இடஒதுக்கீடு தராவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு: தேசிய லீக்
சென்னை: முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்காவிட்டால் எங்கள் சமுதாயத்தினர் ஒட்டுமொத்தமாக தேர்தலை புறக்கணிப்போம் என தேசிய லீக் கட்சி தலைவர் எம்.பஷீர் அகமது பேசினார்.
நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தேசிய லீக் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
சென்னை, சேப்பாக்கத்தில் தேசிய லீக் கட்சி தலைவர் எம்.பஷீர் அகமது தலைமையில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் பொதுச்செயலாளர் அப்துல் காதர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
அப்போது பஷீர் அகமது பேசுகையில், 'இந்தியாவில் வாழும் 25 கோடி முஸ்லிம் மக்களில் 90 சதவீதம் பேர் பின் தங்கியுள்ளனர். கல்வி-வேலை வாய்ப்பில் மிகவும் பின் தங்கிய சமுதாயமாக முஸ்லிம் சமுதாயம் உள்ளது.
நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை கல்வி, வேலைவாய்ப்பில் அமுல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இல்லாவிட்டால் வரும் சட்டசபை தேர்தலை ஒட்டு மொத்த முஸ்லிம்கள் புறக்கணிக்க நேரிடும்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லிபரான் கமிஷன் 68 பேரை குற்றவாளிகளாக அறிவித்துள்ளது. அவர்களை கைது செய்ய வேண்டும்.
தேர்தலில் போட்டியிடவும் அவர்களுக்கு தடை விதிக்க வேண்டும். அதே இடத்தில் பாபர் மசூதியை கட்ட வேண்டும்' என்றார்.












Click it and Unblock the Notifications