கலைஞர் காப்பீட்டு திட்ட நோயாளிகளிடம் அலட்சியம்-28 மருத்துவமனைகள் சஸ்பெண்ட்!
சென்னை: கலைஞர் காப்பீட்டுத் திட்ட பயனாளிகளைப் புறக்கணித்த 28 மருத்துவமனைகள் இந்த திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
கலைஞர் காப்பீட்டு திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் ஒரு கோடிக்கு மேலான ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டது. இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற லட்சக்கணக்கான மக்கள் விருப்பத்துடன் முன் வருகின்றனர்.
நகர்ப்புற மக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
12 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், 56 தனியார் மருத்துவமனைகள் இத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்டு கலைஞர் காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றன.
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் இந்த மருத்துவமனைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
காப்பீட்டு திட்டப் பயனாளிகளை இந்த மருத்துமனைகள் சரியாக கவனிப்பதில்லை என்றும், சிகிச்சையில் தொடர்ந்து அலட்சியம் காட்டுவதாகவும் புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.
இதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் கடும் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டன. இதில் 28 தனியார் மருத்துவமனைகள் மிகவும் மோசமான செயல்படுவதாகவும், பயனாளிகளை அவமானப்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டது. உடனடியாக அந்த 28 ஆஸ்பத்திரிகளையும் கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்டார் ஹெல்த் நிறுவன மருத்துவ இயக்குனர் டாக்டர் பிரகாஷ் கூறுகையில், "கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் நோயாளிகளுக்கு முழுமையாக சிகிச்சை மேற்கொள்ளாத 28 தனியார் மருத்துவமனைகள் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. பயனாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்காத இந்த மருத்துவமனைகளுக்கு ஏற்கனவே எச்சரிக்கை கொடுத்தோம். அவர்கள் அளித்த விளக்கம் திருப்தியாக இல்லாததால் இந்த மருத்தவ சேவையில் இருந்து நீக்கப்பட்டுவிட்டன" என்றார்.
காப்பீட்டு திட்டம் மூலம் பெருமளவு பணம் சம்பாதிக்கும் இந்த மருத்துவமனைகள், பயனாளிகளுக்கு குறைந்த அளவை சிகிச்சைகள் செய்துள்ளன. மேலும் அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு அதைச் செய்யாமல் வெறும் மருந்து மாத்திரைகளைக் கொடுத்தே ஏமாற்றி வந்துள்ளன.


Click it and Unblock the Notifications
