ராஜினாமா செய்யாத எம்பி-எம்எல்ஏக்களை அடித்து உதையுங்கள்: ராவ்
ஹைதராபாத்: தெலுங்கானா போராட்டத்துக்காக தங்கள் பதவியை ராஜினாமா செய்யாத எம்.எல்.ஏ, எம்.பி மற்றும் அமைச்சர்களை பொதுமக்கள் அடித்து உதைக்க வேண்டும் என்று டி.ஆர்.எஸ் கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் பேசினார்.
ஆந்திர மாநிலம் மேதக் மாவட்டம் ராமசந்திராபுரம் பகுதியில் தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் பேசுகையில்,
'தெலுங்கானா தனி மாநில கோரிக்கைக்காக தெலுங்கானா பகுதியை சேர்ந்த காங்கிரஸ் மற்றும் அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் காங்கிரஸ் அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
அதன் மூலம் போராட்டத்தை தீவிரப்படுதத் வேண்டும். ராஜினாமா செய்யாத அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்களை பொதுமக்கள் அடித்து உதைக்க வேண்டும்.
தனி தெலுங்கானா மாநிலம் அமைவதற்காக 220 பேர் தங்கள் உயிர்களை தியாகம் செய்துள்ளனர். அவர்களின் உயிரை விட இவர்களுக்கு பதவி பெரிதாக போய்விட்டதா?
யார் ராஜினாமா செய்தாலும் தனி தெலுங்கானா அமைந்த பிறகு அவர்களை அதே இடத்தில் நிறுத்தி ஜெயிக்க வைக்கிறோம்.
எங்கள் கட்சிக்கு 10 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அந்த இடங்களையும் விட்டுத்தருகிறோம். எப்படியாவது தெலுங்கானா அமைவதற்கு ஆதரவு கொடுங்கள்.
தெலுங்கானாவை உடனே அமைத்துத் தரக்கோரி போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம். இந்த போராட்டத்தால் தெலுங்கானா பகுதியே பற்றி எரியும். அதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல.
ஆந்திரா, ராயலசீமா பகுதியை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தனி தெலுங்கானா அமைவதை தடுத்து நிறுத்தி விட்டார்கள். நாமும் அது போல் போராட வேண்டும்' என்றார்.












Click it and Unblock the Notifications