ராகுல் காந்தியை நம்பலாம்: பில்கேட்ஸ் 'சர்டிஃபிகேட்'

மைக்ரோ சாஃப்ட் நிறுவன தலைவர் பில் கேட்ஸ், சர்வதேச தொண்டு நிறுவனமான பில் அண்ட் மிலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை உருவாக்கி அதன் இணை தலைவராகவும் உள்ளார்.
1994ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அறக்கட்டளையின் மொத்த மதிப்பு 3,717 கோடி டாலர். அறக்கட்டளை மூலம் உலகம் முழுவதும் இதுவரை 2,100 கோடி டாலர் உதவித் தொகை அளிக்கப்பட்டுள்ளது.
பில்கேட்ஸ் கடந்தாண்டு இந்திய பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது தனது அனுபவங்கள் குறித்து அறக்கட்டளையின் ஆண்டுமலரில் எழுதியுள்ளார்.
அதில், 'இந்தியாவின் வட மாநிலங்களில் சுகாதாரசூழல் மிக மோசமாக உள்ளது. அரசு மிக அதிக அளவில் சுகாதாரம், குடும்ப நலத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்காக அரசு கூடுதல் நிதியும் ஒதுக்கி செலவிடுகிறது. ஆனால் அரசு ஒதுக்கும் நிதி பயனாளிகளுக்கு முழுமையாக போய் சேருவதில்லை.
பொதுவாக பொதுமக்கள் சுகாதாரத்துக்காக நன்கொடை அளிப்பவர்களிடம் சராசரியான அரசியல்வாதிகள் இந்த விஷயத்தை மறைத்துவிடுவார்கள்.
நலத்திட்ட நிதி, மக்களுக்கு போய் சேரவில்லை என்பது தெரிந்தால் நன்கொடை கிடைக்காது என நினைத்து தவறான தகவல்களின் மூலம் நம்பிக்கையை பெற முயற்சிப்பார்கள்.
ஆனால், ராகுல்காந்தி இந்த பிரச்னைகளை நம்மிடமே பகிர்ந்துகொள்கிறார். ஒதுக்கப்படும் நிதி முழுவதும் பயனீட்டாளர்களைச் சென்றடையவில்லை என்பதை அவர் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார்.
அதோடு, சுகாதாரத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி முற்றிலும் முறையாக செலவிடப்பட என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனையும் அவரிடம் உள்ளது. இதனால் அதிக நன்கொடை அளிக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது.
சுகாதாரத்துறையில் அளிக்கப்படும் நன்கொடைகள் நல்லமுறையில் உபயோகமாக செலவிடப்படும் என்ற நம்பிக்கையை நன்கொடையாளர்களுக்கு ஏற்படுத்தும் இளம் தலைமுறை தலைவர்களில் ராகுலும் ஒருவர்.
பெண்களை அதிகம் உள்ளடக்கிய கிராம குழுக்கள் எந்த அளவுக்கு திறம்பட, திட்டப் பணிகளை செயல்படுத்துகின்றன என்பதை தெளிவாக ராகுல் விளக்கினார். இதனால் நன்கொடை அளிப்பதற்கு ஏற்ற தளம் அமைக்கப்படுகிறது.
எச்ஐவி, எய்ட்ஸ் தடுப்பு குறித்து மட்டுமே அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் தீவிரம் காட்டியபோது, இந்தியாவில் மருத்துவ வசதி அடுத்த 10 ஆண்டுகளில் நிச்சயம் மேம்படும் என்ற உத்தரவாதத்தை ராகுல் அளித்துள்ளார்.
மிகப் பெரிய நிதி நெருக்கடி ஏற்பட்டு சர்வதேச பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இந்த நிலை முடிந்ததாகக் கருதினாலும் சர்வதேச அளவிலான பொருளாதாரம் இன்னமும் பலவீனமாக இருக்கிறது என்பதுதான் உண்மை.
தற்போது ஏற்பட்ட இந்த பாதிப்புக்கு உலக சமுதாயம் மிகப் பெரிய அளவில் இழப்பீடு செய்ய வேண்டியிருக்கும்.
பொருளாதார தேக்க நிலை நிலவும் சூழலிலும், வரும் ஆண்டுகளில் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவுக்கு இருக்கும் என்று நம்புகிறேன்.
அறிவியல் ஆராய்ச்சி ஒருபுறமும் நம்பிக்கையூட்டும் இளம் அரசியல் தலைவர்களின் தலைமையிலும் உலகிலுள்ள ஏழை மக்களின் வாழ்க்கை மேம்படும்.
தற்போது புவி வெப்பமடைவதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியம். நிலக்கரிக்கு மாற்றாக குறைந்த விலையில் மின் சக்தி எடுப்பதற்கு வழிவகைகளைக் கண்டு பிடிக்க வேண்டும்.
வரும் காலத்தில் வளிமண்டலத்தை பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசர அவசியமாகும். இத்தகைய தொழில்நுட்பத்துக்கு உலகம் முழுவதும் சிறந்த வரவேற்பு கிடைக்கும்.
இது தொடர்பான ஆராய்ச்சிக்கு அரசுகள் அதிக அளவில் நிதி ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பில்கேட்ஸ்.












Click it and Unblock the Notifications