மனைவியின் தங்கையை கொல்ல முயன்ற கணவன் கைது
சென்னை: இரண்டாம் தாரமாவதற்கு ஒப்புக்கொள்ள மறுத்த மனைவியின் தங்கையை உயிருடன் தீ வைத்து கொலை செய்ய முயன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, தேனாம்பேட்டையைச் சேர்ந்த முருகனின் மகள் காயத்ரி (23). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர் செழிவாணன் (32) என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
திருமணத்துக்கு பிறகு காயத்ரிக்கு அடிக்கடி உடல்நலக் கோளாறு ஏற்பட்டு வந்தது. அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் காயத்ரி மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொண்டார்.
இதனால் வெறுப்படைந்த செழிவாணன் காயத்ரியின் தங்கை, ஆனந்தியை (18) திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் ஆனந்தியின் பெற்றோர் சம்மதிக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த செழிவாணன், இன்று அதிகாலை 3 மணியளவில் மண்ணெண்ணெய் கேனை எடுத்துக்கொண்டு ஆனந்தியின் வீட்டுக்கு சென்றார்.
அங்கு தூங்கிக்கொண்டிருந்த ஆனந்தியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். அலறிய ஆனந்தியை காப்பாற்றப் போன தாய் செல்வி மீதும் தீ பரவியது.
அருகில் இருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீடு புகுந்து தீவைத்த செழிவாணன் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications