இந்தியர்களை இனவெறியுடன் ஆஸ்திரேலியர்கள் தாக்கி வருவதால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மும்பையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க விட மாட்டோம் என சிவசேனா எச்சரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை விளையாட விடக் கூடாது என்று சாம்னா பத்திரிக்கையில் பால் தாக்கரே தலையங்கம் எழுதியிருந்தார்.
தற்போது சிவசேனாவின் செயல் தலைவரும், தாக்கரேவின் மகனுமான உத்தவ் தாக்கரேவும் இதே எச்சரிக்கையை முன்மொழிந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
இந்திய பிரிமியர் லீக் போட்டிகள் தேசப்பற்றுள்ளதாக அமைய வேண்டும். ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல்கள் நடந்து வருகிறது. எனவே அந்த நாட்டு வீரர்கள் இங்கே வந்து ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவதை அனுமதிக்கக்கூடாது.
பால் தாக்கரே உத்தரவுக்கு இணங்க, நாங்கள் ஆஸ்திரேலிய வீரர்களை இங்கே விளையாட அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார் உத்தவ்.
இந்தி பேசுவோரையும், பிற மொழிக்காரர்களையும் தாக்குவது மட்டும் 'இனவெறி இல்லாத தாக்குதல்கள்' என்று சிவசேனா கூற வருகிறதா...?












Click it and Unblock the Notifications