செயலாளரின் பேரன் மாயம்-கண்டுபிடிக்கும் வரை போராட்டத்தில் குதித்த முதல்வர்!

முதல்வர் கருணாநிதியின் தனி உதவியாளராக பல காலமாக இருப்பவர் சண்முகநாதன். முதல்வருக்குப் பின்னால் நிழல் போல எப்போதும் காணப்படுவார் சண்முகநாதன். கையில் பேடும், பேனாவுமாகத்தான் இவரைப் பார்க்க முடியும். தற்போது முதல்வரின் செயலாளராகவும் இருக்கிறார்.
இவரது மகன் அருண். அருணின் மகன் சூர்யா. 8 வயதாகும் சூர்யா, நேற்று தனது வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தான். ஆனால் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த தகவல் முதல்வர் காதுகளுக்குச் சென்றது.
இதையடுத்து உடனடியாக சண்முகநாதன் வீட்டுக்கு விரைந்தார் முதல்வர். அங்கிருந்தபடி காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளை வரவழைத்தார்.
உடனடியாக சூர்யாவைக் கண்டுபிடித்துக் கொண்டு வர வேண்டும். அதன் பிறகுதான் நான் வீட்டுக்குக் கிளம்பிப் போவேன் என்று கூறி விட்டார்.
செயலாளர் வீட்டில் அமர்ந்தபடி முதல்வர் இவ்வாறு கூறியதைக் கேட்டதும் ஆடிப் போன அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் குதித்தனர். கிட்டத்தட்ட 2 மணி நேர தேடுதலுக்குப் பின்னர் சிறுவன் கிடைத்தான்.
அவனை போலீஸ் அதிகாரிகள் முதல்வரிடம் கொண்டு வந்து ஒப்படைத்தனர். சிறுவனை வாரியணைத்துக் கட்டிக் கொண்ட முதல்வர், எங்கப்பா போனே என்று கேட்டார்.
அதற்கு சிறுவன் சூர்யா, விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது சிலர் வந்து என்னை தூக்கி சாக்குப் பையில் போட்டுக் கொண்டு சென்றதாக தெரிவித்தான்.
சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிச் சென்றார் முதல்வர். இந்தக் கடத்தல் தொடர்பாக முழு விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கைது செய்யவும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications